sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை (22)

/

எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை (22)

எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை (22)

எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை (22)


PUBLISHED ON : ஜூலை 12, 2015

Google News

PUBLISHED ON : ஜூலை 12, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி மற்றும் எம்.ஆர்.ராதா கூட்டணியில் தேவர் எடுத்த படம் அது! படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில், உதயசூரியன் படத்தை உபயோகித்தார் எம்.ஜி.ஆர்., அதில், ராதாவுக்கு உடன்பாடில்லை. இது குறித்து அவர் கூறியது...

'உதயசூரியன் தி.மு.க.,வின் சின்னம்; அதை ஏன் நான் நடிக்கும் காட்சியில் கொண்டு வரணும்... என் அருகில் உதயசூரியன் இருப்பது மாதிரி சீன் வைக்காதே... லவ் சீனில் அதை வை. இல்லாவிட்டால், இதே போன்று நானும் என் கட்சி சின்னத்தை வைக்க வேண்டி வரும்...'

'அண்ணே... சூரியன் எல்லாருக்கும் பொதுண்ணே...' என்றார் எம்.ஜி.ஆர்.,

'சூரியன நானும் கும்பிடறேன்; ஆனா, அதை என் பின்னால் இருப்பது போல் வைக்காதே...'

'சரி... அந்த காட்சிய எடுத்துடறேன்...'

'அதெல்லாம் முடியாது; இப்பயே எங்கிட்ட பிலிமை கொடு...'

இதன் எதிரொலியாக, அடுத்த படத்தில் என்னை டம்மியாக்கி விட்டார் எம்.ஜி.ஆர்., அதுவும் தேவர் படம் தான். படத்தின் பெயர், தொழிலாளி!

'நான் கேரக்டர் ஆக்டர்; என்னை பொம்மை மாதிரி உட்கார வைக்கலாமா?' என்று கேட்டேன்.

'இப்படம் போகட்டும்ண்ணே... அடுத்து என் கதையில நடிங்கண்ணே...' என்று சமாதானப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.,

பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்துக்காக, 1964ல் பூஜை போடப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் கே.என்.என்.வாசு; காங்கிரஸ்காரர். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை; ஊரில் நன்கு வாழ்ந்த இவர், ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்து, சென்னைக்கு வந்தவர், தன் நெடுநாள் சிநேகிதர்களான கிருஷ்ணன் - பஞ்சுவின் உதவியை நாடினார். அவர்கள் வாசுவுக்கு ஒரு படத்தை இயக்கிக் கொடுப்பதாக கூறினர். கிருஷ்ணன் - பஞ்சு மூலமாக, படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் எம்.ஜி.ஆர்.,

படத்தின் தயாரிப்பாளர் வாசு என்றாலும், அவருக்குப் பண உதவி செய்ய ஆள் வேண்டுமே... கிருஷ்ணனும் - பஞ்சுவும், ராதாவிடம், வாசுவின் நிலையை எடுத்துக் கூறினர். ராதாவும், தன்னால் இயன்ற அளவு படத்திற்கு முதலீடு செய்வதாகவும், சம்பளமின்றி நடித்துக் கொடுப்பதாகவும் கூறினார்.

சொன்னபடியே படத்துக்காக, ஒரு லட்ச ரூபாய் வரை கொடுத்தார். படம், டிச., 1966ல் வெளியானது.

'காமராஜர் உங்களப் பாக்கணும்ன்னு, இன்னிக்கு இரவு, 2:00 மணிக்கு அவர் வீட்டுக்கு வரச் சொன்னார்...' என்று ராதாவிடம் சொன்னார் கே.கே.என்.வாசு.

இரவில், காமராஜரை சந்திக்க சென்றார் ராதா. தனக்காகத் தேர்தல் வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டார் காமராஜர். அதற்கு ஒப்புக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிய ராதாவிடம், 'தேர்தல் செலவுக்காக, 10,000 ரூபாயை காமராஜர் உங்களிடம் கொடுக்கச் சொன்னார்...' என்று ஒரு செக்கை நீட்டினார் வாசு.

'இதை அவரிடமே கொடு; ஈ.வெ.ரா.,வின் கட்டளைக்காகத் தான் காமராஜருக்கு வேலை செய்கிறேனே தவிர, பணத்துக்காக அல்ல. தேர்தல் வேலை செய்வதற்கு பணம் வாங்கினார் என்ற கெட்ட பெயர் எனக்கு வேண்டாம்...' என்று கூறி, செக்கை வாங்க மறுத்து விட்டார் ராதா.

காமராஜர் மீது எப்போதுமே ராதாவுக்கு தனி பிரியம் இருந்தது. ராதாவின் மேடைப் பேச்சுக்களாலும், நாடகங்களாலும் அடிக்கடி கலகங்கள், கலவரங்கள் மூண்டன. அப்போதெல்லாம் ராதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுத்தவர் காமராஜர் தான்.

'நாடக மேடைகளில் உங்களையும், நம் கட்சியையும் கண்டபடி திட்டிப் பேசுவதுடன், உங்கள யாரோ கொலை செய்ய திட்டமிடுவதாகவும் கூறுகிறார் ராதா...' என்று காமராஜரிடம், கட்சிக்காரர்கள் புகார் கொடுத்தனர். அதற்கு காமராஜர், 'அவர் சொல்றதுல நாம திருத்திக்கிற விஷயங்கள் இருந்தால், திருத்திக்கணும்; இதற்காக ஆத்திரப்படக்கூடாது. பொது வாழ்க்கையில சமூக விரோதிகளால் உயிருக்கு ஆபத்து என கூறப்படுவது எல்லாம் சகஜம்...' என்று கூறி, அனுப்பி விட்டார்.

இத்தகவல் ராதாவுக்கு போனது.

'யாரோ பேசியது தான்; ஆனால், உண்மையிலேயே அப்படி ஏதாவது நடந்து விட்டால் என்ன செய்வது...' என்று நினைத்தார் ராதா.

இவ்விஷயம், 'நாத்திகம்' என்ற பத்திரிகையிலும் வெளி வந்தது. இது குறித்து ராதா சொன்னது...

'இச்செய்தி பற்றி என்னிடம் பலர் கேட்டு விட்டனர். இந்த மாதிரி வார்த்தைகளை ஒரு ஸ்டுடியோவுக்குள்ள கூத்தாடிப் பசங்க பேசினாங்கன்னா, அதை நாம சும்மா விடறதாயில்ல...' என்று கூறினேன். பின், உடனே திருச்சிக்கு புறப்பட்டு ஈ.வெ.ரா.,வைப் பார்த்து, 'என்ன ஐயா... இப்படிச் சதி நடக்கிறதே...' என்றேன்.

'நீங்க போய் இதுல விழுந்துடாதீங்க...' என்றார் ஈ.வெ.ரா.,

'நான் கஜபதியை அழைத்து, காமராஜரைக் கொலை செய்ய சதி என்பதற்கான ஆதாரங்களை கொண்டு வரும்படி சொன்னேன். பின், என்னிடம் சிலர், 'காமராஜரைக் கொல்லச் சதி நடந்ததாக, நான் தான் செய்தி கிளப்பி விட்டேன்...' என்று சொல்லச் சொல்லி அந்தப் பேச்சை வாபஸ் வாங்கக் கூறினர்.

'சினிமா வாய்ப்பை வாபஸ் வாங்குற மாதிரியும், கொடுத்த பணத்தை வாபஸ் வாங்குற மாதிரியும் இந்தச் செய்தியை வாபஸ் வாங்குன்னு சொல்றீங்களே... முடியாது போங்க'ன்னு சொல்லி அனுப்பி விட்டேன்...' என்று கூறியுள்ளார்.

அதன்பின், எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்து, ராதாவிற்கு எதிராக வழக்கு போடப்பட்டு, சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மத்திய சிறைச்சாலைக்குள் நுழைந்தார் ராதா. அங்கே ஓர் அறையில், ஆங்கிலேய அதிகாரிகளின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன. அவற்றோடு திருவள்ளுவர் படமும் மாட்டப்பட்டிருந்தது.

'அடடே திருவள்ளுவரு... இவரு எப்ப ஜெயிலுக்கு வந்தாரு?' என்று ராதா கேட்க, அதிகாரிகள் சிரித்து விட்டனர்.

ராதாவை கையெழுத்துப் போடக் கூறினர். பேனாவை வாங்கி, மிகவும் சிரமப்பட்டு கையெழுத்தை வரைந்தார்.

'என்னப்பா இது... இவ்வளவு சிக்கலா இருக்கு... இதை தினமும் போடணுமா...' என்றார்.

ராதா சிறையில் இருந்த சமயம், ஆக., 26, 1968ல் ராதாவின் மகள் ரஷ்யாவுக்கும், டாக்டர் சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. மணமக்கள் சிறைக்கு வந்து ராதாவின் வாழ்த்துகளைப் பெற்றுச் சென்றனர். காமராஜர் சொல்லித் தான் ராதா, எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி பரவியதால், திருமணத்துக்கு தலைமை தாங்காமல் வெறுமனே கலந்து கொண்டார் காமராஜர். ஈ.வெ.ரா.,வின் தலைமையில் திருமணம் நடந்தது.

திரையுலகிலிருந்து ஜெமினி கணேசனும், சாவித்திரியும் மட்டுமே வந்திருந்தனர்.

'எம்.ஆர்.ராதா சுட்டது எம்.ஜி.ஆர்., என்ற புகழ் பெற்ற நடிகரை! ஜெயிலில் இருக்கும் பெரும்பாலானோர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள். ராதாவுக்கு முதல் வகுப்பு கொடுக்கவில்லை என்றால், அங்கே அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, ஏதாவது ஒரு சலுகையின் அடிப்படையில், இதை சட்டத்துக்குட்பட்டுச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்...' என்று நீதிபதி சிங்காரவேலுவுக்கு கடிதம் எழுதினார் ஈ.வெ.ரா.,

ராதாவின் வழக்கறிஞர் எம்.டி.வானமாமலை இதை செயல்படுத்த, ராதாவுக்கு முதல் வகுப்பு கிடைத்தது.

வயதானவர் என்ற காரணத்தினால், ராதாவுக்கு சிறையில் எளிய வேலைகளே கொடுக்கப்பட்டன. அவரது நாடகங்களுக்காக எத்தனையோ இரவுகள், தெருத் தெருவாக சென்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார். இப்போது, சிறையில் கவர் ஒட்டினார்.

அவ்வப்போது கைதிகளின் உடல் நிலையை பரிசோதிப்பர் மருத்துவர்கள். ஒரு நாள், ராதாவிடம், 'உங்களுக்கு என்ன பிரச்னை?' என்று கேட்டார் டாக்டர்.

டாக்டரை விலகச் சொன்ன ராதா, தரையில் எச்சில் துப்பி, 'இது தான் பிராப்ளம்...' என்றார்; எச்சிலோடு, ரத்தமும் கலந்திருந்தது.

ராதாவின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர், 'பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல; சாதாரண விஷயம் தான்...' என்றார்.

நன்னடத்தை காரணமாகவும், சிறையில் அவர் செய்த வேலை காரணமாகவும் ராதாவின் தண்டனைக் காலம் நான்கு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

'இன்று உங்களுக்கு விடுதலை. கிளம்புங்க...' என்று சொன்னார் சிறை அதிகாரி. அப்போது தோளில் துண்டோடும், கையில் வாளியுடனும் நின்றிருந்தார் ராதா.

'வெளியதானே போகப் போறேன்... என்ன அவசரம் குளிச்சிட்டு நிதானமா போறேன்...' என்று கூறி, குளிக்கச் சென்றார் ராதா.

தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

- முகில்







      Dinamalar
      Follow us