
சொந்த படமெடுத்து நொந்து போன ஆர்யா!
தன் தம்பி சத்யாவை வைத்து, அமரகாவியம் படத்தை எடுத்த ஆர்யாவுக்கு, அப்படம் கையை கடித்த நிலையில், தான் தயாரித்து, நடித்த, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படமும், ஊத்திக் கொண்டது. அத்துடன், மீகாமன், புறம்போக்கு மற்றும் யட்சன் என, அவர் நடித்த படங்கள் வரிசையாக, 'ப்ளாப்' ஆகி விட்டதால், படம் தயாரித்து பட்ட கடனை அடைப்பதற்காக, சில மேல் தட்டு இயக்குனர்களுக்கு போன் போட்டு, தன்னை வைத்து படமெடுக்குமாறு கேட்டு வருகிறார். ஆனாலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவருக்கு வரவிருந்த பட வாய்ப்பும், இப்போது, ஜெயம் ரவிக்கு போய் விட்டது. இதனால், ஜாலிமேன் ஆர்யா, காலியாகி கிடக்கிறார்.
— சினிமா பொன்னையா
விஜய்யை இயக்கும் எஸ்.ஜே.சூர்யா!
விஜய் நடித்த, குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில், இசை என்ற படத்தை இயக்கி, நடித்திருந்தார். தொடர்ந்து சில படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கும் அவர், மீண்டும், விஜய்யிடம் ஒரு கதையைக் கூறி, கால்ஷீட் வாங்கி விட்டார். புலி படத்தை தொடர்ந்து, ராஜாராணி அட்லி இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய், அதற்கடுத்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார். குஷி படத்தில் விஜய் ஜோதிகா சம்பந்தப்பட்ட காதல் ரொமான்சை படமாக்கிய அவர், இப்புதிய படத்தில், ஆக் ஷன் கலந்த கதையில் விஜய்யை இயக்குகிறார்.
— சி.பொ.,
கிளாமருக்கு மாறிய சிருஷ்டி டாங்கே!
மேகா, டார்லிங் மற்றும் எனக்குள் ஒருவன் உட்பட சில படங்களில் நடித்த போது, 'துளியும் கிளாமர் காட்ட மாட்டேன்...' என்று கறாராக சொல்லி வந்த சிருஷ்டி டாங்கே, இப்போது, விஜய் வசந்துடன் நடித்துள்ள, அச்சமின்றி படத்தில், தாராளமாக கிளாமர் காட்டி நடித்துள்ளார். அப்புகைப்படங்கள் மீடியாக்களில் வெளியானதை அடுத்து, அரை டஜன் படங்கள், சிருஷ்டிக்கு ஒப்பந்தமாகியுள்ளன. விளைவு, கவர்ச்சி கதவை தாராளமாக திறந்து விட்டுள்ளதன் மூலம், இதுவரை 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்தவர், இப்போது, 40 லட்சம் ரூபாயாக, சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அலை மோதும் போதே கடலாட வேண்டும்.
— எலீசா
தெலுங்கு கதாநாயகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா!
அனுஷ்கா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம், ருத்ரமாதேவி. இப்படத்தில், அனுஷ்காவின் நடிப்பை, பிரபல சினிமா ஜாம்பவான்கள் எல்லாம் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். விளைவு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படம் வெளியான முதல் வாரத்திலேயே, 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது, அங்குள்ள மகேஷ்பாபு, பவன் கல்யாண் படங்களின் மொத்த வசூல்!
தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும், ருத்ரமாதேவி, இன்னும் பல மடங்கு வசூலிக்கும் நிலையில் உள்ளது. இதனால், அனுஷ்கா படத்தின் இந்த வசூலைப் பார்த்து, ஆந்திராவின் முன்னணி கதாநாயகர்கள், பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
மாஜி நடிகையின் வாரிசான, கீ நடிகை, தன் கைவசம் பல படங்கள் இருப்பதால், சம்பளத்தை, 'கிடுகிடு'வென்று உயர்த்தி விட்டார். அத்துடன் மேல் தட்டு நடிகர்களை கைவசப்படுத்தும், முதல்கட்ட முயற்சியாக, அம்மாவை ஏறக்கட்டி விட்டு, அனைத்து விஷயங்களையும் தானே முன்னின்று, 'டீல்' செய்கிறார். அம்மணியின் இந்த அணுகுமுறை பிடித்துப் போன சில கதாநாயகர்கள், தங்கள் படம் மட்டுமின்றி, மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்கவும், நடிகைக்கு சிபாரிசு செய்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் மற்றொரு நடிகரின் ரசிகர்களால் தாக்கப்பட்ட மெரினா நடிகர், அந்த விஷயத்தை பெரிதுபடுத்தவில்லை. காரணம், அவரது அபிமானிகள், 'இந்த உலகத்தில் அடித்தவனை விட, அடி வாங்குபவன் தான் பெரிய ஆளாகியுள்ளான். அதனால், அடிவாங்கிய உனக்கு இனிமேல் மென்மேலும் வளர்ச்சி தான்...' என்றும் கூறியுள்ளனர். அதனால் தான், நடிகர் அமைதியாகி விட்டார்.
பையா நடிகையை கோலிவுட் கண்டு கொள்ளாத போதும், அவர் விடுவதாக இல்லை. அடிக்கடி சென்னைக்கு விஜயம் செய்யும் நடிகை, சில இளவட்ட இயக்குனர்களுக்கு தூண்டில் போட்டு வருகிறார். அவ்வகையில், சமீபத்தில், 'ஹிட்' கொடுத்த மதுரைக்கார இயக்குனருடன், 'மீட்டிங்' போட்ட நடிகை, அவரது அன்புக்கு பாத்திரமாகி, அடுத்து, அவர் இயக்கும் படத்தை கைப்பற்றியுள்ளார்.
சினி துளிகள்!
* மணிரத்னம் இயக்கும் கோமாளி படத்தில், இரு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
* ரஜினி முருகன் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது.
* தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து கொண்டிருக்கும் தோழா படத்தில், கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார் தமன்னா.
அவ்ளோதான்!

