
''சிறந்த நல்லாசிரியருக்கான விருது, இந்த ஆண்டு மேடம் ஜெயந்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது,'' என்று அறிவிக்கப்பட்டதும், கைதட்டல்கள் காதைப் பிளந்தது.
'கடவுளே... என் பிள்ளைக்கு ஏன் இதுபோல் ஒரு பிறவிய கொடுத்தே...' என்று தினம் தினம் அழுத என் அம்மாவுக்கு, இந்த விருதும், கைதட்டலும், ஆனந்தத்தைக் கொடுக்க, அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர், அருவி போல் கொட்டியது.
மேடையில் இருந்து இறங்கினேன். அதுவரை கை கொடுக்க தயங்கியவர்கள் கூட, என் கைப்பிடித்து பாராட்டினர்.
அவர்கள் பாராட்டை பெற்றுக் கொண்டே, அம்மாவை நோக்கி வந்தேன். அவளின் பாதம் தொட்டு வணங்கி, குழந்தை அமுதாவை வாரி அணைத்து முத்தமிட்டேன். அருகில் அமர்ந்திருந்த வேறொரு பள்ளியின் தலைமை ஆசிரியர், ''கடந்த அஞ்சு வருஷமா எங்க பள்ளிதான் முதலிடத்தையும், நல்லாசிரியருக்கான விருதையும் பெற்று வந்தது; இந்த ஆண்டு, அதை நீங்க முறியடிச்சுட்டீங்க... வாழ்த்துகள்,'' என்று கூறி, கையை நீட்டியவர், உடனே கையை இழுத்துக் கொண்டார்.
''பரவாயில்ல சார்... கையக் கொடுத்தா கற்பு போயிடாது...'' என்றேன்.
''என்னை மன்னிச்சுடும்மா... நீ திருநங்கைங்கிறதால தான் கையைக் கொடுக்க தயங்கினேன்,'' என்று வருத்தம் தெரிவித்தார்.
பாராட்டு விழா முடிந்ததும், அம்மாவையும், அமுதாவையும் அழைத்துக் கொண்டு, காரில் ஏறினேன். 10 ஆண்டுகளாக என் கையைப் பிடிக்காத அம்மா, இன்று என் கையைப் பிடித்து, காரில் ஏறியது, பரவசமாக இருந்தது. வீட்டு வாசலில் என்னையும், அமுதாவையும் நிறுத்தி, ஆனந்தக் கண்ணீரோடு ஆரத்தி எடுத்தாள் அம்மா.
என் நினைவுகள், 10 ஆண்டுகள் பின்நோக்கி சென்றது.
இன்றைய ஜெயந்தியான நான், அன்று ஜெயராமன். காஞ்சிபுரத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார் அப்பா. அம்மா, வீட்டு வேலை நேரம் போக தறி நெய்வார். நான், பள்ளியிலும், அக்கா கல்லூரியிலும் படித்துக் கொண்டிருந்தோம். என்னையும், அக்காவையும் பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று அப்பா ரொம்பவும் ஆசைப்பட்டார். நாங்களும் நன்றாகவே படித்தோம்.
அமைதியாகவும், ஆனந்தமாகவும் போய்க் கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில், அக்கா வடிவில் தலைகுனிவு வந்தது. கல்லூரியில் படிக்கும் ஒருவனுடன், வெளியிடங்களிலும், சினிமா தியேட்டரிலும் அக்கா, சுற்றிக் கொண்டிருப்பதாக, என் நண்பன் கூறினான். இதைப் பற்றி அக்காவிடம் கேட்டதற்கு, ஏதேதோ கூறி மழுப்பினாள்.
அதனால், அக்காவுக்கு தெரியாமல் அவளை உளவு பார்க்க ஆரம்பித்தேன். சென்னையைச் சேர்ந்த அவன், வசதியான குடும்பத்தை சேர்ந்த பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்றும், அவனின் அப்பா, பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருவதும் தெரிய வந்தது. கல்லூரியில், ரவுடி என பேர் எடுத்திருந்த அவன், எப்படியோ அக்காவை தன் காதல் வலையில் விழ வைத்து விட்டான்.
இதைப் பற்றி என் பெற்றோரிடம் கூறலாம் என நினைக்கும் போது, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த அக்கா, அவனுடன் ஓடிவிட்டாள். இதயம் பலவீனமாக இருக்கும் அப்பாக்களுக்கு வருமே மாரடைப்பு... அது, என் அப்பாவுக்கும் வந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பின், 'இந்த விஷயம் எப்படி உங்க ரெண்டு பேருக்கும் தெரியாம போயிருக்கும்...' எனக் கேட்டு, நாங்கள் அவரிடம் விஷயத்தை மறைத்து விட்டதாக நினைத்து, என்னிடமும், அம்மாவிடமும் பேச்சைக் குறைத்துக் கொண்டார்.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவு வந்தது. பள்ளியில் எப்போதும் முதல் மாணவனாக வரும் நான், இரண்டாம் இடம் பெற்றிருந்தேன்.
'இது, உன் அக்காவினால் ஏற்பட்ட பாதிப்பு; உன் விருப்பம் என்னவோ அதை செய்...' என்று பெருந்தன்மையாக கூறி விட்டார் அப்பா.
அக்காவின் செய்கையால், அப்பாவிற்கு ஏற்பட்ட ஏமாற்றம், என் மீதான பாசத்தையும் குறைத்து விட்டது. இதனால், மனதுக்குள் அக்காவை, திட்டினேன்.
கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களில், எனக்குள் ஏதோ மாற்றம். அந்த வயதில் பெண்கள் மேல் ஏற்படும் ஈர்ப்பு எனக்குள் ஏற்படவில்லை. ஆனால், பெண்ணைப் போல் இருக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. என் குரலிலும் லேசாக மாற்றம்.
'என்னடா மச்சி...' என்று நண்பர்கள் தோளில் கையைப் போட்டால், கூச்சம் வந்தது. ஆண் நண்பர்களுடன் பேசப் பிடிக்கவில்லை. பெண் பிள்ளைகளிடம் பேசினால், கேலி செய்வார்களோ என்று ஒதுங்க ஆரம்பித்தேன். இதைப் பற்றி, அம்மா அப்பாவிடம் பேசலாம் என்றால் தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது. அதனால், மருத்துவரை அணுகி கேட்ட போது, 'உன் உடலில் திருநங்கைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன...' என்றார்.
'அக்காவினால் ஏற்பட்ட தலைகுனிவிலிருந்து இன்னும் அம்மாவும், அப்பாவும் மீளவில்லை; இந்நிலையில் என்னைப் பற்றி தெரிந்தால், துவண்டு போவார்களே...' என, தனிமையில் அழுதேன்.
ஆனால், என் செயலிலும், குரலிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டுபிடித்து விட்டாள் அம்மா. இது அப்பாவின் காதுக்கு எட்டியதும், 'நீயும் இப்படி ஆகி விட்டாயே...' என்று தலையில் அடித்துக் கொண்டு கீழே விழுந்தவர் தான், பின், எழவே இல்லை.
அதிர்ந்து பேசத் தெரியாத அம்மா, 'உன் அக்கா ஓடிப் போனதைக் கூட தாங்கிக் கொண்டாரே... இப்ப, உன்னை இந்த கோலத்தில பாக்க முடியாமல் ஒரேயடியாக போய்விட்டாரே... என் முகத்துல முழிக்காதே... நீயும் எங்கேயாவது ஓடிப் போயிடு...' என்று கூறி, கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளினாள்.
'நானும், உன்னை விட்டுப் போயிட்டா, உன்னை யார்ம்மா பாத்துக்குவாங்க...' என்று, அம்மாவின் காலைப் பிடித்துக் கதறினேன். பிள்ளை பாசம் வென்றது. ஆனால், அதன் பின் என்னிடம் பேசுவதை குறைத்துக் கொண்டாள்.
அக்கா வீட்டை விட்டு ஓடிப் போனதும், உறவுகளும் விலகிப் போயின. இப்போது என் நிலையைப் பார்த்து, ஒரேயடியாக ஒதுங்கிக் கொண்டதுடன், கேலியும் செய்தனர். அப்பா இறந்த பின், அவருக்கு சேர வேண்டிய தொகை வந்தது. கல்லூரிக்கு செல்ல பிடிக்கவில்லை. அதனால், 'அஞ்சல் வழியில் படிக்கப் போகிறேன்...' என்று கூறி, எல்லா சான்றிதழ்களையும் கல்லூரியில் இருந்து வாங்கி வந்து விட்டேன்.
'நாம இங்கு இருக்க வேண்டாம்; சென்னைக்குச் சென்றால், நான் வேலை பார்த்துக் கொண்டே படிப்பதற்கு வசதியாக இருக்கும்...' என்று வற்புறுத்தி, அம்மாவுடன் சென்னை வந்தேன்.
இங்கு வந்த பின், நண்பன் ஒருவனின் மூலம், அக்காவிற்கு பெண் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே சாலை விபத்தில் அக்காவும், மாமாவும் இறந்து விட்டதாகவும், குழந்தை மட்டும் உயிரோடு இருப்பதாகவும் அறிந்தேன். அவனிடம் அக்கா வீட்டு விலாசத்தை வாங்கி, குழந்தையை பார்க்கும் ஆவலில் சென்றேன். வாட்ச்மேனின் அனுமதியோடு தயக்கமாய் வீட்டினுள் நுழைந்தேன். கைக்குழந்தை ஒன்று அழுது கொண்டே தூளியில் அசைந்து கொண்டிருந்தது. அங்கிருந்த வயதான பாட்டி, 'யார் நீ...' என்று கேட்க, விபரத்தைக் கூறினேன்.
'இது பிறந்த நேரமோ என்னவோ, தாயையும், தகப்பனையும் விழுங்கிட்டது; மகன இழந்த துக்கத்துல என் மகனும் படுத்த படுக்கையாகிட்டான்...' என்று புலம்பினார்.
'கொஞ்ச நாளைக்கு பாப்பாவை நான் பராமரிக்கட்டுமா...' என்று பாட்டியிடம் கேட்ட அடுத்த நொடி, குழந்தையை தூக்கி என் கையில் கொடுத்து, 'நீயே வளர்த்துக்க...' என்று கூறி, விரட்டாத குறையாக அனுப்பி வைத்தார்.
வாசலில் இருந்த வாட்ச்மேன், 'இந்தக் குழந்தைய திரும்ப கொண்டு வந்து விட்டுடாதே... இதோட அப்பா, அம்மா கார் விபத்துல செத்ததும், மகன இழந்த துக்கத்துல எங்க சின்ன முதலாளி படுத்த படுகையாகிட்டார். அதனால், அவரோட அண்ணன், சொத்துக்களை எல்லாம் தன் பேர்ல எழுதி வாங்கிக்கிட்டார். தள்ளாத வயசுல, பெரியம்மா தான், இந்தக் குழந்தைய வேண்டா வெறுப்பாக கவனிச்சுக்கிட்டு வந்தது...' என்று கூறினார்.
அவரிடம் விடை பெற்று, குழந்தையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
குழந்தையைப் பார்த்ததும், 'யாரோட குழந்தைடா இது...' என்றாள் அம்மா. 'நல்லா பாரும்மா குட்டி அமுதா...' என்றேன்.
உடனே, பரபரப்புடன், தன் பெண்ணும் மாப்பிள்ளையும் வந்திருக்கின்றனரா என்று வெளியே எட்டிப் பார்த்தாள். அம்மாவிடம் எல்லா விஷங்களையும் கூறினேன். அழுது புரண்ட அம்மா, பின், குழந்தை அமுதாவைப் பார்த்து, ஆறுதல் அடைந்தாள்.
குழந்தையை பார்த்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன். ஊருக்குத் தான் ஜெயந்தி; அம்மாவுக்கு என்றும் ஜெய் தான். அஞ்சல் வழியில் பட்டப் படிப்பும், ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பையும் முடித்தேன். அமுதாவோடு சேர்த்து, அக்கம் பக்கம் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தேன். அமுதா படிப்பில் மட்டுமன்றி, விளையாட்டு, ஓவியம், பாட்டு என்று எல்லாவற்றிலும் படு சுட்டியாக இருந்தாள். அதனால், பள்ளி நிர்வாகி என்னை அழைத்து பாராட்டினார். நிர்வாகியிடம் என் கல்வித் தகுதியையும், ஆசிரியராக பணிபுரிய எனக்குள்ள ஆசையையும் தெரிவித்தேன். 'ஆசிரியை ஒருவர் நீண்ட விடுப்பில் இருக்கிறார்; அவருக்கு பதில், அவர் வரும் வரை வேலை செய்...' என்று வாய்ப்பளித்தார்.
இதற்கு சில பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலான பெற்றோர் ஆதரவு காட்டினர். நான், பாடம் சொல்லிக் கொடுத்த விதம், மாணவர்களுக்கு பிடித்திருந்தது. சக ஆசிரியர்களும், என்னை பாராட்டினர்.
பள்ளி நிர்வாகிக்கு, குழந்தை இல்லாத காரணத்தாலோ என்னவோ, என்னை தன் பெண் போலவே நடத்தினார். நானும், மற்றவர் முன்னிலையில் சார் என்று கூப்பிட்டாலும், மற்ற நேரங்களில் அப்பா என்றே அவரை அழைப்பேன்.
ஒருநாள் நிர்வாகி என்னை அழைத்து, 'நான் ஓய்வு எடுத்துக்கலாம்ன்னு இருக்கேன்; நீ இந்த பள்ளியை நிர்வகிக்கிறாயா?' என்று கேட்டார்.
நானும் சந்தோஷமாக தலையாட்டினேன். உடன் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு பொறாமை இருந்தாலும், சிலர் பாராட்டத்தான் செய்தனர். என் அணுகுமுறை, கனிவான பேச்சு, பெற்றோருக்கும் பிடித்து போயிற்று. ஒரு சிலர், எனக்காகவே பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க ஆரம்பித்தனர். என் நிர்வாகத்தில், சுற்று வட்டாரத்திலேயே, எங்கள் பள்ளி, சிறந்த பள்ளி என்ற பெயரைப் பெற்றது. இன்று, சிறந்த நல்லாசிரியர் விருதும் என்னை தேடி வந்துள்ளது.
சுய நினைவுக்கு வந்த நான், அம்மாவைப் பார்த்தேன்.
அம்மா, அப்பா படத்தின் முன் நின்று, ''ஜெயராமனாய் இருந்த நம் மகன், ஜெயந்தியாய் மறு பிறவி எடுத்து, எனக்கு மகளாகவும், என் பேத்திக்கு அம்மாவாகவும், நல்லாசிரியராகவும் உயர்ந்து, கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கோபுரக் கலசமாய் மின்னுகிறாள்,'' என்று கூறிக் கொண்டிருந்ததை கேட்டு, என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!
மீனாட்சி அண்ணாமலை
இளங்கலை பட்டம்.
பல்வேறு தமிழ், வார, மாத இதழ்களில், ஏராளமான படைப்புகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய முதல் சிறுகதையே,
டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

