
க.சையத்கான், மேடவாக்கம்: தான் விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை விவசாயிகளுக்கு என்று கிடைக்கும்?
ஒரு நாளும் கிடைக்கப் போவது இல்லை. இங்கு பெரும்பாலானவர்கள் கொஞ்ச நிலமே கொண்ட சிறு விவசாயிகள்... இவர்கள், தரகர்கள் மற்றும் வியாபாரிகளை நம்பியே இருக்க வேண்டும்!
கோ.அந்தோணிராஜ், ராமநாதபுரம்: மனைவியை அடிக்கும் கணவன் பற்றி சர்வே ஏதாவது உண்டா?
உண்டே! 'வீட்டை மற்றும் பிள்ளைகளை கவனிக்கவில்லை...' என்ற காரணங்களைச் சொல்லி, மனைவியை அடிப்பவர்கள், 40 சதவீதம் என்றால், 'சொல்லாம எங்கே போனே...' எனக் கேட்டு அடிப்பவர்கள், 36 சதவீதம்! மும்பையில் உள்ள நேஷனல் பேமிலி ஹெல்த் சர்வே எடுத்த கணிப்பு இது! (இது, மனைவியை அடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் மட்டும் எடுக்கப்பட்ட சர்வே!)
ப.பொற்செல்வி, வீரபாண்டி: கேபிள், 'டிவி'களின் படையெடுப்பால், மாணவர்களின் அறிவுத் திறன் குறைகிறது என்பது உண்மையா?
உண்மைதான்! தொடர்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டே இருந்தால், 'மென்டல்' ஆகி விடவும் வாய்ப்பு உண்டு! சோதனை முயற்சியாக ஒரு நாள் முழுவதும், 'டிவி'யை 'ஆன்' செய்யாமல் இருந்து பாருங்கள்... உபயோகமான பல வேலைகளை முடித்திருப்பது தெரிய வரும்!
என்.சைலேந்திரன், காட்டாங்குளத்தூர்: சட்டத்தால் மட்டுமே, சமுதாயக் கொடுமைகளை நீக்கி விட முடியுமா?
சட்டத்தால் முடியுமென்றிருந்தால் இன்று கொடுமைகளே இருந்திருக்காதே... பள்ளியில், இல்லத்தில் போதிப்பதன் மூலம் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இன்று, பள்ளிகளில், 'மாரல் கிளாஸ்'களே இல்லை; பெற்றோருக்கோ நேரமில்லை!
எஸ்.உதயக்குமார், குமாரமங்கலம்: மனிதனுக்கு அறிவே இல்லாமல் இருந்தால், எப்படி இருக்கும்?
இப்ப மட்டும் என்ன வாழுதாம்! அறிவு இல்லாததால் தானே மது அருந்துகிறான், ஜாதி வெறி பிடித்து, வீச்சரிவாளுடன் சுற்றுகிறான்... பிளேடு பக்கிரி என தெரிந்தும், ஓட்டு போட்டு அவனை எம்.எல்.ஏ., ஆக்குகிறான்!
எம்.ரவிச்சந்திரன், தெக்கலூர்: ஒரு மனிதனுக்கு எந்த விதமான மயக்கங்கள் வரக் கூடாது?
பணம், மது மற்றும் பெண் ஆகிய மயக்கங்கள் வரவே கூடாது! இதில், ஏதாவது ஒரு மயக்கத்தில் அவன் விழுந்தாலும் மீள்வது கடினம்!
எஸ்.சீனிவாசன், கூடுவாஞ்சேரி: எல்லாமும் தனியார் மயம் ஆவதால், இனி வரும் காலத்தில், தனியார் முதலாளிகள் நிர்ணயிக்கும் குறைந்த சம்பளத்தால் மக்களின் வாழ்வு நிலை என்னவாகும்?
தமிழகத்தின் மக்கள் தொகை, 7.5 கோடி! இவர்களில், ஆசிரியர்களையும் சேர்த்து, 13 லட்சம் பேர் தான் அரசு ஊழியர்கள். மற்றவர்கள் தனியார் துறைகளில் தானே பணியாற்றுகின்றனர். அவர்களின் வாழ்க்கை தரம், வாழ்வு நிலை மோசமாகவா உள்ளது?

