தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 01, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பணமிருந்தால் போதும்... உலகில் எதையும், யாரையும் விலைக்கு வாங்கி விடலாம். என்ன... ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விலை! இதைத் தான், 'பணம் என்றால், பிணமும் வாயைப் பிளக்கும்' என்றனர்...' என்று பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார், 'பீச்' நண்பர் ஒருவர்.

அவர், ஒரு லாரி அதிபர்; 45 லாரிகளுக்கு சொந்தக்காரர். சென்னை துறைமுகத்தில் வந்திறங்கும் சல்பரை, பல்வேறு இடங்களுக்கு, தம் லாரி மூலம் அனுப்பி வருகிறார். பணத்தைப் பற்றிய அவரது கருத்து அப்படிப்பட்டதாக இருக்கிறது.

நான் சொன்னேன்...

'அமெரிக்க கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜோசப் பி.கென்னடி, ஜனாதிபதியாக வரணும்ன்னு ஆசைப்பட்டார். அது முடியாமல் போகவே, தன் மூத்த பிள்ளை ஜோவை, எப்படியாவது ஜனாதிபதியாக்கி விட வேண்டும் என, நினைத்தார்.

'ஆனால், இரண்டாவது உலகப் போரின் போது, ஜோ சென்ற விமானம், ஜெர்மன் பீரங்கிகளால் தாக்கப்பட்டு, வெடித்துச் சிதற, இறந்து போனார் ஜோ.

'இரண்டாவது பிள்ளையான ஜான் கென்னடியை, வெள்ளை மாளிகையில் குடியேற்ற எண்ணினார்; அதில் வெற்றியும் பெற்றார்.

'பணபலம் இருந்தால், எதையும் அடைய முடியும் என்பதில் உங்களைப் போல அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் ஜோசப் பி.கென்னடி. இவருடைய தந்தை, மது வகைகள் வியாபாரம் செய்து, பெரும் பணக்காரராக ஆனவர். ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் மகனை பார்ட்னராக சேர்த்து, தன் தந்தையைப் போன்றே, விஸ்கி வர்த்தகத்தில், மாபெரும் வெற்றி கண்டவர் ஜோசப் பி.கென்னடி.

'தனக்கு ஜனாதிபதி பதவியில் ஆசை கிடையாது...' என்று வெளிப்படையாக சொல்லிக் கொண்ட போதிலும், ரகசியமாக, அப்பதவிக்காக, பல பிரயத்தனங்கள் செய்து வந்தார்; அவை பலிக்கவில்லை. ஆனாலும், இங்கிலாந்தின் தூதராக நியமிக்கப்பட்டு, பிரிட்டிஷ் பிரதமர் சேம்பர்லினின் நெருங்கிய நண்பராக விளங்கினார் ஜோசப் பி.கென்னடி.

'இவர், தன் குழந்தைகளுக்கு திரும்ப திரும்பச் சொன்ன தாரக மந்திரம், 'ஜெயிக்க வேண்டும்; அது தான் முக்கியம். இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வந்து புண்ணியம் இல்லை; முதலாவதாகத் தான் வர வேண்டும்...' என்பது தான்!

'மகன் ஜான் கென்னடியோ, மனதால் தைரியசாலி; ஆனால், உடலால் பலவீனமானவர். முதுகுவலி, போரில் பட்ட காயங்கள், தொடர் ஜலதோஷம், இருமல்... இப்படிப்பட்ட உடல்வாகு! ஆனால், எதையும் சட்டென்று கிரகித்துக் கொள்ளும் புத்திக் கூர்மை கொண்டவர். நிமிடத்துக்கு, 1,200 வார்த்தைகளைப் படிக்கும் வேகம் கொண்டவர்.

'சொந்தத் திறமையாலும், தந்தையின் செல்வாக்காலும், நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்தார். எனினும், அவருடைய கடைசி காலத்தில், பலவகை சோதனைகள் ஏற்பட்டன.

'டிசம்பர் 1961ல், அவர் மிகுந்த பிரியம் வைத்திருந்த தந்தை ஜோசப் பி.கென்னடி, பக்கவாதத்துக்கு ஆளானார். பின், அதிலிருந்து அவர் மீளவேயில்லை; அறிவு சரியாயிருந்ததே தவிர, பேசும் சக்தி போய் விட்டது.

'அத்துடன், ஜான் கென்னடியின், இல்லற வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கவில்லை; தன் தந்தையை போலவே, பெண் பித்துக் கொண்டவர் என்று பெயர் பெற்றிருந்தார். அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே, பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர் அவர் தான் என்று சொல்வர். இதனால், இவர் மனைவி ஜாக்குலினும், ஆடம்பர செலவுகளில் மூழ்கினார்; குறிப்பாக, உடைகளில்!

'இதனால், ஜான் கென்னடி குடும்ப பொருளாதார நிலையே பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், அவர்களுடைய சொந்தக் கடன்களை தீர்ப்பதற்காக, ஜோசப் பி.கென்னடி, 10 லட்சம் டாலர் கொடுத்தார் என்று சொல்வர்.

'மகன் ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட பின், அந்த துயரத்தை தாங்கி, அடுத்த பிள்ளையான ராபர்ட் கென்னடியின் மீது, நம்பிக்கை வைத்தார் ஜோசப் பி.கென்னடி, ராபர்ட்டும் கொல்லப்பட்டார்.

'ஆக, மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்து, நடைபிணமாக வாழ்ந்தார் ஜோசப் பி.கென்னடி, பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பியவர் அவர்... இப்போது என்ன சொல்கிறீர்கள்...' எனக் கேட்டேன்.

அவரிடமிருந்து பதில் இல்லை!

'ஆபீஸ் பையனிடம், தபாலில் சேர்க்கும்படி ஒரு கடிதம் கொடுத்தனுப்பினேன். அவன் போய் ரொம்ப நேரமாயிற்று. இன்னும் ஆளைக் காணோமே...' என்று வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் குப்பண்ணா.

'புதுப் பையன் பொடியன் தானே... அவன், படு சூரன்! மாரதன் ரேஸ் மாதிரி, பத்து மைலானாலும் ஓட்டத்திலே போய், ஓட்டத்திலேயே வந்து விடுவான்...' என்றேன்.

'பாரதத்திலே ரேஸ் எங்கே வருகிறது?' என்றார் லென்ஸ் மாமா.

'நீர் பாட்டுக்கு என்னவோ காதில் வாங்கி, எதையோ அர்த்தம் பண்ணாதீர்! உ.பா.,வை நினைத்து, இப்பவே, மனம் பேதலிக்காதீர்...' என்ற குப்பண்ணா, 'மாரதன் என்பது ஒரு ஓட்டப் பந்தயத்தின் பெயர்; ஐந்து மைல், 10 மைல் என்று ரொம்ப தூரம் ஓடணும்...' என விளக்கினார்.

'மாரதன் என்று ஒரு ஆள் அப்படி ஓடினானாக்கும்... அதனால் தானே இந்தப் பெயர்...' என்று கேட்டார் லென்ஸ் மாமா.

'மாரதன்ங்கிறது ஆள் பெயர் இல்ல; ஓர் இடத்தின் பெயர்...' என்று விளக்கி, தொடர்ந்தார் குப்பண்ணா... 'மாரதன்ங்கிற இடத்துல பாரசீகர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் இடையே கி.மு. 490ல், போர் நடந்தது.

'அதே சமயம், பாரசீகர்களின் இன்னொரு பிரிவு, ஏதென்ஸ் நகரத்தை தாக்கியது. மாரதனில் கிரேக்கர்கள் ஜெயித்து விட்டனர். ஏதென்ஸ் நகரத்துக்கு, அந்தச் செய்தியை தெரிவித்து, சரணடையாமல் போராடும்படி சொல்லியனுப்ப வேண்டியிருந்தது.

'அதற்காக, பிடிப்பிடீஸ் என்ற வீரனை தேர்ந்தெடுத்து அனுப்பினர். அவன் அப்போது தான் ஸ்பார்ட்டா என்ற நகருக்கு ஓடிப் போய் உதவி சேகரித்து வந்திருந்தான்.

'அதாவது, ஏற்கனவே, 130 மைல் ஓடியவனை, மாரதனில் இருந்து, 20 மைல் தொலைவிலுள்ள ஏதென்ஸ்சுக்கு அனுப்பினர். அன்று முதல், தொலை தூரம் ஓடுகிற எல்லா பந்தயங்களுக்கும், 'மாரதன் பந்தயம்' என்று பெயர் ஏற்பட்டு விட்டது...' என்றார்.

'இதற்கு மேலும் கதை இருக்கிறதே... தெரியாதா?' என்றேன்.

'ஏதென்சுக்கு படுவேகத்தில் ஓடிச் சென்ற பிடிப்பிடீஸ் இரைக்க இரைக்க, திணறித் திணறி வெற்றி செய்தியை அறிவித்து விட்டு, மறு வினாடியே விழுந்து இறந்து விட்டான். மகாகவி பைரன் அந்த வீரனை வியந்து அருமையான கவிதையை எழுதினார் பிற்காலத்தில்! இதைத் தானே கேட்டாய்...' என்றார் குப்பண்ணா.

'பேஷ்... பேஷ்...' எனக்கூறி, தலையசைத்தேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us