PUBLISHED ON : நவ 01, 2015

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
தாய் சொல்லை தட்டாதே படத்தின் வசனத்தை வாசித்துக் காட்டினார் ஆரூர்தாஸ். எம்.ஜி.ஆருக்கு அவரது அம்மாவின் ஞாபகம் வந்து கண்கள் கலங்கி. நெஞ்சை அடைத்தது. வசனத்தை மீண்டும் படிக்கச் சொன்னார்; ஆரூர்தாஸ் வாசித்தார்...
'கணவரை இழந்த பெண்களைப் பார்க்குறதே அபசகுனம்ன்னு சொல்வாங்க. ஆனா, நான் ஒவ்வொரு நாளும், பொழுது விடிஞ்சதும், எங்கம்மா முகத்தில் விழிக்கிறேன்; அதனால், எனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்குது. எனக்கு தாய்தான் தெய்வம்; அந்தத் தாய் சொல்லைத் தட்ட மாட்டேன்...'
ஒருநாளும் எம்.ஜி.ஆரை உயர்த்தி எழுத வேண்டும் என்று கதாசிரியர்களுக்கோ, பாடல் எழுதுபவர்களுக்கோ கட்டளை பிறப்பித்ததில்லை தேவர். முன்பு ஜெமினி கணேசனுக்காக எழுதப்பட்ட வசனத்தையே, எம்.ஜி.ஆருக்குப் படித்துக் காட்டினார் ஆரூர்தாஸ்.
'எதனால் இப்படி எழுதினீங்க?' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,
'கதாநாயகனோட குணத்தையும், படத்தோட டைட்டிலையும் சொல்லியாகணும்...' என்றார் ஆரூர்தாஸ்.
உடனே, அவரை இறுக கட்டி, 'இது எனக்காக எழுதப்பட்ட வசனம் மாதிரியே இருக்கிறது...' என்று சொல்லி பாராட்டினார் எம்.ஜிஆர்., இக்காட்சியைப் பார்த்து ரசித்தார் தேவர். அவருக்குப் பெரிய பிரச்னை தீர்ந்தது.
'எம்.ஜி.ஆர்., இனிமே உன்னை விடவே மாட்டார்; அந்த அளவுக்கு உன்னை அவருக்கு பிடிச்சுப் போச்சு...' என்று மதிய உணவு வேளையில் ஆரூர்தாசிடம் ரகசியமாகச் சொல்லி விட்டுச் சென்றார் தேவர்.
எம்.ஜி.ஆர்., தன் வார்த்தையை காப்பாற்றினார். தாய் சொல்லைத் தட்டாதே ஒரே மாதத்தில் பூர்த்தியானது.
கடந்த, 1961ல், தீபாவளி தினம், பி.ஆர் பந்துலுவும், சிவாஜி கணேசனும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன், 'பாரகன்' தியேட்டரிலிருந்து வரும் செய்திக்காக காத்திருந்தனர். சென்னை பிளாஸா தியேட்டரில் இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். திருடாதே படத்தை அடுத்து, எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி ஜோடி நடித்த, தாய் சொல்லைத் தட்டாதே படமும் மகத்தான வெற்றி!
அப்போது, பாரகன் திரையரங்கில் வெளியாகியிருந்த, கப்பலோட்டிய தமிழன் படத்தை பார்க்க ஓரளவு தான் குழுமியிருந்தனர் ரசிகர்கள். கடைசி வரையில், கணேசனுக்கு மனசு ஆறவேயில்லை. தன் லட்சியப் படத்தின் தோல்வி, அவரை வெகுவாகப் பாதித்தது.
தேவரை நம்பி அவரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டார் எம்.ஜி.ஆர்., இக்கூட்டணி, அடுத்து, தாயைக் காத்த தனயன் படத்தை தமிழ்ப் புத்தாண்டு அன்று திரையிட்டது.
பிளாஸாவில், தாய் சொல்லைத் தட்டாதே படம் நூறு நாட்கள் ஓடியது. அத்திரை அரங்கில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் படங்களை வினியோகம் செய்தது. தாயைக் காத்த தனயனும் நூறு நாட்கள். அதைத் தொடர்ந்து, தேவர் பிலிம்ஸில், எம்.ஜி.ஆர்., நடித்தது, குடும்பத் தலைவன்.
தமிழ் சினிமா வி.ஐ.பி.,க்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். காரணம் எம்.ஜி.ஆரிடம் தென்பட்ட மிகப்பெரிய மாற்றம். 1962ல் ஆக., 15ம் தேதிக்குள்ளாகவே, தேவர் பிலிம்சுக்கே மொத்த கால்ஷீட்டையும் கொடுத்து விட்டார் எம்.ஜிஆர்., இக்கூட்டணியின் குறுகிய காலப் படங்கள் மிகப் பெரிய வெற்றியடைந்தது. வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் தேவர், எம்.ஜி.ஆர்., மற்றும் சரோஜாதேவி கலந்து கொண்டனர்.
தொடர் வெற்றிகள் கொடுத்த தெம்பில், சொந்தக் கட்டடத்துக்குக் குடிபெயர்ந்தது தேவர் பிலிம்ஸ். அதைத் தொடர்ந்து, நீதிக்குப் பின் பாசம் படம்!
வேட்டைக்காரன் படத்தில், எம்.ஜி.ஆரை, 'கவுபாய்' டிரஸ்சில், நாலு வயது பையனுக்கு அப்பாவாக நடிக்க வைக்க, முடிவு செய்தார் தேவர். அதுவரை, எம்.ஜி.ஆரின் அம்மாவாக நடித்து வந்த கண்ணாம்பா காலமாகியிருந்ததால், இப்படத்தில், எம்.ஜி.ஆரின் அம்மாவாக நடிக்க ஒப்பந்தமானார், எம்.வி.ராஜம்மா!
பாவ மன்னிப்பு, பாசமலர் மற்றும் பாலும் பழமும் படப் பாடல்களால், உச்சாணிக் கொம்பில் இருந்தனர், விஸ்வநாதன் - ராமமூர்த்தி.
எந்தப் பாட்டு, எந்தப் படத்திலிருந்து ஒலிக்கிறது என கண்டுபிடிக்க முடியாதபடி, கே.வி.மகாதேவன் இசையில், ஏறக்குறைய எல்லா டியூன்களும் ஒரே மாதிரி இருப்பதாக, அபிப்ராயம் கூறினர் ரசிகர்கள். அதனால், மாற்றத்தை விரும்பிய எம்.ஜி.ஆர்., விஸ்வநாதன் - ராமமூர்த்தியை தேவர் பிலிம்சில் இசை அமைக்க வைக்க விரும்பினார்.
அதை மறுக்கும் சூழலில், அன்று தேவர் இல்லை. அத்துடன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசைக்கு, வினியோகஸ்தர்களும் அதிக விலை கொடுத்தனர். அதை ஏன் இழக்க வேண்டும் என நினைத்து, மடியில் பணத்தைக் கட்டிக் கொண்டு, எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்க்கச் சென்றார் தேவர்.
விஸ்வநாதன் முன், மடியிலிருந்த பணத்தை வாரி இறைத்த தேவர், 'ஆண்டவனே... என் முதல் படத்துலயிருந்து உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்; இப்ப எடுக்கப் போற வேட்டைக்காரன் படத்துக்கு நீங்க தான் இசையமைச்சு தரணும்...' என்றார்.
ஒப்புக் கொள்ள நினைத்த தருணத்தில், 'விசு... கொஞ்சம் உள்ளே வா...' என்று, அறைக்குள் இருந்து அவரின் தாயார் அழைக்கும் குரல் கேட்டது. உள்ளே சென்ற விஸ்வநாதன் திரும்பி வருவதற்குள், சத்தம் போடாமல் அங்கிருந்து வெளியேறிய தேவர், எம்.ஜி.ஆரிடம் வந்து நின்றார்.
'நம்ம மாமா தான் (கே.வி.மகாதேவன்) உனக்கு குரு; அவர் செய்த உதவிகள மறந்துட்டு, அவர் பொழப்பை நீ கெடுக்கலாமா'ன்னு விசுவநாதன் கன்னத்துல, அவங்க அம்மா ஓங்கி அறைஞ்சுட்டாங்கண்ணே...' என்றார் தேவர்.
இதைக் கேட்டதும், எம்.ஜி.ஆரும் அதிர்ந்து விட்டார். அதன்பின், எம்.ஜி.ஆரே முயன்றும், வற்புறுத்தியும் கூட, கடைசி வரை தேவர் பிலிம்சில் இசை அமைக்கவில்லை விஸ்வநாதன்.
வேட்டைக்காரன் படத்தில், மகாதேவன் மெட்டுப் போட்ட பாடல்கள், எம்.ஜி.ஆருக்கு நிரந்தரப் புகழையும், பெருமையையும் தேடித் தந்தன.
தமிழ் சினிமா ரசிகர்களிடம் பத்மினி, பானுமதி, அஞ்சலிதேவி மற்றும் சாவித்திரி போன்ற நடிகைகளுக்கு கிட்டாத இடம், சரோஜாதேவிக்கு கிடைத்திருந்தது. அது, ஒட்டுமொத்த பாட்டாளி ரசிகர்களின் கனவுக் கன்னி சரோஜாதேவி என்பதே!
அதனால், எம்.ஜி.ஆரும், சரோஜாதேவி தாமதமாக வந்தால் கோவிக்க மாட்டார். அவரது அரை நாள் கால்ஷீட் கிடைத்தாலும் போதும் என்றே, படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தனர். சிவாஜி பிலிம்ஸ் முதல் தயாரிப்பில், சரோஜாதேவி நடிக்கயிருப்பதால், சிவாஜி கணேசனுக்குப் பெருமையும், பூரிப்பும் இருந்தது.
நிலைமை இப்படியிருக்க, எப்போதும் போல, தான் கால்ஷீட் கேட்டதும், மொத்தமாக தேதிகளை ஒதுக்கி கொடுப்பார் என நினைத்து, சரோஜாதேவியின் தாயாரிடம், வேட்டைக்காரன் படத்துக்காக கால்ஷீட் கேட்டார் தேவர்.
தேவர் மீது, மதிப்பு உடையவர் சரோஜாதேவி. தேவரும், சரோஜா தேவியின் பிறந்த நாளான, ஜனவரி 7ம் தேதியை மறக்காமல், ஒவ்வொரு ஆண்டும், பொற்காசுகளைப் பரிசளிப்பார். அத்தனைச் சிறந்த நட்பும், பரஸ்பர மரியாதையும் அவர்களுக்குள் நிலவியது. அந்த சிநேகத்தில், வேட்டைக்காரன் படம் விரிசல் விழ வைத்து விட்டது.
சரோஜாதேவியின் தாயார் ருத்ரம்மா, கண்டிப்புக்கும், கறாருக்கும் புகழ் பெற்றவர். உலகத்திலேயே, மகளின் தேனிலவுக்குக் கூட, அவரை விட்டுப் பிரியாமல் உடன் சென்றவர் ருத்ரம்மா. சரோஜாதேவிக்கு என்ன பிடிக்கும் என்பது, சரோஜாதேவியை விட, அவர் அம்மா ருத்ரம்மாவுக்குத் தான் தெரியும். மகளின் வாழ்க்கையை, கால்ஷீட்டுகளாகவே கணக்கெடுத்தவர்.
அதனால், தேவர், 'வேட்டைக்காரன் பட கதை, வசனமெல்லாம் ரெடியாயிடுச்சு. உங்க தேதி தெரிஞ்சா பூஜைய நடத்திடுவேன்...' என்றதும், 'முன்னமாதிரி ஒரேயடியா கொடுக்க முடியாதுங்க; பாப்பாவுக்கு நிறைய படம், 'புக்' ஆகுது. ராத்திரி, பகல்ன்னு வேல செஞ்சாலும் போதல. நாகிரெட்டியார் கூடக் கேட்டிருந்தார். எம்.ஜி.ஆர்., மேனேஜர் வீரப்பன் படம் ஆரம்பிச்சிருக்காரு...' என்று இழுத்தார்
ருத்ரம்மா.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.