PUBLISHED ON : நவ 21, 2010

விக்ரம் நடிக்கும் மாறுபட்ட படம்!
கண் பார்வை இல்லாதவராக, மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்த விக்ரம், உடல் வளர்ச்சி இல்லாதவராக நடிக்கிறார். 'தெய்வ மகன்' படத்துக்காக இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம், 'சேது, காசி, அந்நியன் வரிசையில் இதுவும் ஒரு மாறுபட்ட படமாக இருக்கும்...' என்கிறார்.
கமல் படத்தில் நான்கு நாயகிகள்!
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், மாதவன் இணைந்து நடித்து வரும் படம், 'மன்மதன் அம்பு!' இப்படத்தில் த்ரிஷா, சங்கீதா இருவரும் தான் முதலில் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். பின்னர், ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடந்தபோது, நடிகை ஓவியாவை மூன்றாவது நாயகி ரோலுக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு, இப்போது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கரோலின் என்ற நடிகையையும் நான்காவதாக சேர்த்துள்ளனர். — சி.பொ.,
விஜய் மாறுபட்ட கெட்-அப்!
'அழகிய தமிழ் மகன்' படத்தைப் போலவே, 'வேலாயுதம்' படத்திலும் இரண்டு விதமான கெட்-அப்பில் நடிக்கிறார் விஜய். தோற்றம் ஒரே மாதிரியாக இருந்தாலும், கெட்-அப்பில் நிறைய வித்தியாசம் காட்டியிருப்பதோடு, மாறுபட்ட நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். — சி.பொ.,
செகண்ட் இன்னிங்சில் சோனியா - மாளவிகா!
திருட்டுப்பயலே படத்தில் இணைந்து நடித்த சோனியா அகர்வாலும், மாளவிகாவும் இப்போதும் நட்பை தொடர்ந்து வருகின்றனர். திருமணத்துக்குப் பிறகு செகண்ட் இன்னிங்சை துவங்கியுள்ள இந்த அம்மணிகள், தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதில், சோனியா கவர்ச்சிக்கு தடா போட்டுள்ளார். ஆனால், மாளவிகாவோ, 'இப்போதும் குத்தாட்டம் போடத் தயார்...' என்று, ஐட்டம் பாடல் வேட்டையில் இறங்கியுள்ளார். கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல். — எலீசா.
'திருட்டு சிறுக்கி' பெயர் மாறியது!
குண்டக்க மண்டக்க, காதல் கிசுகிசு படங்களை தயாரித்த சூப்பர் ஸ்டார் பிலிம்ஸ் புதியதாக தயாரித்துள்ள படம், 'திருட்டு சிறுக்கி!' படத்தின் கதைக்கு இதுதான் சரியான தலைப்பு என்றாலும், 11 மணி காட்சி படங்களின் தலைப்பு மாதிரி இருப்பதால், அப்பட டைட்டில் இப்போது, 'தப்பு' என்று மாறியுள்ளது. இப்படத்தின் முக்கிய ரோலில் ராணி சதுர்வேதி என்ற போஜ்பூரி மொழி நடிகை நடித் துள்ளார். கீரை மசித்த வாணலியில் ரசம் வைத்த உறவு போல! — எலீசா.
வெயிட் போட்ட அஞ்சலி!
மு.களஞ்சியம் இயக்கி வரும், 'கருங்காலி' படத்தில் இரண்டு விதமான கெட்-அப்பில் நடிக்கிறார் அஞ்சலி. முதலில் வெடலைப் பெண்ணாக வருபவர், பின்னர் திருமணமான பெண்ணாக நடித்துள்ளார். இந்த இல்லத்தரசி வேடத்துக்காக 10 முதல் 15 கிலோ வரை, 'வெயிட்' போட்டு நடித்திருக்கும் அஞ்சலி, 'இது என் கேரியரில் வித்தியாசமான படமாகவும் இருக்கும்...' என்கிறார். காணாதவன் கஞ்சியை கண்டானாம்; ஓயாமே ஓயாமே ஊத்திக் குடித்தானாம்!
— எலீசா.
பிரகாஷ்ராஜ் பைனான்ஸ் உதவி!
தான் நடிக்கும் பல படங்களுக்கு பைனான்ஸ் உதவியும் செய்து வந்தார் வில்லன் நடிகர் அலெக்ஸ். அதே பாணியில், தற்போது பிரகாஷ்ராஜும் சில படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்து வருகிறார். கதை தன்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணி விட்டால், அப்படத்தை சில ஏரியாக்கள் வாங்கி, வியாபாரமும் செய்கிறார். — சினிமா பொன்னையா.
தற்போது ஜெயம் ரவியை வைத்து, 'எங்கெங்கும் காதல்' என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. இதன் பிறகு, விஷாலை வைத்தும் ஒரு படம் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்க அனுஷ்கா, தமன்னா, ஹன்சிகா என்று பலரிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார்.
