தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அடையாளம் !

அடையாளம் !

அடையாளம் !


PUBLISHED ON : நவ 21, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 21, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திலகராஜன்

இயற்பெயர்: எம்.அடைக்கலம்

வயது: 52

கல்வித் தகுதி : எஸ்.எஸ்.எல்.சி.,

பிறந்த ஊர் - மாதரை -  மதுரை மாவட்டம்.

தற்போதைய வசிப்பிடம்: சென்னை.

சினிமாத் துறையில் உதவி இயக்குனராக காலடி வைத்து, நாடு அதை நாடு மற்றும் சின்னமணி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது முதல் சிறுகதை இது.

ஒரு காலத்தில், பல குடும்பங்கள் அழிவதற்கு காரணமாக இருந்தாலும், ஒரு சில குடும்பங்கள் வாழ்வதற்கு, லாட்டரி சீட்டு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது, அது ஒழிக்கப்பட்ட பின், அழிந்த குடும்பங்கள் தலை எடுத்ததோ, இல்லையோ, அதனால் வாழ்ந்த குடும்பங்கள், வழிவகை தெரியாமல் தடுமாறிக் கொண்டு தான் இருக்கின்றன.

பலர், வேறு  தொழிலை தேடிக் கொண்டாலும், சிலர், வேறு எதிலும் ஈடுபாடு கொள்ளாமல்,  ஒரு நாள் முறுக்கு,  ஒரு நாள் பழ வியாபாரம் என்று, அன்றாடம் ஒரு தொழிலாக, மாறி மாறி நாட்களை கடத்த, ஓடிக் கொண்டே இருக்கின்றனர்.

அப்படி லாட்டரி சீட்டு வியாபாரத்தால் வந்த சொற்ப வருமானத்தில், குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவர் பரமசிவம். அதிர்ந்து பேசியறியாத மனைவி. அதட்டவோ, அடிக்கவோ வாய்ப்பளிக்காத பிள்ளைகள். படிப்பதில் மட்டுமே பிடித்தம் கொண்டவர்களாய், எப்போதும் புத்தகமும், கையுமாகவே இருப்பர்.

'நம் எதிர்காலத்திற்கு படிப்பைத் தவிர, வேறு ஒரு சொத்தும் இல்லப்பா...' என்று, தந்தை சொன்ன வார்த்தைகளை, இதயத்தில் இறுக்கமாகக் கட்டிக் கொண்டதால், படிப்பில் இத்தனை கவனம்.

பரமசிவம் எந்த தீய பழக்கமும் இல்லாதவர். அதனால், அவர்  நேர்மை குன்றாதவராய் வாழ்ந்தார். வீட்டிலேயே மனைவி போட்டுத் தரும் வடை, போண்டா, பஜ்ஜி, முறுக்கு, சுண்டல், தட்டை போன்ற பண்டங்களை  ஸ்டாண்டில் நிற்கும் பஸ்களில் விற்று, அதில் வரும் வருமானத்தில், வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

புதுக் கல்யாண களையுடன் ஒரு தம்பதி வண்டியில் வந்து ஏறினர். ஒரு பையனுக்கு முறுக்குக் கொடுத்துவிட்டு, திரும்பி அவர்களைப் பார்க்கவும், மாப்பிள்ளைப் பையன், பரமசிவத்தைப் பார்த்துச் சிரித்தார். சட்டென்று நினைவுக்கு வரவில்லை பரமசிவத்திற்கு.  யாராயிருக்கும் என்று  யோசிக்கக்கூட அவருக்கு நேரங்கொடாமல், அவனே, ''அண்ணே... நாந்தே மூர்த்தி...'' என்றான்.

''அடே... பந்தல் மூர்த்தியா? எப்படிப்பா இருக்கே! அப்பா சவுக்கியமா இருக்காரா?'' என்றார் பரமசிவம்.

''உங்களால் தான் இப்ப நடமாட்டத்தில இருக்காரு. நீங்க எப்படி அண்ணே இருக்கீங்க?''

''இதோ பாக்கிறேல்ல. இப்படித்தான் பொளப்பு ஓடிக்கிட்டு இருக்கு...''

வண்டி கிளம்பவும், சொல்லிக் கொண்டே கீழேயிறங்கி, போகும் வண்டியையே பார்த்தார் பரமசிவம்.

மூர்த்தி, பரமசிவத்தைக் காண்பித்து தன் மனைவியிடம் ஏதோ சொல்வது  தெரிந்தது.

ஒருமுறை, 'லாட்டரிச் சீட்டு விற்றதில், கடைசி மூன்று எண்ணுக்கு ஐம்பது ரூபாய் பரிசு விழுந்தது...' என்று வந்து பணத்தை வாங்கிப் போனான் மூர்த்தி.

இப்படி சிறு தொகைகளை சில்லரை வியாபாரிகளே கொடுத்துவிட்டு, ஏஜென்டுகளிடம் மொத்தமாகப் பணம் பெற்றுக் கொள்வர். அந்த மாதம் முழுக்க பெற்ற பரிசுச் சீட்டுகளை வரிசைப்படி அடுக்கி எண்களை சரிபார்த்துக் கொண்டிருந்த போது, மூர்த்தியின் சீட்டிற்கு ஐந்து எண்ணிற்குரிய பரிசு ஐம்பதாயிரம் ரூபாய் விழுந்திருந்தது.

பரிசுச் சீட்டு வாங்கும் பலர், நமக்கெல்லாம் எங்கே பெரிய பம்பர் அடிக்கப் போகிறது என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து, எண்களை மேலிருந்து பார்க்காமல், கீழிருந்து பார்ப்பது வழக்கம். அப்படித்தான், மூர்த்தியும் மூன்று எண்ணுக்குரிய ஐம்பது ரூபாயை வாங்கிக்கொண்டு போனான்.

இப்போது பரமசிவத்திற்கு மகிழ்ச்சி. மூர்த்தியைத் தேடிப்போய் விபரத்தைச் சொல்லி, ஐம்பதாயிரம் ரூபாயை ஏஜென்டிடமிருந்து வாங்கிக் கொடுத்தார். இதை ஒரு நேர்மை என்று,  யாரும் பரமசிவத்தைப் பாராட்டவில்லை.

'இந்தக் காலத்தில் இப்படி பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கியேப்பா. காலங்காலமா கஷ்டப்பட்டுக்கிட்டு கெடக்கே. கெடச்சதை அமுக்கிட்டுப் போறதை விட்டுட்டு, தேடிப்போயி கொடுத்திட்டு வந்திருக்கியே...' என, பார்க்கிறவர்கள் ஆளுக்கு ஒருவிதமாகப் பேசினர்.

பரமசிவத்திற்கு மனம் சங்கடமாக இருந்தது. 'யாரும் என்னைப் பாராட்ட வேண்டாம்... முதுகிற்குப் பின்னால், புறம் பேசாமல் இருந்தால் போதும்...' என்று ஒதுங்கிப் போனார். இப்போதும் கூட ஒரு சிலர், அந்த விஷயத்தைப் பற்றி கேலி பேசத் தவறுவதில்லை. பரமசிவமும் இத்தகைய பேச்சுக்குப் பழகியவர்.

எதையும் எதிர்பார்த்து கணவர் அருகே வராத மனைவி மருதாயி, இரவு பத்து மணிக்கு படுக்கப் போகும் நேரம், மெல்லச் செருமிக் கொண்டு, ''என்னங்க...'' என்றாள்.

''என்ன புள்ள...'' என்றார் பரமசிவம்.

''கவர்மென்ட் ஆஸ்பத்திரியில், டாக்டர் ஒரு வருஷமா சொல்லிக்கிட்டே இருக்காரு. இடது கண்ணுக்கு கண்டிப்பா ஆபரேஷன் பண்ணணுமாம். இல்லேன்னா வலது கண்ணும் பாதிச்சுருமாம்...'' என்றாள்.

''இத்தனை நாளா இத ஏண்டி சொல்லலே?''

''நம்ம குடும்பம் படுற கஷ்டத்துல என்னத்தைச் சொல்றதுன்னு விட்டுட்டேன். ஆத்திர அவசரத்துக்கு வைக்கவோ, விக்கவோ ஒண்ணுமில்லை. ஒண்ணு, ரெண்டுன்னு எடுத்து வச்சாலும், புள்ளைகளுக்கு நோட்டு, பென்சில் வாங்கவே சரியாப் போகுது...''

''சரிப்பா... கை காலா? இன்னிக்கு நாளைக்கின்னு ஒத்தி வைக்கிறதுக்கு. கண்ணு போச்சுன்னா என்ன பண்ண முடியும்?'' என்று, தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார் பரமசிவம்.

மனைவியை அருகே அமர்த்தி, பாதித்த கண்ணை பாவமாய் பார்த்தார். தன் இயலாமையை பெருமூச்சாய் வெளியிட்டு, ''மதுரை பெரியாஸ்பத்திரிக்கு போய்ட்டு வரணும்ன்னா ஐயாயிரம் ரூபாயாவது கையில வச்சுக்கணும்!''

''அம்புட்டுத் துட்டுக்கு எங்கே போறது?''

''சரி... அத நான்  பாத்துக்கிறேன். எப்படியும் ரெண்டு நாள்ல பொறட்டிக்கிட்டு கௌம்பிடுவோம்!'' என்ற பரமசிவம், மருதாயியை தன்னருகே படுக்க வைத்து நெற்றியை தடவிக் கொடுத்தபடி, 'எங்கு பணம் புரட்டலாம்...' என்ற யோசனையில் மூழ்கினார்.

கணவனுக்கு இப்படி ஒரு பாரத்தைக் கொடுத்து விட்டோமே என்ற வருத்தத்தில், மருதாயி மனம் கலங்கினாள். பிள்ளைகள் இருவரும் ஒன்பது மணிக்கே உறங்கியதால், பெற்றோரின் இந்த துன்பம் அவர்களுக்குத் தெரியவில்லை.

ஆயிற்று!      

 இரண்டு நாளில் மதுரை போகலாம் என்ற பரமசிவத்தின் கணிப்பு, ஒரு வாரத்தைக் கடந்தும் புறப்பட வழி கிடைக்கவில்லை. கடன் கேட்ட இடங்களில் எல்லாம், 'இல்லை' என்பதைத் தவிர, 'அடுத்த வாரம், இரண்டு நாளில் தருகிறேன்...' என்று கூட ஆறுதலாய் யாரும் சொல்லவில்லை.

இந்த நிலையை புரிந்து கொண்ட மருதாயி, தன் கண் வேதனையை மறைத்துக் கொண்டு, கண் சரியாகி விட்டது போலவே நடிக்கத் தொடங்கினாள். ஆனால், பரமசிவத்திற்கு அவள் கண் வேதனையும் புரிந்தது, மனவேதனையும் புரிந்தது.

இரவு மணி பனிரெண்டு.

பிள்ளைகளோடு உறங்கிக் கொண்டிருந்தாள் மருதாயி. பரமதிவத்திற்கு தூக்கம் வரவில்லை. மனது எதை எதையோ நினைத்தது. ஆனால், எல்லாமே தவறு என்றும் புரிந்தது.

'நிகழ்காலத்தின் கதியே இப்படி என்றால், எதிர்காலம் எப்படி இருக்கும்...' என்று எண்ணியபோது, பயம் பற்றிக் கொண்டது பரமசிவத்திற்கு. 'பயந்தால், தீர்வு வந்து விடுமா? தொழிலை மாற்றலாமா... இல்லை, இந்த வியாபாரத்தின் நேரத்தைக் கூட்டலாமா?' என்று ஏதோ அசை போட்டார் அவர்.

அப்படியே கண்களை மூடித் திறந்தபோது, அதிகாலை நான்கு மணி. வடைக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்தாள் மருதாயி. வழக்கமாக அவள் செய்யும் வேலைதான் என்றாலும், பரமசிவத்திற்கு அதில் அரைபடுவது தன் இதயமாக தெரிந்தது.

அன்று ஒரு மணி நேரம் முன்னதாகவே பரமசிவம் வியாபாரத்திற்கு வந்து விட்டார். பல பஸ்கள், பல்வேறு மக்கள்.

 ''சூடான போண்டா, பஜ்ஜி, வடை,'' என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார். சில பஸ்கள் அந்த ட்ரிப் முடிந்து செட்டுக்கு திரும்பும். அது தெரியாமல் மக்கள் ஏறி அமர்வது உண்டு. அப்படி அமரும் மக்களுக்கு,  இதை தெரிவிப்பது, பரமசிவத்தின் வேலையாக இருக்கும். இப்போதும் அப்படி டிரிப் முடிந்த பஸ்சில் பயணிகள் அமர்ந்திருந்தனர்.

தன் குடும்பச் சூழ்நிலை காரணமாக, வியாபாரத்தில் கவனமாக இருந்த பரமசிவம், அதை உணராமல், உள்ளே சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

டிரைவர் வந்து, ''எறங்குங்க, எறங்குங்க... இது செட்டுக்குப் போகுது.  என்ன பரமசிவன்ணே... ஏன் இன்னைக்கு சொல்லாம விட்டுட்டீங்க?'' என்றார்.

''என்னமோ ஞாபகத்துல மறந்துட்டேன்ப்பா... அய்யா இறங்குங்கய்யா, அம்மா இறங்குங்கம்மா...'' என்று தன் பங்குக்கு பரமசிவமும் குரல் கொடுத்தார்.

டிரைவர் - கண்டக்டரைத் தேடிக் போக, பஸ் காலியானது. பரமசிவம் கடைசியாக இறங்கும்போது, ஒரு சீட்டின் ஓரத்தில், சின்ன பர்ஸ் தென்பட, அதை எடுத்துப் பார்த்தார்.

 அதில், ஐந்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், கொஞ்சம் சில்லரையும் இருந்தது. பரமசிவம் சுற்றுமுற்றும் பார்த்தார்.

'இது யாருதா இருக்கும்... யார்கிட்ட கேக்கறது...' என்ற யோசனையில், அவர் மனம் சலனப்பட்டது.

'இதுக்கு தானே ஒரு வாரமா காத்துக் கெடக்கோம்... நம்ம நேர்மைக்கு பொழைக்கத் தெரியாதவன்கிற பேருதானே இதுவரைக்கும் வந்திருக்கு...' என்று தன் மனதை பக்குவப்படுத்திக் கொண்ட பரமசிவம், தன் இடுப்பு மடிப்பில் பர்சை மறைத்துக் கொண்டார்.

''வடை, போண்டா, பஜ்ஜி...'' என்றபடி, பஸ்சைவிட்டு இறங்கி நடந்தார். அப்போது அங்கு பரபரப்பாக வந்த நான்கு பேர், பஸ்சினுள் சென்று தேடினர்.

''இங்கேதான் உட்கார்ந்திருந்தேன். யாரு கடைசியா எறங்குனது?''

இப்படி மாறி, மாறி ஒவ்வொருவரும் குரல் கொடுக்க, பரமசிவத்திற்கு குரல்வளை காய்ந்தது.

''இந்த போண்டாக்காரன்தாண்டா...'' என்றபடி பரமசிவத்தை சூழ்ந்தனர். பரமசிவத்தின் இதயம் வெடித்து விடுவது போலவே இருந்தது.

''ஏய்... ஒரு சின்ன பர்ஸ் கெடந்துச்சு... பாத்தியா?''

பரமசிவத்திற்கு பேச்சு வரவில்லை.

''ஏய்... ஒன்னத்தாய்யா, பர்ஸ், பணம் அஞ்சாயிரம் பாத்தியா, எடுத்தியா?''

பரமசிவம் மிரள, மிரளப் பார்த்தார். பரமசிவத்தை இவர்கள் மிரட்டுவதைப் பார்த்த சிலர் கூட்டமாய் சூழ்ந்தனர். பரமசிவத்தின் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.

'அவர்களாக எடுத்தாலும் அவமானம்; நாமாகக் கொடுத்தாலும் அவமானம்... கடவுளே...' என்று தன்னை நொந்து கொண்டார்.

அப்போது,  உள்ளூர்காரன் ஒருவன் அந்த நால்வரிடமும், ''என்ன சார் பிரச்னை?'' என்றான்.

''ஐயாயிரம் ரூபா இருந்த பர்சை மிஸ் பண்ணிட்டோம். இந்தாளுதான் கடைசியா எறங்கினான்... எடுத்தா எடுத்தேன்னு சொல்லணும்... இல்லேன்னா இல்லேன்னு சொல்லணும். இப்பிடி திருடன் மாதிரி முளிச்சா என்ன அர்த்தம்?'' என்றான் ஒருவன்.

'பதிலுக்கு என்ன சொல்லப் போகிறானோ...' என்ற பதற்றத்தோடு பரமசிவம் அவனைப் பார்க்க, அவன் சிரித்தான். அவனைத் தொடர்ந்து, அங்கு கூடி நின்ற அனைவரும், புகார் சொன்ன நான்கு பேரைப் பார்த்துச் சிரித்தனர்; பரமசிவத்திற்கு ஒன்றும் புரியவில்லை.

கூட்டத்திலுள்ள அனைவரும், பரமசிவத்தை நன்கு அறிந்தவர்கள். அந்த நால்வரில் ஒருவன் கொஞ்சம் கோபமாகவே பேசினான்...

''யோவ்... இப்படி ஆளாளுக்கு எங்களைப் பார்த்து சிரிச்சா என்னய்யா அர்த்தம்?'' என்றான்.

''விபரம் புரியலைன்னு அர்த்தம்!'' என்றான் வந்தவன்.

''அய்யா... இந்த ஊர்ல நீங்க யாரை வேணும்ன்னா சந்தேகப்படலாம். ஆனா, இந்த பரமசிவத்தை சந்தேகப்பட்டீங்கன்னா... அது உங்க பெத்த தாயை சந்தேகப்படறதை விட பாவமான காரியம்...'' என்றதும், பரமசிவம் அவனை பிரமிப்பாகப் பார்த்தான்.

''பத்து ரூபாய்க்கு பத்தாயிரம் பொய் பேசுற காலம்ய்யா இது. இவரு ஒண்ணும் கோடிக்கணக்குல சேர்த்து வச்சுருக்கல. அன்னாடங்காச்சி வாழ்க்கை தான். ஆனா, லாட்டிரி சீட்டு வியாபாரத்துல கூட நேர்மையா நடந்து பேரெடுத்தவரு.

''உங்கள மாதிரி, பஸ்சில தவறவிட்ட பல பேருடைய தங்க நகைகளைக் கூட, இவரு எடுத்துக் கொடுத்திருக்காரு.

''இத பாருங்கய்யா... ஒரு ஊருன்னா எந்த ஒரு மனுஷனுக்கும், அவனைப்பத்தி தப்பா பேசுறதுக்கும், குத்தம் சொல்றதுக்கும், குறைஞ்சபட்சம் பத்து பேராவது இருப்பான்.

''ஆனா, இந்த ஊர்ல இவர தப்பா பேசவோ, குத்தம் சொல்லவோ ஒரு ஆள் கூட கிடையாது. அப்படி ஒரு சொக்கத்தங்கம்ய்யா இந்த மனுஷன்,'' என்று அங்கு நின்ற ஒவ்வொருவரும் பரமசிவத்தைப் பெருமைப்படுத்திப் பேசி, அவர் குற்றமற்றவர் என்று, நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், பரமசிவம் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகிறது. எந்த மக்கள், தன் நேர்மையை ஏளனமாகப் பேசினரோ, அதே மக்கள், இன்று தானே ஒரு தவறு செய்துவிட்ட போது, பழைய நேர்மை உணர்வை சுட்டிக் காட்டி, வக்கீல்களாக செயல்படுவதை எண்ண, எண்ண தன் மீது வெறுப்பு வந்தது... அந்த மக்கள் மீது பெருமித உணர்வு வந்தது.

''சரிப்பா... நாங்கள் வெளியூரு. பணத்தை தவற விட்டுட்ட பரிதவிப்பு. யாரைப் பத்தியுமே தெரியாத இந்த ஊர்ல, இவரைப் பத்தி மட்டும் எங்களுக்கு என்ன தெரியும்!'' என்று ஒருவன் சொல்ல, மற்றவன், ''அய்யா... எங்க எல்லார் சார்புலயும் உங்க எல்லார் கிட்டையும் மன்னிப்பு கேட்டுக்கிறோம். மன்னிச்சுடுங்க. இந்த ஊரே சப்போர்ட் பண்ற அளவுக்கு நல்ல பேர சம்பாரிச்சு வச்சிருக்கீங்க. உங்களை கீழ்தரமா நினைச்சது எங்க தப்புத்தான்... நீங்களும் மன்னிச்சிடுங்க!'' என்றதும், பரமசிவத்தால் தாங்க முடியவில்லை.

 வியாபாரத் தட்டை ஓரமாக வைத்துவிட்டு,  ''நீங்க எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. உங்க யார் முகத்துலயும் முழிக்க, தகுதி இல்லாதவன் நான்!'' என்று தரைமீது மண்டியிட்டு, கதறினார்.

எல்லாரும் அவரைச் தூக்கி அரவணைத்தபடி, ''என்னாச்சி பரமசிவம்?'' என்றனர்.

''ஒரு மணி நேரத்துக்கு முன்னால வரைக்கும் நான் யோக்கியமாத் தாய்யா இருந்தேன். என் மனைவியோட கண்ணு ஆபரேஷனுக்கு ஒரு வாரமா பணத்துக்கு அலஞ்சேன்; எங்கேயும் கெடைக்கல. இது என் கண்ணுல பட்டுச்சு,'' என்று மடியிலிருந்து பர்சை எடுத்து எல்லார் முன்பும் நீட்டினார்.

எல்லார் முகத்திலும் பரிதாப உணர்வே மிகுந்திருந்தது.

உள்ளூர்காரர்கள் யாருக்கும் ஆத்திரமோ, கோபமோ ஏற்படவில்லை. ஆனால், பர்சை தவற விட்டவர்கள் மத்தியில், நாம் குற்றவாளிகள் தானே என்ற உணர்வு மட்டும் எல்லாருக்கும் தென்பட்டது. ஒரு தாழ்மை உணர்ச்சியோடு பார்க்க... அவர்கள் பரமசிவத்திடம், ''இப்பக் கூட நீ பொழைக்கத் தெரியாத மண்ணுய்யா... அப்படியே கமுக்கமா போயி, பொண்டாட்டி கண்ணு ஆபரேஷனை கவனிக்கிறத விட்டுட்டு, மன்னிப்புக் கேட்டு அழுதுகிட்டுருக்கியேயா.''

''எங்களுக்கு அந்த காசு வேண்டாம். நாங்க நாலு பேரும் சேர்ந்து, சாயந்தரம் ஆறுலயிருந்து பத்துக்குள்ள வீணாச் செலவழிக்கிற காசு. அதவச்சு உங்க சம்சாரத்தோட கண்ணைக் காப்பாத்துங்க அய்யா?

''ஒவ்வொரு ஊருக்கும், கோவில், குளம், ஆறு, பாலம், பள்ளத்தாக்கு, மலைன்னு ஒவ்வொரு அடையாளம் இருக்கும். உங்க ஊரைப் பொறுத்தவரைக்கும், இந்த பரமசிவம்தான் அடையாளம்,'' என்று, அந்த நால்வரும் புறப்பட, ஊரார் அனைவரும் ஒரு கனம் திகைத்து நின்றனர்.

'என்ன சொல்வரோ...' என்ற எதிர்பார்ப்பில் நின்ற பரமசிவத்தைப் பார்த்து, ''எந்த நிலைமையிலும் நீ யோக்கியங்கிறதை நிரூபிச்சுட்ட பரமசிவம். உனக்கு எந்த நேரத்தில உதவி தேவைப்பட்டாலும், எங்க எல்லார் வீட்டு கதவையும்  தட்டலாம்!'' என்று, எல்லாரும் தங்கள் பங்குக்கும் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து நீட்டினர்.

''வேண்டாம்ய்யா... எனக்கு இப்போ வேணுங்கிறதை அவங்க குடுத்துட்டாங்க. வேணுங்கிறப்போ வர்றேன்!'' என்று கும்பிட்டு கிளம்பினார் பரமசிவம். ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us