PUBLISHED ON : டிச 12, 2010

நெப்போலியனுக்கு சிறப்பு அனுமதி!
மத்திய இணை அமைச்சராகும் முன், நடிகர் நெப்போலியன் நடிக்க கமிட் ஆன படம், 'பள்ளி கொண்டபுரம்!' அதன்பிறகு, அவரால் நடிக்க இயலாததால், கிடப்பில் கிடந்த அப்படம், இப்போது தூசு தட்டப்படுகிறது. இப்படத்தில், தான் நடிப்பதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறார். — சினிமா பொன்னையா.
மீரா ஜாஸ்மின் பெருமை!
பெண் சிங்கம் படத்தில், நாயகியாக நடித்த மீரா ஜாஸ்மின், மீண்டும், முதல்வர் மு.கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவாகியுள்ள இளைஞன் படத்தில் நடித்துள்ளார். 'சிறிய வேடமே என்றாலும், மலையாள நடிகையாக இருந்தும், கலைஞரின் வசனம் பேசி, அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்த பெருமைக்குரிய நடிகையாகி விட்டேன்...' என்கிறார். அதைத்தான் சொல்வானேன்; வாய்தான் நோவானேன்! — எலீசா.
மாறுபட்ட கதையில் அதர்வா!
பாணா காத்தாடிக்கு பிறகு, அப்பா முரளியின் இறப்பால், எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த அதர்வா, தற்போது, முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தில் நடிக்கிறார். 'இது, முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம். இந்தப் படம் என்னை வியாபார ரீதியில் பேச வைக்கும்...' என்கிறார். அதற்காக, ஆக்ஷன் மற்றும் காமெடியிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். — சி.பொ.,
''மலையாளத்தில், திலீப் - நயன்தாரா காம்பினேஷனில், 'பாடிகார்ட்' படத்தை இயக்கிய சித்திக், இப்போது, அப்படத்தை தமிழில் விஜய் - அசின் கூட்டணியில், 'காவலன்' என்ற பெயரில், இயக்கி வருகிறார். இதையடுத்து, இந்தி, தெலுங்கிலும் ரீ-மேக் செய்கிறார். அதற்காக, சல்மான்கான், வெங்கடேஷ் ஆகிய முன்னணி நடிகர்களையும், 'புக்' பண்ணியுள்ளார்.''
கூத்துப் பட்டறை விமல், விதார்த்!
பசங்க, களவாணி படங்களில் நடித்த விமல், அதற்கு முன் சில படங்களில் நண்பர் கேரக்டர்களில் நடித்தவர். அதேபோல், தொட்டுப்பார், மைனா படங்களில் நடித்துள்ள விதார்த்தும், தொட்டுப்பார் படத்தில் நண்பர் கேரக்டரில்தான் முதலில் நடித்தார். ஆனால், அவரது நடிப்பைப் பார்த்து, பின்னர் அவரையே அப்படத்தில் ஹீரோவாக்கி விட்டனர். இப்படி நண்பர் ரோலில் நடித்து, நாயகனான விமல், விதார்த் இருவருமே, கூத்துப்பட்டறை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. — சி.பொ.,
சானாகான் தோல்வி முகம்!
தமிழைப் போலவே, சானாகான் கன்னடத்தில் நடித்த படமும் வெற்றி பெறவில்லை. இதனால், சோகத்தில் காணப்படும் நடிகை, தமிழில் கடைசியாக நடித்துள்ள, 'ஆயிரம் விளக்கு' படத்தை எதிர்நோக்கியுள்ளார். ஒருவேளை இந்தப் படமும் தோல்வி முகம் காட்டினால், அடுத்து பாலிவுட்டுக்கு பறந்து விடப் போவதாக கூறுகிறார். போனால் போன இடம்; வந்தால் வந்த இடம்! — எலீசா.
மு.களஞ்சியம், அஞ்சலிக்கு குருநாதர்!
அஞ்சலியை வைத்து, வாலிப தேசம், சத்தமில்லாமல் முத்தமிடு என்ற இரண்டு படங்களை இயக்கினார் மு.களஞ்சியம். ஆனால், அந்த இரு படங்களுமே வெளியாகவில்லை. இருப்பினும், 'அந்தப் படங்களில் நடிக்கும் போது தான், நான் நடிப்பையே கற்றுக் கொண்டேன். அந்த வகையில், டைரக்டர் மு.களஞ்சியம்தான் என் குருநாதர்...' என்கிறார், 'அங்காடித்தெரு' அஞ்சலி. நேசம் உள்ளவர் வார்த்தை நெல்லிக்கனி தின்றது போல ! -- எலீசா.
சங்கீதாவுக்கு, 'பஞ்ச்' டயலாக்!
வழக்கமாக சினிமாக்களில் ஹீரோக்களுக்கு பஞ்ச் டயலாக் கொடுப்பதுதான் வாடிக்கை. ஆனால், அந்த பார்முலாவை உடைத்து, 'தம்பிக்கோட்டை' படத்தில் வில்லியாக நடிக்கும், 'உயிர்' சங்கீதாவுக்கு, பஞ்ச் டயலாக் கொடுத்துள்ளார் அப்பட இயக்குர் அம்மு ரமேஷ். இப்படத்தில், கதைப்படி, அதிரடி வேடத்தில் நடித்துள்ள சங்கீதா, எப்போதும் வாய் நிறைய 420 பீடாவை மென்று கொண்டே, 'என் வாயில் மட்டும் 420 இல்ல, நானே ஒரு 420 தான்...' என்ற டயலாக்கை அடிக்கடி பேசுகிறார். — சினிமா பொன்னையா.
