
சிம்பு படத்தில், 'அவதார்' மேக்-அப் மேன்!
அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து, சிம்பு நடிக்கும், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படம், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. அத்துடன், இப்படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் சிம்புவுக்கு, 'மேக்-அப்' போடுவதற்காக ஹாலிவுட்டில் இருந்து, ஷான்புட் என்ற மேக்-அப் மேன் வரவழைக்கப்பட்டுள்ளார். இவர், ஹாலிவுட்டில் வெளியான, அவதார் உள்ளிட்ட பல படங்களில், மேக்-அப் மேனாக வேலை செய்தவர். அவ்வகையில், இப்படத்துக்காக சிம்புவின் கெட்டப்பையும், அவதார் ரேஞ்சுக்கு வித்தியாசப்படுத்த உள்ளார்.
— சினிமா பொன்னையா
மம்மூட்டிக்கு ஜோடியான வரலட்சுமி!
தாரைத்தப்பட்டை படத்தில், கரகாட்ட பெண்ணாக நடித்தவர் வரலட்சுமி. அவரது, அதிரடியான நடிப்பு, பலரையும் கவர்ந்ததால். ஆக் ஷன் கதாநாயகியாகி விட வேண்டும் என்று, நிபுணன் என்ற படத்தில், ஒப்பந்தமானார். அத்துடன், தொடர்ந்து அதிரடி வேடங்களாக தேடினார்; ஆனால், அவர் எதிர்பார்த்த மாதிரியான வேடங்கள் சிக்கவில்லை. அதனால், தற்போது மலையாளத்தில், மம்மூட்டியுடன், கசபா என்ற படத்தில், குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கும் வரலட்சுமி, இப்போது, அழுத்தமான கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ளார்.
— எலீசா
சவாலான வேடத்தில் ஜோதிகா!
திருமணத்திற்கு பின், நடிப்பதை நிறுத்தி வைத்திருந்த ஜோதிகா, ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின், மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த, ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற படத்தின் தமிழ் ரீ - மேக்கான, 36 வயதினிலே படத்தில் நடித்தார். அப்படம் வெற்றி பெற்றதால், மறுபடியும், கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடிக்க முடிவு செய்த அவர், தற்போது, குற்றம் கடிதல் படத்தை இயக்கிய, பிரம்மா கூறிய கதையை ஓ.கே., செய்துள்ளார். இப்படத்திலும், முந்தைய படத்தைப் போலவே, சவாலான வேடத்தில் நடிக்கிறார்.
— எலீசா
இந்திக்கு செல்லும் தமன்னா!
தமன்னாவுக்கு, இந்தி தாய்மொழி என்ற போதும், தென்னிந்திய சினிமா தான், அவரை முன்னணி நடிகையாக வளர்த்து விட்டது. எனினும், தாய்மொழி பாசத்தால், அவ்வப்போது இந்தி படங்களில் நடிப்பதும், அப்படம் தோல்வி அடைந்ததும், இங்கு வருவதுமாக இருந்து வந்தவர், தற்போது, தர்மதுரை படத்தில் நடித்து முடித்ததும், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் தில்வாலே படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்தி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்படத்தில் நாயகனாக ரன்வீர்சிங் நடிக்கிறார். அருள் வேணும்; பொருள் வேணும்; ஆகாச வாணி துணையும் வேணும்!
— எலீசா
கமல் படத்துக்கு எதிர்ப்பு!
கமல் நடித்த, விஸ்வரூபம் உட்பட பல படங்கள், வெளியாகும் நேரத்தில் தான் சர்ச்சைகளை சந்தித்தன; ஆனால், தற்போது, அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்கும், சபாஷ் நாயுடு படத்தின் பூஜை போட்டதில் இருந்தே எதிர்ப்பு எழுந்துள்ளது. அப்படத்தின் தலைப்பில், நாயுடு என்ற ஜாதிப் பெயர் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி, அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனபோதும், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், பட வேலைகளை துவங்கி விட்டார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
காக்கா முட்டை நடிகை, 'முன்னணி நடிகர்களின் படங்களில் மூன்றாவது நாயகியாக நடிப்பதில், தனக்கு ஆர்வம் இல்லை...' என்று, தேடிவந்த சில படங்களை, திருப்பி அனுப்பி விட்டார். அத்துடன், 'வளர்ந்து வரும் நடிகர்களின் படமென்றாலும், கதாநாயகியாக நடிப்பது தான் எனக்கு மரியாதை...' என்று கூறும் நடிகை, சிங்கிள் நாயகி என்றால், சம்பளத்தை கூட, கணிசமாக குறைத்துக் கொள்கிறார்.
மெரினா நடிகருடன் இரண்டாவது முறையாக நடிக்கும் மாஜி நடிகையின் வாரிசு, அதற்கடுத்து, அதே நடிகர் நடிக்கும் படங்களை கைப்பற்ற, அவரை விடாமல் துரத்தி வருகிறார். ஆனால், ஏற்கனவே, ஒரு நடிகையுடன் நெருக்கம் வைத்து குடும்ப சலசலப்பில் சிக்கிக் கொண்ட நடிகர், 'மறுபடியும் ஒரு போர் வெடிக்க வேண்டாம்...' என்று, நடிகையை கண்டாலே, எகிறி ஓடுகிறார். இருப்பினும், தன் முயற்சியில் விடாப்பிடியாக இருக்கிறார் நடிகை.
சினி துளிகள்
* விஜய்யின், 60வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக, மேலும் சில மேல்தட்டு கதாநாயகர்கள் படங்களில் நடிக்க, பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார்.
* அயிட்டம் பாடலுக்கு நடனமாட ஒரு படத்தில் வாய்ப்பு வந்த போது, அதுபோன்ற பாடல்களுக்கு நடனமாடினால், கதாநாயகி, 'இமேஜ்' போய் விடும் என்று, நடிக்க மறுத்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவ்ளோதான்!

