sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தெரிஞ்சுக்கவும், புரிஞ்சுக்கவும் இவ்வளவு நாள் ஆச்சா?

/

தெரிஞ்சுக்கவும், புரிஞ்சுக்கவும் இவ்வளவு நாள் ஆச்சா?

தெரிஞ்சுக்கவும், புரிஞ்சுக்கவும் இவ்வளவு நாள் ஆச்சா?

தெரிஞ்சுக்கவும், புரிஞ்சுக்கவும் இவ்வளவு நாள் ஆச்சா?


PUBLISHED ON : மே 22, 2016

Google News

PUBLISHED ON : மே 22, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இப்பல்ல புரியுது... இவன் இவ்வளவு நாள் எதுக்கு இப்படி, 'அத்தே அத்தே'ன்னு வளைய வந்தான்னு...' என்று அத்தைக்காரி, தன் அண்ணன் மகனைப் பற்றி கூறியது, எதற்கு என்பது, இந்நேரம் உங்களுக்கு பிடிபட்டிருக்கும்.

எந்த ஒரு செயலும், ஒருமுறை இயல்பாகவும், தற்செயலாகவும் நடக்கலாம். அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் நடக்கும் போது, அதில் ஏதோ, 'சம்திங்' இருக்கிறது என்பது தெளிவு. இந்த உள்நோக்கம் ஆராயப்பட்டால், நாம் விழித்து விட்டோம் என்று பொருள்.

இந்த அத்தைக்காரிக்காவது, தான் விரும்பியது நடந்ததில் சந்தோஷம். பல நேரங்களில், நடக்கக் கூடாதவை அல்லவா நடந்து விடுகிறது. பின், தாமத ஞானோதயம் வந்து என்ன பயன்?

'எள்ளு எண்ணெய்க்கு காய்கிறது; எலிப் புழுக்கை என்னத்திற்கு காய்கிறது...' என்று, எங்கள் சிவகங்கை மாவட்டத்தில், பெண்கள் கேட்பர்.

காரணமில்லாமல், ஏதும் நடப்பது இல்லை; காரணத்தை ஆராயாமல், தாமதமாக கண்டுபிடிப்பதில் பயனில்லை.

இள வயதுப் பெண் மற்றும் பையனின் அறைக்குள், பெரியவர்கள் நுழைந்ததும், உடனே, அவர்கள் கணினியில் கை வைத்தால், காட்சியை மாற்றுகின்றனர் என்றும், அமைதியாக, இயல்பாக, அசையாமல் இருந்தால், ஏதும் பழுதில்லை என்றும் பொருள்!

'நுழைகிறவர்களுக்கு, 'ஸ்கிரீன்' தெரியும்படி திருப்பி வை; இல்லைன்னா, கணினி பரணுக்கு தான் போகும்...' என்று எச்சரிக்கை மணி அடிக்காவிட்டால், அவன் மணிப் பயலாக உருவெடுப்பது கடினம்.

கல்சுரல்ஸ், ஸ்பெஷல் கிளாஸ், எக்ஸ்கர்ஷன் குரூப் ஸ்டடி, புராஜக்ட் என்று அடிக்கடி ஏதாவது பெண் கூறினால், வேறு ஏதோ, 'ஸ்பெஷலாக' நடக்கிறது என்று அர்த்தம்.

'எங்கடா பிராக்ரஸ் ரிப்போர்ட்?' என்று அம்மா கேட்டால், 'இது தெரியாதாம்மா உனக்கு... பிராக்ரஸ் ரிப்போர்ட் முறையெல்லாம் இப்போ இல்லை: நீ, எந்த காலத்துல இருக்கே...' என்று பையன் கேட்டால், அப்பாவி அம்மாக்கள் பாடு, 'பேபேபே' நிலைமை தான்!

கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி விட்ட பிள்ளைகளை, தீவிரமாக கண்காணித்தால் நிச்சயம், சில அடையாளங்களை விட்டுச் செல்வர். பாட்டில், பில், தீப்பெட்டி, லைட்டர், சிகரெட் பாக்கெட் என, ஏதாவது ஒன்று மாட்டும். ஆரம்பத்தில் விட்டு விட்டு, அடிமையாகிப் போனபின், 'எம்புள்ளைக்கு வாய்க்குள் விரல் கொடுத்தால் கூட கடிக்கத் தெரியாது...' என்று நம்பும் பெற்றோர், பயங்கர அதிர்ச்சிக்கு தயாராக வேண்டியது தான்!

சந்தேகப்படுவதையும், கண்காணிப்பதையும் பெற்றோர் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஏற்கனவே, நாம் கடந்து வந்த பழமொழி தான்...

'நண்பர்களுக்கு விருந்து கொடு; முடிந்ததும் கரண்டிகளை எண்ணி உள்ளே வை' என்கிற பழமொழியை, இளைய தலைமுறையின் மீதும், செலுத்திப் பார்க்கலாம்; தவறில்லை.

தவறு நடக்க களம் அமைத்தல், கண்காணிக்காமல் விடல் மற்றும் அதீத நம்பிக்கை மாபெரும் தவறுகளில் போய் முடிந்து விடும்.

கணக்கு வழக்குகளை இயந்திரமாய் பார்க்காமல், குடைகிற பாணியில் பாருங்கள். கசடுகள் கிட்டும்; ஏதோ இடிக்கும்.

பெரிய தொழிற்சாலை ஒன்றிலிருந்து, தினமும், குப்பைக் கூளங்கள் ஒரு தள்ளுவண்டியில் வெளியே போய் கொண்டிருந்தன. குப்பையை கிளறி பார்த்து, வேறு ஏதும் உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றனவா என்று, நன்கு பார்த்து தான் அனுப்பினார் பாதுகாவலர். பின்தான் தெரிய வந்தது, தினமும், ஒரு தள்ளுவண்டி, கண்ணெதிரே திருடு போயிற்று என்பது!

எதையோ பார்த்தபடி, முக்கியமானதை கோட்டை விடும் செயல்கள் தொடர காரணமே, நம்முடைய மெத்தனமும், அலட்சியமும், கூர்மையற்ற பார்வையும், நுணுக்கமான கண்காணிப்பும் இல்லாதது தான்!

கண்களைக் கூர்மையாக்குவோம்; காதுகளை தீட்டுவோம்; மூளையை, 'விழிவிழி' என, தட்டிக் கொடுப்போம். இவற்றைச் செய்தால், 'யப்பா... இந்தாளுக்கிட்டே எதுவும் நடக்காதுடா சாமி...' என்கிற பாராட்டுப் பத்திரம், பலரால் வழங்கப்பெறும்.

பாராட்டை விடுங்கள்; இதுவே நம் நலன்களை பாதுகாக்க வல்லது!



லேனா தமிழ்வாணன்






      Dinamalar
      Follow us