
ஏ.ஆர்.ரஹ்மானின் முக்கியமான படம்!
பிரேசில் கால்பந்து அணி வீரரான, பீலேயின் வாழ்க்கை வரலாற்று படமான, பீலே பெர்த் ஆப் த லெஜன்ட் என்ற படத்துக்கு, இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரான, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்று கதையில் உருவாகும், சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், 'தற்போது, நான் பல மொழி படங்களுக்கு இசையமைத்து வந்தபோதும், சச்சினின் வாழ்க்கை வரலாற்று படம், எனக்கு இந்த ஆண்டின், மிக முக்கியமான படமாக இருக்கும்...' என்று தெரிவித்துள்ளார்.
அஞ்சலிக்கு அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!
கன்னட நடிகர் தர்ஷன் நடிக்கும், சக்கரவர்த்தி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் அஞ்சலி, முதல் நாளே படப்பிடிப்பு தளத்திற்கு மூன்று மணி நேரம் தாமதமாக சென்றதால், டென்ஷனான அப்பட தயாரிப்பாளர், அவரை ஸ்பாட்டை விட்டே வெளியேற்றி விட்டார். அத்துடன், தீபா சன்னதி என்ற நடிகையை, வரவழைத்து, படப்பிடிப்பை தொடர்ந்துள்ளார். இதனால், மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார், அஞ்சலி. தலையிலே இடி விழுந்த கதை!
— எலீசா
நயன்தாரா திடீர் மாற்றம்!
படப்பிடிப்பு தளங்களில், இதுவரை மூடியாக இருந்து வந்த நயன்தாராவை, அவரது படங்களின் வெற்றி, உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், 'முன்னணி கதாநாயகர்களுடன் தான் நடிப்பேன்...' என்பதில் இருந்து விடுபட்டு, மாறுபட்ட கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நயன்தாரா, தனக்கான காட்சி முடிந்ததும், கேரவனுக்குள் சென்று தலைமறைவாகி கொள்ளாமல், ஸ்பாட்டிலேயே அமர்ந்து, மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கை பார்ப்பதுடன், அவர்கள் சிறப்பாக நடித்தால், கை தட்டி, உற்சாகப்படுத்துகிறார். தன் நோய்க்கு தானே மருந்து!
— எலீசா
கேத்ரின் தெரசா பட்டப்பெயர்!
தன் முதல் படமான, மெட்ராஸ் படத்தில் நடித்த போது, மூடி டைப்பாக இருந்த கேத்ரின் தெரசா, இப்போது, அனைவரிடமும் சரளமாக பழகுகிறார். அத்துடன், கொஞ்சம் அப்பாவித்தனமான நடிகர்களாக இருந்தால், படப்பிடிப்பு தளங்களில், அவர்களிடம் வாயாடும் நடிகை, விட்டால் போதும் என்று அவர்கள் ஓடும் அளவுக்கு வாயை மூடாமல், பேசி தள்ளுகிறார். இதனால், சில நடிகர்கள் கேத்ரின் தெரசாவுக்கு, 'வாயாடி' என்று பட்டப்பெயர் வைத்து விட்டனர். வாய் இருந்தால் வங்காளத்துக்கும் போகலாம்!
— எலீசா
'மாஸ்' கதாநாயகனாகும் விஜயசேதுபதி!
மாறுபட்ட கதைகளாக தேடிப் பிடித்து நடித்து வந்த விஜயசேதுபதியும், தற்போது, றெக்க படம் மூலம், 'மாஸ்' கதாநாயகனாகியுள்ளார். இப்படம், விஜய் நடித்த, கில்லி படம் போன்ற கதையில் உருவாகி வருவதுடன், விஜயசேதுபதிக்கு, 'ஓப்பனிங்' மற்றும் சண்டை காட்சிகளில் பாடல்களும் உள்ளன. அதனால், விஜயசேதுபதியும், வழக்கமான கமர்ஷியல் கதாநாயகனாகியிருக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தளபதியுடன் ஜோடி போட்டுள்ள கேரள நடிகை, அவருடன் நடித்த அனுபவங்களை, தன் அபிமானிகளிடம் பக்கம் பக்கமாக பேசி வருகிறார். அதேசமயம், தன்னுடன் ஏற்கனவே நடித்த, சில மூன்றாம் தட்டு நடிகர்கள், தொடர்பு கொண்டால், போனை எடுக்காமல், துண்டித்து விடுகிறார். இதனால், மேற்படி நடிகர்கள், நடிகை மீது செம காண்டில் உள்ளனர்.
சினி துளிகள்!
* அஜித்தின், 57வது படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, ஜார்ஜியா நாட்டில் நடைபெற உள்ளது.
* ஐ படத்தை அடுத்து, மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும், 2.0 படத்தின் ஒரு காட்சியில், டூ - பீஸ் உடையணிந்து நடித்துள்ளார், எமி ஜாக்சன்.
* ரெமோ படத்தில், பெண் வேடம் உட்பட, நான்கு கெட்டப்புகளில் நடித்துள்ளார், சிவகார்த்திகேயன்.
* இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
அவ்ளோதான்!

