sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மலரும் மன்னனும்!

/

மலரும் மன்னனும்!

மலரும் மன்னனும்!

மலரும் மன்னனும்!


PUBLISHED ON : ஜூன் 19, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 19, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்லாருக்கும், எல்லாமும் கிடைத்து விடாது; சிலரை பார்க்கும் போது, நம்மையறியாமல், 'இவர்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றனர்; தெய்வம் என்னைத் தான் படுத்துகிறது...' என்ற புலம்பல் வெளிப்படுகிறது.

இதற்கெல்லாம் காரணம், நம் கர்ம வினையே!

ஒரு சமயம், நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவியது. வேடன் ஒருவன், பசியால் வருந்தியபடி, தன் மனைவியுடன் காட்டில் அலைந்து திரிந்த போது, ஏராளமான தாமரை மலர்கள் நிறைந்த குளத்தைப் பார்த்தான்.

உடனே, குளத்தில் இறங்கி, தாமரை மலர்களை பறித்து கரையேறியவன், தன் மனைவியிடம், 'இம்மலர்களை காசி நகரத்திற்கு எடுத்துச் சென்று விற்கலாம்; பசி தீர உதவும்...' என்று கூறி, அவளுடன் காசி நகரை அடைந்தான்.

நகரம் முழுவதும் சுற்றி வந்தும், ஒரு மலர் கூட விற்பனை ஆகவில்லை. அப்போது, ஓங்காரேஸ்வரர் கோவிலில் பூஜை நடந்தது. அங்கு வழிபாட்டிற்காக வருபவர்கள், யாராவது பூக்களை வாங்குவர் என்ற எண்ணத்தில், கோவிலில் காத்திருந்தான்.

அப்போது, அங்கு நடக்கும் பூஜையும், அடியார்கள் ஆண்டவனிடம் காட்டிய பக்தியும், வேடனின் மனதைக் கவர, அம்மலர்களை விற்க மனமில்லாமல், சிவபெருமானின் திருவடிகளில், சமர்ப்பித்தான். பின், இரவு முழுவதும் அங்கேயே பட்டினியோடு இருந்து, விடியற்காலை தரிசனத்தை முடித்து, வெளியேறினான். ஆனாலும், அவனுக்கும், அவன் மனைவிக்கும் கோவிலை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. இருவரும் அங்கேயே இருந்து, கோவிலைத் தூய்மை செய்யும் திருத்தொண்டில் ஈடுபட்டனர். சிறிது காலம் ஆனதும், வேடன் இறந்து போனான்; அவன் மனைவியும், கணவனுடன் உடன்கட்டை ஏறினாள்.

மறுபிறவியில், அத்தம்பதி அரச குலத்தில் பிறந்து, தம்பதியாயினர். பூர்வ ஜென்ம வாசனையின் காரணமாக, மன்னருக்கு ஓங்காரேஸ்வரரை தரிசிக்க விருப்பம் தோன்றியது; உடனே, காசிக்கு சென்று, ஓங்காரேஸ்வரரைத் தரிசித்தவருக்கு சிவபெருமானை நேரில் தரிசிக்க ஆவல் ஏற்பட்டது. இதனால், சிவ நாமத்தை உச்சரித்தபடி கடுந்தவத்தில் ஆழ்ந்தார், மன்னர். அவரது தவத்திற்கு மகிழ்ந்து காட்சியளித்த இறைவன், ஒரு அழகான தாமரை மலரை மன்னரிடம் அளித்து, 'இது வாகனமாக இருந்து, உன்னை சகல உலகங்களுக்கும் சுமந்து செல்லும்...' என்று அருளி, மறைந்தார்.

புஷ்பமே வாகனமாக இருந்து சுமந்து சென்றதால், அம்மன்னர், புஷ்பவாகனன் எனப்பட்டார். அவர் மனைவியின் பெயர், லாவண்யவதி. பிரம்மதேவரால் புஷ்பகத் தீவிற்கு மன்னராக்கப்பட்டார், புஷ்பவாகனன்.

ஒருநாள், பிரசேதஸ் முனிவர், அவருடைய அரண்மனைக்கு வந்தார். அவரிடம், 'முனிவர் பெருமானே... இவ்வளவு பெரிய அரச போகமும், உத்தமியான மனைவியும் எனக்கு வாய்க்க காரணம் என்ன?' எனக் கேட்டார் புஷ்பவாகனன்.

உடனே முனிவர், 'மன்னா... போன பிறவியில் நீயும், உன் மனைவியும் வேடத் தம்பதியாக இருந்தீர்கள். அப்போது, ஓங்காரேஸ்வரருக்கு மலர்களைச் சமர்ப்பித்து, திருத்தொண்டு செய்தாய். அப்புண்ணியமே, இப்படிப்பட்ட உயர்ந்த நல்வாழ்வை உனக்குத் தந்ததுள்ளது...' என்றார்.

இதைக் கேட்ட மன்னருக்கு, கண்ணீர் வழிந்தது. 'வேடனான எனக்கு, இப்படிப்பட்ட நல்வாழ்வளித்த ஓங்காரேஸ்வரரைத் தரிசித்து, அவருக்கே தொண்டு புரிய வேண்டும்...' என்று கூறி, தன் பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைத்து, மனைவியுடன் காசியை அடைந்தார்.

ஓங்காரேஸ்வரர் தரிசனமும், தொண்டுமாய் இருந்த அரச தம்பதியரின் வாழ்வு, அங்கேயே முடிந்தது.

கடந்த பிறவிகளில் செய்த புண்ணியம் இப்பிறவியில் கிடைக்கிறது. இது தெரியாமல், மற்றவர்களை பார்த்து, 'தெய்வம் நமக்கு மட்டும் துன்பம் கொடுக்கிறது...' என எண்ணக் கூடாது. நல்லது செய்தால், நல்லது கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நல்லதைச் செய்வோம்; தெய்வம் நமக்கு அருள் செய்யும்!

பி.என்.பரசுராமன்






      Dinamalar
      Follow us