
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.
'சினிமா அற்புதமான கலை; நடிகை என்ற உயர்ந்த இடத்தில், மிக பெரிய மைல் கல்லை தாண்டி விட்டாய். நாங்கள் உனக்கு துணையாக இருக்கிறோம்; நீ, திரைப்படங்களை இயக்கு. பானுமதியை விட திறமையும், திரையுலகத்தை பற்றிய வித்தியாசமான கோணம் உன்னிடம் உள்ளது...' என, சாவித்திரிக்கு தூபம் போட்டனர் மகளிர் அமைப்பினர்.
படம் இயக்குவது சாவித்திரிக்கு கடுமையானது அல்ல; ஆனால், அவரிடம் உள்ள கோபமும், மன இறுக்கமும், இயக்குனர் பாதையை, ஆட்டம் காண செய்துவிடும் என்பதை அவரைப் பற்றி தெரிந்தவர்கள் அறிவர்.
ஆனால், நடிப்பு துறையின் உச்சாணி கொம்பில், முடிசூடா ராணியாக வீற்றிருந்த சாவித்திரியை சலனப்படுத்தி, இயக்குனர் திசைக்கு திருப்பிவிட்ட அந்த மகளிர் அமைப்பினர், சாவித்திரி தடுமாறி விழுந்த காலங்களில், விட்டலாச்சாரியா படக் காட்சியை போல மாயமாகி போயினர்.
கடந்த, 1961ல் இந்தோனேஷியாவில், முதன்முதலாக மது அருந்திய சாவித்திரி, அதை அன்றோடு மூட்டை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில், சாவித்திரி இயக்குனராக முடிவு செய்ததை கொண்டாட, சாவித்திரியின் தோழியர், 'பார்ட்டி'க்கு ஏற்பாடு செய்தனர்.
விருந்தில், தோழியர் எப்படியும் தன்னை வற்புறுத்தி குடிக்க வைத்து விடுவர் என பயந்து, ஜெமினியையும் தன்னுடன் அழைத்துச் சென்றார் சாவித்திரி.
தன்னுடன் ஜெமினி இருந்தால், தோழியர் குடிக்க வற்புறுத்த மாட்டார்கள் என்பது அவரின் நம்பிக்கை.
ஆனால், ஜெமினியோ, சபை நாகரிகத்திற்காக மது அருந்த கூறினார். மறுத்தார்; கோபப்பட்டுப் பார்த்தார் சாவித்திரி. ஆனால், ஜெமினி தான் பிடித்த முயலுக்கு, மூணேகால் என்பதில் உறுதியாக நின்றுவிட்டார்.
சில வேளைகளில், அதிக அன்பு கூட ஆபத்தாக மாறிவிடும். ஜெமினியின் மீது அதிக அன்பு கொண்ட காரணத்தால், அவரால் மறுக்க முடியவில்லை.
இரண்டாவது முறையாக மதுவை ருசித்தார், சாவித்திரி. இப்போது, அவருக்குள் மதுவின் மீது இருந்த அருவருப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருந்தது. தோழியர் அளித்த இந்த விருந்தானது, சாவித்திரியின் வாழ்க்கையில் மறக்க முடியாத விருந்தாக அமைந்தது.
இயக்குனர் அவதாரம் பூச, சாவித்திரியை சந்திப்பதற்கு முன், மகளிர் அமைப்பினர் பெரிய திட்டமிடலையே அரங்கேற்றி இருந்தனர்.
பல துறைகளில் திறமைசாலிகளாக விளங்கிய பெண்கள் பலர் இணைந்து, மகளிர் அமைப்பு ஒன்றை துவங்கியிருந்தனர். இந்த அமைப்பின் சார்பில், நல்ல படங்களை தயாரித்து, அதன் மூலம் வரும் வருவாயை ஓய்வு பெற்ற வயதான, நடிகர் - நடிகையருக்கு உதவியாக தருவது தான் அவர்களது திட்டம்.
அதனால், தாங்கள் தயாரிக்கும் படத்தை, பெண் ஒருவர் தான் இயக்க வேண்டும் என்ற கொள்கையோடு, சாவித்திரிக்கு தூண்டில் போட்டனர்.
அவர்களின் நோக்கம் நல்லதாக இருந்ததாலும், அனைவரும் பெண் என்பதாலும், சாவித்திரி இவர்களின் முகஸ்துதிகளை நம்பி, இயக்குனராக அவதாரம் எடுக்க தயாரானார்.
ஆனால், 'பார்ட்டி' நடத்தி முடித்த கையோடு, அமைதியாகி விட்டனர் மகளிர் அமைப்பினர். படம் தயாரிக்க பணம் தருவதாக கூறிய இவர்களின் பேச்சு, வெறும் பேச்சாகவே இருந்தது. 'முதலில் சாவித்திரி இயக்குனராக வெற்றியடையட்டும்; அதன்பின், தங்கள் அமைப்பு மூலம் படம் தயாரிக்கலாம்...' என ஒரு சிலர் கருத்து கூற, அதனால் பின்வாங்கி விட்டனர் அமைப்பினர்.
'வெளுத்ததெல்லாம் பால்' என்று நம்பிய சாவித்திரி, உண்மையானவர்களை காலம் கடந்து தான் உணர்ந்தார்.
திருவிளையாடல் திரைப்படம், ஜூலை, 31, 1965ல் தமிழகமெங்கும் வெளியானது. அந்த ஆண்டு வெற்றி நடைபோட்ட அத்தனை படங்களின் வசூலையும் புறந்தள்ளி, திருவிளையாடல் படம் வசூலில் விசுவரூபம் எடுத்தது.
படத்தில், சாவித்திரியின் மீனவப் பெண் வேடமும், தட்சன் மகளின் வேடமும், அவருக்குப் பெயரைப் பெற்றுத் தந்தது. தருமியாக நடித்திருந்த நாகேஷ், அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருந்தார்.
திருவிளையாடல் படத்தில், முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த அத்தனைக் கலைஞர்கள் வீட்டிலும், வருமான வரித் துறையினர் ஆய்வு நடத்தினர்.
சாவித்திரி தான் சேமித்து வைத்திருந்த எந்த நகைகளுக்கும் கணக்கு வைத்திருக்கவில்லை; அதற்கான தேவையும் இல்லை என்று அலட்சியத்தில் இருந்து விட்டார். சாவித்திரியின் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள், எந்தவிதக் கணக்கிலும் இல்லை எனக் காரணம் காட்டி, வருமான வரித் துறையினர் அத்தனையும் அள்ளிக் கொண்டனர்.
சரியான ஆடிட்டரும், கணக்கு வழக்குகளைப் பார்க்க நம்பிக்கையான ஆளும் இல்லாததால், சாவித்திரி, வியர்வை சிந்தி சேர்த்த செல்வம் வீணாகப் போனது.
'வருமான வரித் துறையினர் நடத்திய இந்த அதிரடி ஆய்வுக்கு பின், அரசியல் கட்சி பெரும்புள்ளி ஒருவர் கொடுத்த அழுத்தமே காரணம்...' என, அப்போது பரவலாகப் பேச்சு, கசிய ஆரம்பித்தது.
அன்றைய பத்திரிகைகளும், அந்த அரசியல் புள்ளியைப் பற்றிய, 'கிசுகிசு'க்களை தங்களுடைய செய்திகளில் குறிப்பிட்டிருந்தன.
சாவித்திரிக்கு சரியான வழிகாட்டுதல் என யாரும் இல்லாததால், நீதிமன்றம் வரை போய், இந்தப் பிரச்னை இழுத்துக் கொண்டிருந்தது. சாவித்திரிக்குப் பணப் பிரச்னைகள் உருவானதற்கு, வருமான வரித்துறையின் ஆய்வு தான், முதன்மைக் காரணமாகவும் அமைந்தது. இதனால், மனதளவில் பாதிக்கப்பட்டார் சாவித்திரி. நிரந்தரமாக மதுவைத் தேடிப் பயணித்தார்.
'கண்ணா... நான் படங்களை இயக்க முடிவு செய்துருக்கேன்; இதிலே உங்க கருத்து என்ன?' ஜெமினியிடம் கேட்டார் சாவித்திரி.
'உன் திறமை மேலே நம்பிக்கை இருந்தா தைரியமா செய்; கண்டிப்பா நீ வெற்றியடைவாய்...' ஷட்டில் விளையாடியபடி பதில் சொன்னார் ஜெமினி.
நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து, மக்களின் நடிகையாக விளங்கும் சாவித்திரியின் இயக்கத்தில் ஓரு படம் தயாரிக்க வேண்டும் என்று, தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான மதுசூதன ராவுக்கு ஆசை.
ராவ் தயாரிக்கும் படங்களை எல்லாம், ஆதுர்த்தி சுப்பாராவ் என்பவர் தான் இயக்கினார். இந்நிலையில், 1967ல் சாவித்திரியின் இல்லத்திற்கு வந்தார் ராவ். 'இதோ பார் சாவித்திரி... எங்கள் இயக்குனர் வேறொரு படத்தில் பிசியாக இருக்கிறார். நீ எங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து தர வேண்டும்...' என்றார்.
சாவித்திரிக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. திடீரென்று படத்தை இயக்க அழைத்து விட்டாரே என்ற பதற்றம்; ஆனால், மனதிற்குள் மெல்லிய சந்தோஷம். இயக்குனராகலாம் என்று நினைப்பதற்குள், வாய்ப்பு வீடு தேடி வந்து விட்ட மகிழ்ச்சியில் மவுனமானார்.
மதுசூதன ராவுக்கு எந்தப் பதிலையும் சொல்லவில்லை சாவித்திரி. அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று புரியாத நிலையில் திரும்பிப் போனார் ராவ்.
சில நாட்கள் சென்றதும், படப்பிடிப்பு ஒன்றில், ஜெமினியோடு, சாவித்திரி நடித்துக் கொண்டிருந்த போது, மீண்டும் சாவித்திரியை சந்தித்தார் ராவ்.
விஷயத்தைக் கேட்ட ஜெமினி, 'டபுள் ஓகே' சொல்லி, 'கண்டிப்பாக உங்கள் நிறுவனத்தின் படத்தை சாவித்திரி இயக்குவார்; மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளைத் துவங்குங்கள்...' என்றார்.
— தொடரும்.
- ஞா. செ. இன்பா

