PUBLISHED ON : நவ 20, 2016

மீண்டும் உதயமாகும், 'எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்!'
கடந்த, 1956ல், 'எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்' என்ற, பட நிறுவனம் துவக்கி, நாடோடி மன்னன், அடிமைப்பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை தயாரித்து, நடித்தார், எம்.ஜி.ஆர்., பின், அந்நிறுவனத்தின் மூலம், படங்கள் தயாரிக்கப்படாத நிலையில், வரும் ஜனவரியில் எம்.ஜி.ஆரின், 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வளர்ப்பு மகன் அப்புவின் வாரிசுகள், 'எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்' நிறுவனத்தின் மூலம், மீண்டும் படங்கள் தயாரித்து வெளியிட, முடிவு செய்துள்ளனர்.
— சினிமாபொன்னையா
ஷங்கர் படத்தில் பறவைகள்!
ரஜினியை வைத்து, ஷங்கர் இயக்கி வரும், 2.0 படத்தின் கதை, பறவைகளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அத்துடன், இப்படத்தில் வில்லன்களாக
நடித்துள்ள, அக் ஷய்குமார் மற்றும் ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும், ரஜினியுடன், பறவை வேடத்தில் தான் மோதுகின்றனர். மேலும், இப்படத்தில், பல்வேறு விதமான பறவைகள் நடித்திருப்பதால், அவற்றின் குரலை, துல்லியமாக பதிவு செய்வதற்காக, ஆஸ்கர் விருது பெற்ற, 'சவுண்ட் இன்ஜினியர்' ரசூல் பூக்குட்டியை, ஒப்பந்தம் செய்துள்ளார், ஷங்கர்.
— சி.பொ.,
வடசென்னை பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா!
ஆங்கிலோ இந்தியன் பெண்ணான ஆண்ட்ரியா, இதுவரை, 'மாடர்ன்' கதாபாத்திரங்களில் தான், அதிகமாக நடித்துள்ளார். ஆனால், தற்போது, தனுஷ் நடித்து வரும், வடசென்னை படத்தில், வட சென்னை ஏரியாவில், குடிசையில் வாழும் பெண்ணாக நடிக்கிறார். கதைப்படி, அவர் விலைமாதுவாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், குடிசை வாழ் பெண்ணாக மாறி, அவ்வேடத்திலும், தன் வழக்கமான கவர்ச்சியை, வெளிப்படுத்தி நடிக்கிறார். சொருக்குக் கொண்டைக்காரி, சொக்குப்பொடி போடுவாள்!
— எலீசா
அரசியல்வாதியான கேத்ரின் தெரசா!
மெட்ராஸ், கணிதன் மற்றும் கதகளி என, பல படங்களில் நடித்தவர் கேத்ரின் தெரசா. இவர் ஏற்கனவே, சயனைடு என்ற தெலுங்கு படத்தில்,
அரசியல்வாதியாக நடித்திருந்தார்; ஆனால், அவ்வேடம், பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்நிலையில், தற்போது, தெலுங்கில் ராணா நடிக்கும் ஒரு படத்தில், வரிந்து கட்டி, குடுமிபிடி சண்டை போடும், அதிரடி அரசியல்வாதியாக நடிக்கிறார். குருவி கழுத்தில் பனங்காயைக் கட்டித் தொங்கவிட்டது போல!
— எலீசா
அனிருத்துக்கு வந்த கதாநாயகன் ஆசை!
சினிமாவில், கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்ட இசையமைப்பாளர் அனிருத், பின், நடிக்கும் ஆசையை, மூட்டை கட்டி, இசையில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் சிலர் அவரிடம், 'இன்னும், கொஞ்சம், 'வெயிட்' போட்டால், கதாநாயகனாக பெரிய, 'ரவுண்ட்' வரலாம்...' என, ஆசை காட்டினர். இதனால், சில படங்களில், சிறிய வேடங்களில் தலைகாட்டி, 'ட்ரெய்ல்' பார்த்து, நேரம் வரும் போது, இசையமைப்பாளர்கள், ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் விஜய் ஆண்டனி போன்று, கதாநாயகனாக களமிறங்க திட்டமிட்டுள்ளார், அனிருத்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
பிரகாசமான இசை நடிகர், கயல் பட நடிகையுடன், தொடர்ந்து நடித்து வருவதால், அவரது குடும்பத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நடிகர், அம்மணியை, விடுவதாக இல்லை. அதனால், 'முதல் நாயகியாக நடித்தால் தானே பிரச்னை...' என்று, தன் படங்களில், அவரை, இரண்டாவது நாயகியாக நடிக்க வைத்து, படப்பிடிப்பு தளங்களில், அவருடன், மணிக்கணக்கில் கடலை போடுகிறார்.
லயன் படத்தின் முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த அருந்ததி பட நடிகை, தற்போது, மூன்றாவது பாகத்திலும் நடித்துள்ளார். ஆனால், இதில் இன்னொரு நடிகையை, முதன்மை நாயகியாக்கி, அவரை குடும்பத்தலைவி வேடத்தில் நடிக்க வைத்து, 'டம்மி'யாக்கி விட்டனர். இதனால், கடுப்பான நடிகை, சொன்னபடி, படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல், தன் எதிர்ப்பை காட்டியுள்ளார்.
சினி துளிகள்!
* தன் படங்களில், மொட்டை ராஜேந்திரனுக்கு, தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்த ஜி.வி.பிரகாஷ், அடுத்து நடிக்கும் ஒரு படத்தில், வடிவேலுவுடன் கை கோர்த்துள்ளார்.
* 'நான், எந்த படங்களின், 'பிரமோஷன்' நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அப்படம் ஓடாது; அதனால் தான், 'ஆடியோ' நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை...' என்கிறார் நயன்தாரா.
* பாகுபலி இரண்டாம் பாகத்தில், அனுஷ்காவை மையப்படுத்தி தான், மொத்த கதையும் நகர்கிறது.
* சகாவு என்ற படத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக நடிக்கிறார் நடிகர், நிவின் பாலி.
* பாகுபலி பட நாயன் பிரபாஸ் திருமணம், அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது.
அவ்ளோதான்!
