தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : நவ 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச், 1971ல், 'மஞ்சரி' இதழில், பயணக் கட்டுரை எழுத்தாளர், பிலோ இருதயநாத் எழுதியது:

பக்கத்து நாடான திபெத்தின் மீது போர் தொடுத்து, 1959ல் முழுமையாக அந்நாட்டை கைப்பற்றியது, சீனா.

போருக்கு பின், தன் கலாசார புரட்சியையும், 'களையெடு'ப்பையும் திபெத்தில் விஸ்தரித்ததுடன், திபெத் மக்கள், தம் இனத்தாருக்குள், திருமணம் செய்து கொள்ளவும் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவின்படி, திபெத்திய ஆணோ, பெண்ணோ, ஒரு சீனரை தான் திருமணம் செய்ய முடியும். உத்தரவை மீறி நடப்போரை, சீர்த்திருத்த முகாம்களுக்கு அனுப்பி விடும், அரசு. அங்கே, பல்வேறு விதமான போதனை செய்து, சீனருடன் கட்டாய மறுமணம் செய்து வைப்பர்.

முன்பு கட்டாயச் சட்டம் இல்லை. சீனரை மணந்து கொள்ளும், திபெத்தியருக்கு பரிசுகள் மற்றும் சலுகைகள் வழங்கி ஊக்கமளித்தனர். ஆனால், இப்போது, 'திபெத்தியர், சீனரை தான் மணந்து கொள்ள வேண்டும்...' என்ற சட்டமே வந்து விட்டது.

சீன ராணுவத்தினரும், சிவிலியன்களும் திபெத்திற்குள் அதிக அளவில் குடியேற்றப் பட்டனர். அதேசமயம், ஏராளமான திபெத்திய மக்களையும், லாமாக்களையும், 'சீன தரிசனம்' பெறுவதற்காக, சீனாவுக்கு அனுப்பினர். அங்கே, அவர்களுக்கு, 'மா சே துங்' கின் கருத்துகளை போதித்து, பிட்சுக்களின் குணங்களை மாற்றி, சீனப் பெண்களுக்கு மணம் முடித்து வைத்தனர். இதற்கெல்லாம் மசியாதவர்களுக்கு, திபெத்துக்கு திரும்பிச் செல்ல, அனுமதி வழங்குவதில்லை.

கடந்த, 1965ன் இறுதி வரை மொத்தம், 12 லட்சம் சீனர்கள், திபெத்தில் குடியேறியுள்ளனர். இவர்களில், மூன்று லட்சம் பேர் ராணுவத்தினர்; மற்றவர்கள் சிவிலியன்கள்.

இப்போது, திபெத் மக்கள் தொகையில், 50 சதவீதத்தினர் சீனர்கள்; இன்னும், 10 ஆண்டுகளில் கலப்பற்ற திபெத்தியர் என்று சொல்லிக் கொள்ளத்தக்க, யாரும் இருக்க மாட்டார்கள்.

திபெத்தின் ஆன்மிக தலைவரான, 'பஞ்சன்லாமா' துறவி; பிரம்மச்சாரி. ஆனால், அவர், 'வாழ்க்கைத் துணைவி' இல்லாமல் இருப்பது, சீனாவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு சீனப் பெண்ணை, கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டது. ஒரு, 'கம்யூனிஸ்ட்'காரியுடன் இப்போது, அவர், 'வாழ்ந்து' வருகிறார்.

ஜூலை, 1959ல், 'சரஸ்வதி' இலக்கிய இதழில், வல்லிக்கண்ணன் எழுதியது: பத்திரிகைகளில் பணியாற்றி வந்த நான், 1951 முதல், எந்த பத்திரிகை அலுவலகத்திலும் சேராமல், சுயேச்சை எழுத்தாளனாகவே வாழ்கிறேன். 'எழுத்து மூலம், தாராளமாக பணம் சம்பாதிக்க முடிகிறதா...' என்று, அவ்வப்போது பலர் கேட்கத் தான் செய்கின்றனர்.

எழுத்து சோறு போடாது; ஜாலியாக வாழ்வதற்கு பணமும் தராது; இது நிஜம். காபியையும், ஒரு சில இட்லிகளையும், ஒரு வேளை சாப்பாட்டையும், 'விருந்துச் சாப்பாடு' என்று எண்ணி, வேறு கவலைகளுக்கு இடமளிக்காமல், இஷ்டப்படுகிற போது, இஷ்டம் போல் எழுதுவோம்; நினைக்கும் போது, நினைத்த புத்தகங்களை படிப்போம்; இல்லாவிட்டால், ஊர் சுற்றுவோம் என்ற பக்குவ நிலையை, வளர்த்துக் கொள்ள முடியுமானால், நாமே ராஜா; ஏன் கடவுள் என்று வேண்டுமாயினும் நம்பிக் கொள்ளலாம்.

கடவுளை விட மேல் என்று சொல்லக் காரணம், பக்தன் என்று சொல்லி, எவனாவது இறைஞ்சும் போது, அவனைக் காப்பாற்றுவதற்காக, விழுந்தடித்து ஓட வேண்டும், கடவுள். அத்தகைய பொறுப்பு எதுவும் நமக்கு கிடையாதே! உலகத்தை பாதுகாக்கும் கடமை நமக்கு இல்லையல்லவா... இதை வேடிக்கை பார்ப்பதும், அதன் மூலம் நமக்கு ஏற்படுகிற உணர்ச்சிகளை எழுதி வைப்பதும் தானே நம் வேலை!

'அமிர்த குண போதினி' 1928ம் ஆண்டு இதழ் தொகுப்பில், பாரதி பற்றி, அவருடன் பழகிய புதுச்சேரிவாசி எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு எழுதியுள்ள கட்டுரையிலிருந்து: புதுச்சேரியில் பாரதியார் நடத்தி வந்த, 'இந்தியா' மற்றும் 'விஜயா' போன்ற பத்திரிகைகள் நின்று போன பின், அவர்,

'சுதேசமித்திரன்' இதழில், காளிதாசன் மற்றும் சக்திதாசன் என்ற புனை பெயர்களில், பெரும் விஷயங்களையும், கற்பனைக் கதைகளையும் எழுதி வந்தார். மேலும், 'பாரத ஜனசபை' என்னும் தலைப்பில் காங்கிரஸ் மகாசபையின், ஆதி வரலாறுகளையும், காங்கிரசின் நடவடிக்கைகளையும், சுருக்கமாக விவரித்து, இரண்டு பாகங்களாக இயற்றினார்.

இதனால், 'பாரதியாரை பிடித்துக் தருவோருக்கு, 100 ரூபாய் பரிசு தரப்படும்...' என்று காவல் நிலையங்களில் விளம்பரம் ஒட்டப்பட்டது. அதில், அவரது உயரம் இத்தனை அடியென்றும், கஞ்சா மற்றும் புகையிலை உபயோகிப்பவரென்றும், பூணூல் எடுத்து விட்டவரென்றும், இன்னும் பல குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us