PUBLISHED ON : ஜன 22, 2017

முதல்வரிடம் கோரிக்கை வைத்த தமிழ் சினிமாக் குழு!
முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்த, தமிழ் சினிமாக் குழுவினர், 'நூறு ஆண்டுகளை கடந்து விட்ட, இந்திய சினிமாவின் தலைநகரமான சென்னைக்கு அடையாளம் வேண்டும். அதனால், சினிமா ஜாம்பவான்களின் பெயரில், ஆங்காங்கே, வளைவுகள் வைக்கப் படுவதுடன், தமிழ் சினிமாவுக்கென்று, அருங்காட்சியகம் வைக்க வேண்டும்...' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
சினேகாவின் வேண்டுகோள்!
குழந்தை பெற்ற கையோடு, தன் உடல் கட்டை கட்டுக்கோப்பாக மாற்றியுள்ள சினேகா, மறுபடியும், சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி விட்டார். முதல் கட்டமாக, சேனல்களில் முகம் காட்டி வருபவர், தற்போது, சில இளவட்ட இயக்குனர்களை தொடர்பு கொண்டு, பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார். அப்படி சந்திக்கும் இயக்குனர்களிடம், 'இப்போதும், நான் இளமையாகத் தான் இருக்கிறேன்; அதனால், அம்மா மற்றும் அண்ணி என்று வயதான வேடங்கள் கொடுக்காமல், என் இளமைக்கு பங்கம் ஏற்படாத, கதாபாத்திரங்களாக கொடுங்கள்...' என்று, வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னை ஒளித்து ஒரு வஞ்சனை இல்லை.
— எலீசா
விஜய் ஆண்டனியின் நன்றிக்கடன்!
விஜய் ஆண்டனியை, டிஷ்யூம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர், இயக்குனர் சசி. அந்த நன்றி கடனுக்காக, பிச்சைக்காரன் படத்தை, இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்து, அப்படத்தை தயாரித்து, நடித்தார், விஜய் ஆண்டனி. அதேபோல், தான் இசையமைப்பாளராக அறிமுகமான கால கட்டத்தில், சீரியல்களில் இசையமைக்க தனக்கு வாய்ப்பளித்த, நடிகை ராதிகாவின், 'ராடன்' நிறுவனத்துக்காகவும், ஒரு படம் நடித்துக் கொடுக்கயிருக்கிறார்.
— சி.பொ.,
கமர்ஷியல் இயக்குனர்களை, 'அட்டாக்' செய்யும் மஞ்சிமா மோகன்!
சிம்புவுடன், அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த மஞ்சிமா மோகனுக்கு, முதல் படம், 'ஹிட்'டாக அமைந்ததால், உற்சாகத்தில் உள்ளார். மலையாள சினிமாவில் இருந்து, தமிழில், கொடி நாட்டியுள்ள, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் பாணியில் தானும், முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காக, தீவிர படவேட்டையில் இறங்கியுள்ளார். அத்துடன், சில கேரளத்து நடிகைகளை போன்று, 'கணுக்கால் கவர்ச்சி கூட, காட்ட மாட்டேன்...' என்று பிடிவாதம் செய்யாமல், 'கதைக்கு தேவையான கவர்ச்சியை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன்...' என்று, கமர்ஷியல் இயக்குனர்களுக்கு, சாதகமான பதிலை வெளியிட்டுள்ளார். கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
— எலீசா
மீண்டும் தமிழுக்கு வரும் சோனாக் ஷி சின்ஹா!
மலையாளத்தில், மம்மூட்டிக்கு ஜோடியாக, நயன்தாரா நடித்த படம், பாஸ்கர் த ராஸ்கல். அப்படத்தை, தற்போது, அரவிந்த்சாமியை வைத்து, தமிழில், ரீ - மேக் செய்கின்றனர். இப்படத்தில், நயன்தாராவை நடிக்க அழைத்த போது, 'ஏற்கனவே நடித்த வேடத்தில், மீண்டும் நடிக்க விரும்பவில்லை...' என்று மறுத்து விட்டார். அதையடுத்து, நயன்தாரா நடித்த அவ்வேடத்தில், இந்தி நடிகை, சோனாக் ஷி சின்ஹா நடிக்க இருக்கிறார். ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு!
— எலீசா
மாணவர் பிரச்னையை சொல்லும் சமுத்திரகனி!
சாட்டை மற்றும் அப்பா படங்களில், பள்ளி மாணவர்கள் பிரச்னைகளை கூறிய சமுத்திரகனி, தற்போது, தொண்டன் படத்தை, சாமானிய மக்கள் பிரச்னையை மையமாக வைத்து இயக்கி, நடித்து வருகிறார். இப்படத்திலும், மாணவர்கள் பிரச்னையை இணைத்துள்ளவர், மாணவர்கள் இப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே, கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனைகள்!
டார்லிங் பட நடிகைக்கு, கோலிவுட்டில் எதிர்பார்த்த திருப்பங்கள் அமையவில்லை. அதனால், காஞ்சனா நடிகர் நடித்துள்ள படத்தில் துகிலுரிந்து நடித்துள்ளார் அம்மணி. அதில், சில காட்சிகள், ஆபாச எல்லையை தொட்டு விட்டதால், அக்காட்சிகள் தியேட்டருக்கு வந்தால், தன்னை, காமக் கொடூர நடிகை பட்டியலில் சேர்த்து விடுவரோ என பயந்து, அக்காட்சிகளை கத்தரிக்குமாறு, படக்குழுவை கேட்டு வருகிறார்.
மீண்டும், காமெடி, 'ட்ராக்'கில் குதித்துள்ள புயல் காமெடியன், கதைக்கு முக்கியத்துவமுள்ள வேடம் மற்றும் கதாநாயகர்களுடன் படம் முழுக்க பயணிக்கும் வேடமாக இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். அத்துடன், முன்னணி கதாநாயகர்களுக்கு செய்யும் அனைத்து தடபுடல் கவனிப்புகளும் தனக்கும் வேண்டும் என்று, கன்டிஷன் போடுகிறார்; அதில், சிறிய குறை இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களுடன், காரசாரமாக மோதுகிறார். இதனால், பட்ஜெட் பட நிறுவனங்கள், நடிகரை நெருங்க முடியாத அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சினி துளிகள்!
* வடிவேலு நாயகனாக நடிக்கும், இம்சை அரசன் 23ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் படம், விரைவில் துவங்கயிருக்கிறது.
* டார்லிங் படத்தையடுத்து, அடங்காதே படத்தில், மீண்டும், ஜி.வி.பிரகாஷுடன் இணைந்துள்ளார், நிக்கி கல்ராணி.
அவ்ளோதான்!
