PUBLISHED ON : மார் 19, 2017

'பில்டப்'பை விரும்பாத விஜயசேதுபதி!
கதாநாயன் என்றாலே, 'ஓப்பனிங்' காட்சி முதல், பட இறுதி வரை, அவ்வப்போது, 'பில்டப்' கொடுக்கும் காட்சிகள் இருக்க வேண்டும் என்பர்; ஆனால், விஜயசேதுபதியோ, அத்தகைய காட்சிகள் தன் படங்களில் இடம்பெற்றால் மாற்ற சொல்கிறார். காரணம், 'நான் சராசரி கதாநாயகன்; அதனால், யதார்த்தமான காட்சிகளில் நடிப்பதையே, ரசிகர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விரும்புவதை செய்வதே, எனக்கு நல்லது...' என்கிறார்.
— சி.பொ.,
விஜய் நடிக்கும் துப்பாக்கி - 2!
விஜய் நடிப்பில், துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை இயக்கியவர், ஏ.ஆர்.முருகதாஸ். அடுத்தபடியாக, அஜித் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஆசைப்பட்டார்; ஆனால், தன் கைவசம் படங்கள் இருப்பதால், மறுத்து விட்டார், அஜித். அதனால், மறுபடியும், விஜய் நடிப்பில் படம் இயக்கும் முருகதாஸ், அப்படத்தை, துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இயக்க தயாராகிறார்.
— சி.பொ.,
படம் முழுக்க ஒரே காஸ்டியூமில் நடித்த நயன்தாரா!
அறம் படத்தில், கலெக்டராக நடித்துள்ளார், நயன்தாரா. இப்படம், ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகியிருப்பதால், அப்படத்தில் நடித்த, 40 நாட்களுமே, ஒரே காஸ்டியூம் அணிந்து நடித்துள்ளார். அத்துடன், நானும் ரவுடி தான் படத்தை அடுத்து, இப்படத்திலும் தனக்குத் தானே, 'டப்'பிங் பேசுகிறார். கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது!
— எலீசா.
ஆக் ஷன் கதாநாயகனாகும் ஜி.வி.பிரகாஷ்!
ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த கதைகளில் நடித்து வந்த, ஜி.வி.பிரகாஷ்குமார், அடங்காதே படத்தில், அரசியல் கதையில், சில ஆக் ஷன் காட்சிகளில் நடித்துள்ளதை, தொடர்ந்து, ரவிஅரசு இயக்கும், ஐங்கரன் என்ற படத்தில், அதிரடி ஆக் ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். ஆக் ஷன் கதாநாயகனாக அங்கீகரிக்கப்பட்டு விட வேண்டும் என்பதற்காக, சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு முன், முறையான பயிற்சி எடுத்த பின், கேமரா முன் வருகிறார்.
— சி.பொ.,
கறுப்பு பூனை!
அகர்வால் நடிகையின் மார்க்கெட், மறுபடியும் எகிறி நிற்பதால், சம்பளத்தை படத்துக்கு படம் உயர்த்தி வருகிறார். அத்துடன், இரண்டாம் தட்டு கதாநாயகர்களையும், ஏறக்கட்டி வரும் நடிகை, மேல்தட்டு கதாநாயகர்களுடன், 'மிட் நைட்' பார்ட்டிகளில், விஜயம் செய்வதோடு, குத்தாட்ட கோதாவிலும் இறங்குகிறார். அதேசமயம், அம்மாதிரி சமயத்தில், யாராவது தன்னை, மொபைல் போனில், 'வீடியோ' எடுத்தால், டென்ஷனில் அதை பிடுங்கி, கீழே எறிந்து உடைத்து, தன் கோபத்தை காட்டுகிறார்.
தளபதி நடிகருக்கு, கடைசியாக நடித்த படம் தோல்வி அடைந்தது, பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதனால், தற்போது, நடித்து வரும் படத்தில், கதை மற்றும் காட்சிகளில் ஏகப்பட்ட திருத்தம் செய்ய சொல்லி வருகிறார். இதனால், சில நாட்களில், அவருக்கும், இயக்குனருக்கும் இடையே, கருத்து மோதல் ஏற்பட்டு, படப்பிடிப்பு மணிக்கணக்கில் நிறுத்தப்படுகிறது. பின், இயக்குனர் தன் வழிக்கு இறங்கி வந்த பின் தான், கேமரா முன் வருகிறார் தளபதி.
தாரா நடிகையுடன், 'டூயட்' பாட வேண்டும் என்பது, மெரினா நடிகரின் கனவாக இருந்து வந்த நிலையில், தற்போது, ஒரு படத்தில் அவருடன் இணைந்து விட்டார். ஆனபோதும், நெருக்கமான காட்சிகளில், நடிகர், காற்றுப்புகா வண்ணம் நடிக்க நினைத்தால், நடிகையோ, 'செக்போஸ்ட்' வைக்கிறார்; இதனால், 'ரொமான்ஸ்' காட்சிகளில், அவருடன், முணு முணுத்தபடியே நடிக்கிறார் நடிகர்.
சினி துளிகள்!
* விஜயின், 61வது படத்தில் நடிப்பதால், செம உற்சாகத்தில் இருக்கிறார், காஜல் அகர்வால்.
* சிவகார்த்திகேயனின், வேலைக்காரன் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சினேகா.
* அண்ணனுக்கு ஜே படத்தில், அரசியல்வாதியாக நடிக்கிறார், , நடிகர், தினேஷ்.
* தொண்டன் படத்தில், ஆம்புலன்ஸ் டிரைவராக நடிக்கிறார், சமுத்திரக்கனி.
* பலூன் மற்றும் தரமணி படங்களில் நடித்துள்ள அஞ்சலி, அடுத்தபடியாக, டார்ச்லைட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
* சதுரங்கவேட்டை வினோத் இயக்கி வரும், தீரன் அதிகாரம் படத்தின் படப்பிடிப்பு, ராஜஸ்தானில் நடக்கிறது.
* விஸ்வரூபம் மற்றும் உத்தமவில்லன் உட்பட, பல படங்களில் நடித்த பூஜா குமார், பிரவுன் இன் செல் பிளாக் 99 என்ற ஹாலிவுட் படத்தில், ஹாலிவுட் நடிகர் வின்ஸ்வாகனுடன் நடிக்கிறார்.
* விஜயசேதுபதி நடிக்கும், கருப்பன் படத்தில், வில்லனாக நடிக்கிறார், பாபி சிம்ஹா.
அவ்ளோதான்!
