தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குரு வாக்கே வேத வாக்கு!

குரு வாக்கே வேத வாக்கு!

குரு வாக்கே வேத வாக்கு!


PUBLISHED ON : மார் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பக்தி நெறியுடன், வாழ்வியல் கொள்கைகள் குறித்து, தன் சீடர்களுக்கு நல்வழி காட்டுபவர், குருநாதர். அத்தகைய குருவின் வழிகாட்டுதலை கடைப்பிடிப்பவர் வாழ்வில், என்றும் தோல்வி ஏற்படுவதில்லை.

ஸ்ரீராமரின் முன்னோர்களில் ஒருவரான திலீபன் என்ற மன்னர், புத்திர பாக்கியம் இல்லாமல் வருந்தி, குருநாதரான வசிஷ்டரிடம், தன் குறையை சொல்லி வேண்டினார்.

'மன்னா... ஒருசமயம் நீ, தேவலோகம் சென்றிருந்த போது, தெய்வப்பசுவான, காமதேனுவை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தினாய்; அதன் சாபமே, உன்னை இவ்வாறு வருத்துகிறது. என் ஆசிரமத்தில் உள்ள காமதேனுவின் கன்றான நந்தினியை, நன்கு பரிபாலனம் செய்து வா... உன் குறை தீரும்...' என்றார், வசிஷ்டர்.

மன்னரும், கைகளில் வில்லும், அம்புமாக நந்தினியை மேய்த்து, பாதுகாக்க துவங்கினார்.

ஒருநாள், மேய்ச்சலை முடித்து, ஒரு மரத்தின் கீழ் நந்தினி நின்றிருந்த போது, அதன்மீது திடீரென்று ஒரு சிங்கம் பாய்ந்தது. அதைப் பார்த்த மன்னர், வில்லில் அம்பை பூட்டி, சிங்கத்தை வீழ்த்த முயல, அது அசுரான மாறியது.

'யார் நீ...' என்றார்.

'மன்னா... சிவபெருமானுடைய சேவகர்களில் ஒருவனான என் பெயர் கும்பாசுரன். இம்மரம், அன்னை பார்வதிதேவிக்கு பிரியமானது. இதை பாதுகாத்து வரும்படி, அவர் எனக்கு கட்டளையிட்டுள்ளார். இம்மரத்தின் அடியில் மாடுகள் புல் மேய்வதோ, படுப்பதோ, தங்கள் தினவை தீர்த்து கொள்ள இதில் உரசுவதோ தவறு; அவ்வாறு செய்பவற்றை இரையாக்கி கொள்வேன்; அதனால், இப்பசுவும், எனக்கு இரையாக வேண்டியது தான்...' என்றான்.

'உன் எண்ணம் நிறைவேறாது; உன்னுடன் போரிட்டாவது, நந்தினியை காப்பேன்...' என்றார், மன்னர்.

'வீரமும், சித்திகளும் பெற்ற என்னுடன் சாதாரண மனிதனான நீ, போரிடுவதா... நந்தினியுடன் சேர்ந்து, நீயும் உயிர் துறந்து விடாதே...' என்றான், கும்பாசுரன்.

மன்னரும் விடாமல்,'இதை காப்பாற்ற நான் என்ன செய்ய வேண்டும்; அதை சொல்...' என்றார்.

'நீ, எனக்கு உணவாக வேண்டும்...' என்றான் அசுரன். உடனே, தன் கையிலிருந்த ஆயுதங்களை கீழே போட்டு, அசுரனுக்கு இரையாக தயாரானார்.

அப்போது, ஆகாயத்தில், பெரும் ஜோதி ஒன்று தோன்ற, அதன் நடுவில், காட்சியளித்த தேவி, 'மன்னா... நான் தான் காமதேனு; யாருடைய உள்ளம் உயிர்களுக்காக இரங்குகிறதோ, அவர்கள் மீது, என் அருட்பார்வை பதியும். இந்த கன்றை காப்பதற்காக, உயிரையே துறக்க துணிந்த உனக்கு, நற்குண சீலனான, ஆண் குழந்தை பிறக்கும்; உன் வம்சம், கீர்த்தியுடன் விளங்கும்...' என்று கூறி மறைந்தாள். அவள் வாக்கின்படியே, இவ்வம்சத்தில், ஸ்ரீராமர் அவதரித்தார்.

குரு சொல்லை காப்பாற்றுவது, உயிர்களிடம் கருணை மற்றும் நல்லதை கடைப்பிடிப்பதன் மூலம் நம் வாழ்விலும் நல்லதே நடக்கும்!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

ஒரு காலால், மற்றொரு காலை, தேய்த்து கழுவக் கூடாதா?

காலின் கீழ் பாகம், உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புடனும் தொடர்பு கொண்டது. கால் மேல் கால் வைத்து தேய்க்கும் போது தேவையற்ற அழுத்தம் கொடுப்பதால், சம்பந்தபட்ட உறுப்பு பாதிப்புக்குள்ளாகும். எனவே, ஒரு காலை, மற்றொரு காலால் தேய்த்து கழுவக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us