தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

என், வயது, 24; திருமணமாகி இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சிறு வயதிலிருந்தே மிகவும் கட்டுப்பாடோடு வளர்க்கப்பட்டவள் நான். அப்பா, மிகுந்த கோபக்காரர்; அம்மா கட்டுப்பெட்டி.

என், 14வது வயதில், காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் ஏமாற இருந்தேன்; எப்படியோ, என் பெற்றோருக்கு தெரிந்து, என்னை அடித்து, உதைத்து, மிரட்டி, அந்த படு குழியில் விழாமல் காப்பாற்றினர். அதன்பின், எந்த ஆண்மகனிடம் பேசக் கூடாது என்று கடுமையாக தடைவிதித்தனர்.

என், 18வது வயதில், விதி மீண்டும் விளையாடியது. திருமணம் ஆன ஒருவன் காதலிப்பதாய் சொன்னான்; பெற்றோரை பழி வாங்க, அவனுடன் ஓடி போய், அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில், அவனை காதலித்தேன். என் அண்ணன் மூலம், விஷயம் வீட்டுக்கு தெரிந்து, மீண்டும், பெற்றோரின் கண்டிப்புக்கு ஆளானேன்.

அதனால், பிளஸ் 2வில், 1,105 மதிப்பெண்கள் எடுத்திருந்தும், கல்லூரி செல்ல அனுமதிக்கவில்லை. பின், கெஞ்சி கூத்தாடி, அஞ்சல் வழி கல்வி பயில அனுமதி பெற்றேன். என் விருப்பத்தை கேட்காமலேயே, திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்த நரகத்தில் இருந்து தப்பிக்க எண்ணி, நானும், தலையாட்டினேன்.

என் கணவர் கறுப்பாக, சுமாராக இருப்பார். என்னை விட, இரண்டு இஞ்சு தான் உயரம் அதிகம். ஆனால், இதெல்லாம் அப்போது என் கண்ணிற்கு தெரியவில்லை. கடைஞ்சு எடுத்த சுயநலவாதி, என் கணவர். ஆரம்பத்தில் இருந்தே, என்னை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அவர் உறவினர்கள் முன், என்னை மட்டம் தட்டி பேசுவார். எப்படியெல்லாம், என் கணவன் இருக்கணும் என ஆசைப்பட்டேனோ, அதில் ஒரு சதவீதம் கூட, இவர் இல்லை. 'என்கிட்ட அன்பா இருங்க; அக்கறையா கொஞ்ச நேரமாவது பேசுங்க; அது போதும்...' என்று காலில் விழுந்து கெஞ்வேன். அப்போதெல்லாம், 'நான் அன்பா தான் இருக்கேன்'னு இயந்திரத்தனமா சொல்வார்; ஆனா, மாற மாட்டார்.

அவரை பொறுத்தவரை, நான் நல்ல சமையல்காரி, வேலைக்காரி, பிள்ளைகளுக்கு ஆயா; ராத்திரியில் பொண்டாட்டி.

எங்களுக்குள் சண்டை நடக்கும் போதெல்லாம், 'எல்லா பிரச்னைக்கும் நீ தான் காரணம்... முதல்ல உன்னை நீ மாத்திக்க...' என, 'அட்வைஸ்' செய்வார். அவருக்கு, இந்த உலகத்தையே காப்பாற்ற வந்த அவதார புருஷன்னு நினைப்பு. அவர் எதுவுமே செய்யாதது போலவும், எல்லாத்துக்கும் நான் தான் காரணம் என்பது போன்று பேசுவார். என்னால், என்னையும் மாற்றிக்க முடியல; அவரையும் மாற்ற முடியல. அவரோட சுயநலத்த ஒழித்து கட்ட, என்ன வழின்னும் தெரியல.

அவர் என்ன செய்தாலும், கோபப்படாமல், கண்டு கொள்ளாமல் இருந்தால் தான், என்மீது அன்பு காட்டுவாராம்; இல்லையென்றால், அன்பு வராதாம்!

அம்மா... இவரை பற்றி யோசனை செய்தே, நான் மன நோயாளியாகவே ஆயிட்டேன். இப்பெல்லாம் எது செய்தாலும் குழப்பமாகவே இருக்கு. என் கலகலப்பு பேச்சு எல்லாமே போச்சு. எனக்கு நீங்க தான் வழி சொல்லணும்.

என் குழந்தைகளை விட்டுட்டு சாக துணிவில்லை; என் சந்தோஷங்களை விட்டு விட்டு வாழவும் முடியல; இவரை மாற்றவும் முடியலை.

படிப்பும் இல்லை; பணமும் இல்லை; நான் என்ன செய்ய? இன்று வரை, என் வாழ்க்கையை நான் வாழவில்லை.

எனக்கு நல்ல வழி சொல்லுங்கள்.

— இப்படிக்கு,

உங்கள் அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —

எந்த பெற்றோரும் தன், 'டீன் - ஏஜ்' மகள் காதலில் ஈடுபடுவதை அனுமதிக்க மாட்டார்கள்; அப்படித்தான், உன் பெற்றோரும் இருந்திருக்கின்றனர். அவர்கள் கண்டிக்கும் அளவில் தான், உன் நடத்தையும் இருந்துள்ளது.

பெற்றோரின் கண்டிப்பால் தான், காதல்களில் ஈடுபட்டேன் என, நீ கூறுவது சால் ஜாப்பு. இரு முறையற்ற காதல்களில் ஈடுபட்ட நீ, வீட்டு நரகத்திலிருந்து தப்பிக்க, யாரையாவது திருமணம் செய்து கொள்வோம் என, பிதற்றியுள்ளது, மகா அபத்தம்.

அம்மா, அப்பா முதல், கட்டிய கணவன் வரை அனைவரையும் குறை கூறுகிறாய். பிறரை குறை காண்பதையே சுவாசமாக வைத்திருக்கும் நீ, என்றைக்காவது, உன் தவறுகளை உணர்ந்து, திருத்திக் கொள்ள முயற்சித்திருக்கிறாயா... உன் கணவர் சுயநலவாதி என்றால், நீ பக்கா சுயநலவாதி. உன் கோபம், பிடிவாதம், குறை காணும் குணம் மற்றும் எதிர்மறை எண்ணங்களும் தான், உன் கணவரை ஏட்டிக்கு போட்டியாக செயல்பட வைக்கிறது.

எப்போதும் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையே பார்க்காதே; வெளிச்ச பக்கங்களையும் பார். பெற்றோர் மற்றும் கணவரிடம் இருக்கும் நல்ல குணங்களை இனம் கண்டு, அவைகளை பாராட்டு; நீ அவர்களிடம் அணுகும் முறையை, பதவிசாக மாற்று.

திருமணத்திற்கு முன், நீ கொண்ட காதல்களால் உன் வாழ்க்கை தடம் புரண்டு, உனக்கு முறைப்படி, திருமணம் ஆகாமலே போயிருந்தால், என்ன செய்வாய்? உன் தவறுகளை மன்னித்து, இறைவன் உனக்கு முறையான திருமண உறவையும், இரு ஆண் குழந்தைகளையும் பரிசளித்துள்ளான். அதற்காக, இறைவனுக்கு நன்றி கூறு.

உன் கோபம் தான் உனக்கு சத்ரு; சாந்தம், சமாதானம், சாத்வீகமாக உன் கணவரிடம் குடும்பம் நடத்தப் பார்.

உன் தேவைகளை, கனிவான குரலில் கேள்; நிச்சயம் கிடைக்கும். 'என்கிட்டே அன்பாயிரு...' என, கணவரிடம் பிச்சை கேட்க வேண்டாம். உன் மாற்றியமைக்கப்பட்ட உடல் மொழியும், 'டெசிபல்' குறைந்த கண்ணிய பேச்சும், உன் கணவரை, உன்னிடம் அன்பாய் இருக்க வைக்கும். 'நம் உறவினர்களிடம், என்னை விட்டுக் கொடுத்து பேசாதீர்கள் ப்ளீஸ்...' என, கணவரை கொஞ்சு. கணவர், உன்னை ஒரு நாளும் விட்டு கொடுக்க மாட்டார்; உன் கணவரின், 'சாடிஸ்ட்' பேச்சுகள் காணாமல் போகும்.

உன் கோபத்தை குறைக்க, யோகா வகுப்புக்கு போ. உணவில் காரத்தையும், உப்பையும் குறை. அடங்கிப் போவது அடிமைத்தனமல்ல; எதிராளியை கைக்குள் வைக்கும் யுக்தி என உணரு. வாடகை நூலகத்தில் உறுப்பினராகி, புத்தகங்கள் வாசி.

இரு மகன்களை, ஆசையாய், பாசமாய் வளர்.

நீ மட்டும் உலகமல்ல; சுற்றி இருக்கும் அனைவரையும் அனுசரித்து வாழ கற்றுக் கொள்; தற்கொலை எண்ணம் கோழைத்தனமானது; சுயநலமும், தற்கொலை எண்ணமும் உள்ள பெண், தானும் உருப்படமாட்டாள்; தன் குடும்பத்தையும் உருப்பட விடமாட்டாள். உனக்குள் ஒளிந்திருக்கும் கெட்ட எண்ணங்களை தேடி எடுத்து, குப்பையில் கொட்டு; கோபத்தால் அழிந்தவர் கோடி; வாழ்ந்தவர் யாருமில்லை மகளே!

என்றென்றும் தாழ்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us