தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நலத்தை விற்றா நலன்களை அடைவது!

நலத்தை விற்றா நலன்களை அடைவது!

நலத்தை விற்றா நலன்களை அடைவது!


PUBLISHED ON : மார் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எப்போதாவது, யாராவது கீழ்காணும் வாக்குமூலத்தை சொல்ல கேட்டிருப்பீர்கள்... 'நல்ல உழைப்பாளி... ஆனா பாருங்க, உடம்பை பாத்துக்கல; இப்ப அவதிப்படுறாரு!'

தொலைக்காட்சியில் நான் மிகவும் விரும்பி பார்ப்பது, மருத்துவர்களின் உரைகள், பேட்டிகள் மற்றும் நேயர் கேள்விகளுக்கு, அவர்கள் கூறும் பதில்கள்!

பல நேரங்களில், 'இப்படி கூட இருப்பரா...' என்று, எண்ணும் அளவுக்கு நேயர்கள் சிலரின் வாக்குமூலங்கள் இருக்கும்.

'ரெண்டு மாசமா, நெஞ்சு வலி டாக்டர்...'

'மருத்துவரை பாத்தீங்களா?'

'இல்ல டாக்டர்...'

'ஏன் காண்பிக்கல?'

'வாயு பிடிப்பா இருக்கும்ன்னு நெனைச்சேன்; இப்ப, வலி விடாம தொடர்ந்து இருக்கு; தாங்க முடியல...'

இரண்டு வார நெஞ்சு வலிக்கு, 'டிவி' மருத்து வரிடம், தொலைபேசியில் மருத்துவ யோசனை கேட்கும் இவரை எந்த ரகத்தில் சேர்ப்பது?

நெஞ்சில், 'சுருக்' என்றதுமே, 'படக்'கென எழுந்து, மருத்துவமனைக்கு ஓட வேண்டாமா...

'எங்கே அந்த வியாதி, நமக்கு இருந்து விடுமோ, ஏதும் பெரிய செலவாக வைத்து விடுவரோ... பணத்திற்கு எங்கே போவது...' போன்ற கேள்விகளே, இவரைப் போன்றோரின் கை, கால்களை விலங்கிடுகின்றன போலும்!

வியாதி என்று இருந்தால், செலவு என ஒன்று வந்தால், அதற்கு, எப்படியும் வழி கிடைக்கும். விடியல் வரும்; தீர்வும் உண்டு. பெரும்பாலானவர்களின் விஷயத்தில், இப்படித்தான் நடந்திருக்கிறது.

என் நண்பரின் மகன், பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழில் செய்கிறார். ஒருநாள், அவரை அழைத்து, 'போதும், பத்து, பன்னிரெண்டு வருஷமாய் உழைத்தது... கடன் வாங்கு; உனக்கு, கண்ணாடி கதவுகளால் ஆன, கேபினை உருவாக்கு; ஊழியரை நியமி. நீ பார்க்கும் தொழில், நுரையீரலை பாதிக்கும் தன்மை கொண்டது. நீ, நிர்வாக பணிகளில் கவனத்தை அதிகரி. உன் மதிப்புமிக்க நேரம், எவர் வேண்டுமானாலும் செய்யக் கூடிய விஷயத்தில் விரயமாகிறது. உற்பத்தியை உயர்த்து; உடல்நலம் போற்று...' என்றேன்.

நான் சொன்னதற்கு, நல்ல பலன்; தற்போது, அவர் செவி சாய்த்திருப்பதாக, நண்பர் சொன்னார்.

வெள்ளைக்காரன் இங்கிருந்து நம்மை ஆண்டது போதாது என்று, இன்று, அவன் தேசத்திலிருந்தே நம்மை ஆள்கிறான்.

தோல் பதனிடும் தொழிற் சாலைகளை நம்மிடம் தள்ளி, நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தினான்; சாயப்பட்டறைகளை நமக்கு தந்து, நீர் ஆதாரங்களை கெடுத்தான்.

இவ்விஷயங்களில், நாம் இன்று விழித்து கொண்டதால், மென் பொருள் (சாப்ட்வேர்) என்றும், மருத்துவ குறிப்புகள் என்றும் நம் இளைஞர்களை, 12 முதல், 14 மணி நேரம் பிழிந்தெடுக்கிறான்.

'எனக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா... எவன் குடுப்பான் இவ்வளவு...' என்று, நம்மவர்களும் வீடு தங்காமல், விடுமுறை எடுக்காமல், உழைத்து மாள்கின்றனர்.

விளைவு... இளம் வயதிலேயே, இதய நோயாளியாகின்றனர்; 'ஸ்ட்ரெஸ்' மற்றும் 'டிப்ரஷன்' என்கின்றனர்.

மன மகிழ்ச்சி என்பது, சம்பாதிப்பதில் மட்டுமே இருப்பதாக நம்புவோர், விளக்கொளியில் மாயும் விட்டில் பூச்சிகளே!

உழைக்க மட்டுமல்ல; களைப்புறவும் கற்று கொள்ள வேண்டும்.

நண்பர் மகனுக்கு சொன்னது தான், மற்றவர்களுக்கும்!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us