தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நோயற்ற வாழ்வு பெறுவோம்!

நோயற்ற வாழ்வு பெறுவோம்!

நோயற்ற வாழ்வு பெறுவோம்!


PUBLISHED ON : மார் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச் 20 — சீதளா அஷ்டமி

பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை எட்டாம் திதி, அஷ்டமி எனப்படும். இதை, சீதளா அஷ்டமி என்பர். 'சீதளம்' என்றால் குளிர்ச்சி. இத்திதி, பங்குனி மாதத்தில் முக்கியத்துவம் பெறும். காரணம், இது, கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவர், மக்கள்.

ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவர். காரணம், அது பாலைவனப்பகுதி என்பதால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சீதளாதேவி வழிபாட்டை மேற்கொள்வர். தமிழகத்தில், சீதளாதேவியை, மாரியம்மன் என்கிறோம்.

சீதளாதேவி என்ற பெயரில், தமிழகத்தில் சென்னையிலுள்ள மடிப்பாக்கம் அருகில் ராம்நகரிலும், திருவாரூர் காகிதக்கார தெரு மேற்குப் பகுதியில் உள்ள சக்திபுரத்திலும் கோவில்கள் உள்ளன.

ஒரு சமயம், தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள், தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன், தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர், தேவர்கள். உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினிதேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை.

எனவே, சிவபெருமானை சரண் அடைந்து, தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி தோன்றியது.

பார்வதியின் அம்சமாக மாறிய அந்த ஒளி, சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது. இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். 'சீதளாஷ்டகம்' எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்பநோய் தீரும் என அருள்பாலித்தார்.

அம்பாளின் சிரசு, முறத்தினாலும், கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன், கழுதை வாகனத்தில் காட்சி தருகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில், அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது, 'சீதளாயை நமஹ' என்று வருகிறது.

சீதளாதேவிக்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி; குறிப்பாக, பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி. இந்நாளில் சீதளாதேவியையோ, மாரியம்மனையோ வழிபட்டு, நோயற்ற வாழ்வு பெறுவோம்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us