PUBLISHED ON : ஜூன் 11, 2017

அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடல்!
நடிகர் அஜித் நடித்துள்ள, விவேகம் படத்தில், அவர், 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில், தீம் சாங் இடம் பெற்றுள்ளது. இந்த ஒரு பாடலுக்காக, இசையமைப்பாளர், அனிருத், 50 டியூன்களை போட, அதில் ஒன்றை, ஓ.கே., செய்துள்ளார், அஜித். இதற்கு முன், வேதாளம் படத்தில் இடம்பெற்ற, 'ஆளுமா டோளுமா...' பாணியில், அதிரடி இசையில், இப்பாடலை உருவாக்கியிருப்பதாக சொல்லும் அனிருத், 'இப்பாடல், தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
தமிழில் என்ட்ரி கொடுக்கும் ஹூமா குரோஷி!
இந்தியில், பல படங்களில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை, ஹூமா குரோஷி. இவர், அஜித் நடித்த, பில்லா இரண்டாம் பாகத்திலேயே தமிழுக்கு வர வேண்டியவர்; அச்சமயம், கால்ஷீட் இல்லாததால், தமிழுக்கு வரவில்லை. இந்நிலையில், தற்போது, ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும், 161வது படத்தில் தமிழுக்கு வருகிறார். இந்தியில், அவர் சில படங்களில், 'வெயிட்'டான கதாநாயகியாக நடித்திருப்பதை முன் வைத்து, ரஜினி படத்திலும், அழுத்தமான கதாநாயகியாக, ஹூமா குரோஷியை, தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார், இயக்குனர், ரஞ்சித். ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல!
— எலீசா
மணிரத்தினத்தை கவர்ந்த நடிகை!
காற்று வெளியிடை படத்தை அடுத்து, தன் புதிய படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார், மணிரத்னம். இப்படத்தில், அரவிந்த் சாமி மற்றும் ராம்சரண் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்க, பல நடிகைகள் முயற்சி எடுத்த நிலையில், காற்று வெளியிடை பட கதாநாயகி, அதிதிராவையே மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளார், மணிரத்னம். காரணம், மேற்படி படத்தில், மணிரத்னமே எதிர்பார்க்காத அளவுக்கு, சில காட்சிகளில் இயல்பாக நடித்து, அவரை கவர்ந்துள்ளார், அதிதிராவ்.
— சி.பொ.,
சச்சினை தொடர்ந்து ஹீரோவான இன்னொரு கிரிக்கெட் வீரர்!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற படத்தில் நடித்ததை தொடர்ந்து, இன்னொரு இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்தும், டீம் - 5 என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் தயாராகிறது. பைக் ஸ்டன்டை மையமாக வைத்து உருவாக்கும் இப்படத்தில், ரேஸ், வீலிங் போன்ற சாகசங்களும் இடம் பெறுகிறது. இதில், ஸ்ரீசாந்துடன், பிரபல இந்தி நடிகர், தேஷ் பாண்டே மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தன் முந்தைய படம், அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டதால், தற்போது நடித்து வரும் புதிய படத்தை, 'ஹிட்' செய்து விட வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார், தளபதி நடிகர். அதன் காரணமாக, புதிய படத்தின் ஸ்கிரிப்ட்டில், பல திருத்தங்களை செய்யச் சொல்வதால், அவர் மீது, உள்ளூர கோபத்தில் இருக்கிறார், இயக்குனர்.
வம்பு நடிகருக்குள் இயக்குனர் இருப்பதால், அவர், நான்கு வேடத்தில் நடித்து வரும், அப்படத்தின், 'ஸ்பாட்'டில், அடிக்கடி அவரும் இயக்குனராகி விடுகிறார். அத்துடன், இயக்குனர்கள் வைத்திருக்கும் காட்சிகளில், தன் கருத்தை திணித்து, காட்சிகளையே மாற்றி விடுகிறார். இதனால், அடிக்கடி இயக்குனருக்கும், நடிகருக்கும் இடையே படப்பிடிப்பு தளத்தில், பனிப்போர் வெடிக்கிறது.
மெரினா நடிகருடன், தாரா நடிகை நடித்து வரும் படத்தில், 'ரொமான்ஸ்' காட்சிகளில், நடிகையின் முகத்தில் முதிர்ச்சி தெரிந்ததோடு, அக்கா - தம்பி போல தெரிந்தது, தான் நடித்த காட்சிகளை, 'மானிட்டரில்' பார்த்து, அதிர்ச்சி அடைந்த தாரா நடிகை, 'ரொமான்ஸ்' காட்சிகளில், தன்னை இளமையாக காண்பிக்குமாறு ஒளிப்பதிவாளரைக் கேட்டு, திரும்பவும் அக்காட்சிகளில் நடித்துக் கொடுத்துள்ளார்.
சினி துளிகள்!
* சந்தானம் கதாநாயகனாக நடிக்கும், சக்க போடு போடு ராஜா படத்திற்கு இசையமைக்கிறார், சிம்பு.
* கொலையுதிர் காலம் படத்தில், கிரைம் சப்ஜெக்ட்டில் நடிக்கிறார், நயன்தாரா.
* தற்போது, அட்லி இயக்கத்தில் நடித்து வரும் விஜய், இப்படத்தையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
* நெகடிவ் வேடங்களில் நடிப்பதில், தான் ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார், சிருஷ்டி டாங்கே.
அவ்ளோதான்!
