PUBLISHED ON : ஜூன் 11, 2017

மூன்று மாடி கட்டடமாக உயர்ந்து நின்றிருந்தது, தனுஷ்கோடி எண்டர்பிரைசஸ். அக்கம்பெனி வராந்தாவில் காத்திருந்தான், வேலை தேடி அலையும், பட்டதாரி, நாகராஜ்.
செவலூரில், பெரிய வீட்டுக்காரர் என்று அழைக்கப்பட்ட, பரமசிவத்தின் பேரன் தான், நாகராஜ். 30 ஆண்டுகளுக்கு முன், பணம் மற்றும் செல்வாக்கோடு திகழ்ந்த குடும்பம். ஊரிலேயே பெரிய வீடு, பரமசிவத்தின் வீடு தான். அவர் வீட்டு முன் நிற்கும், அம்பாசிடர் கார், அவர் வீட்டு வளமையை பறை சாற்றும்; பரமசிவத்தின் உடையும், நடையும் பார்ப்பவர்களிடத்தில் மரியாதையை உருவாக்கும். செவலூரிலே, முக்கால்வாசி நிலம் அவருடையது; முற்றத்தில், நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும். யார் வந்தாலும், சாப்பாடு போட்டு அனுப்புவர்.
பரமசிவம் மனைவியோ, காதில் தண்டட்டி ஆட, வேலையாட்களுடன் சேர்ந்து தானும் வேலை செய்தபடி, அவர்களை மேற்பார்வை பார்ப்பாள்.
பரமசிவத்திற்கு மூன்று மகன்கள்; நான்கு பெண் பிள்ளைகள். எல்லாருக்கும், நல்லபடியாக திருமணம் செய்து வைத்தார்.
சொத்து இருக்கிறதே என்று, மகன்கள் யாரும், பள்ளி இறுதி வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை. இத்தருணத்தில் தான் சொத்து பிரச்னை வந்தது.
சொத்தை பிரித்துக் கொள்வதில், பரமசிவத்தின் மகன்களுக்கிடையே அடிதடி, சண்டை; வயதான பரமசிவத்தின் பேச்சு எடுபடவில்லை; சமரச முயற்சிகளும் பலனளிக்கவில்லை. சொத்துக்காக பிள்ளைகள், அடித்துக் கொள்வதை பார்த்து, மனம் நொந்து, படுக்கையில் விழுந்து, போய் சேர்ந்தார் பரமசிவம்.
தந்தையின் மறைவுக்கு பின், கோர்ட் படியேறினர், அவரது மகன்கள். கீழ் கோர்ட், மேல் கோர்ட் என்று ஏறி, இறங்கியதில் கடனாளியானது தான் மிச்சம். பரமசிவத்தின் பெண்களோ, சத்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டனர்.
தான் பெற்ற பிள்ளைகள் ஒன்றுக்கொன்று பகையாளிகளாக போய் விட்டதை எண்ணி, பரமசிவம் போன சில ஆண்டுகளிலேயே, அவர் மனைவியும் போய் சேர்ந்தாள்.
பரமசிவத்தின் மூன்றாவது மகன் சுருளி; அவர் மகன் தான் நாகராஜ். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சொத்து வழக்கு நடந்து வருகிறது. நிலத்தின் மேல் வழக்கு இருப்பதால், விவசாயமும் செய்ய முடியவில்லை. குன்றித் தின்றால், குன்றும் குறையும் என்பதற்கு ஏற்ப, வறுமை நிலைக்கு போயினர், பரமசிவத்தின் மகன்கள். இதில் கடன்காரர்கள் நெருக்கடி வேறு. ஆனாலும், ஊரில் பெரிய வீட்டுக்காரராக இருந்த தாங்கள், அடுத்தவரிடம் கைக்கட்டி வேலை பார்ப்பதா என்று எண்ணி, எந்த வேலை, வெட்டிக்கும் போவதில்லை, பரமசிவத்தின் மகன்கள்.
நாகராஜனின் அப்பா சுருளியோ, தினமும் குடித்து வந்து, குடியை கெடுத்தார். நாகராஜ் ஒற்றை பிள்ளை என்பதால், கஷ்டப்பட்டு, பட்டப் படிப்பு வரை படிக்க வைத்தாள், அவனது, தாய்.
குடிகார தந்தை; நோயாளி தாய்; இவர்களுக்காக, வேலை தேடி அலைந்தான்.
விருதுநகரில், பெரிய வியாபார கம்பெனி, தனுஷ்கோடி எண்டர்பிரைசஸ்; வேலைக்கு ஆள் எடுக்கும் விளம்பரத்தை பார்த்து, வந்திருந்தான், நாகராஜ். இவனை போல், 30 பேர் வந்திருந்தனர்.
அவன் முறை வந்ததும், நேர்காணல் நடக்கும் அறைக்குள் நுழைந்தான், நாகராஜ்.
அங்கே, கனத்த உருவத்துடன், நெற்றியில் சந்தன பொட்டு துலங்க வீற்றிருந்தவர், மேஜையில் இருந்த பைலை, புரட்டிக் கொண்டிருந்தார்; அவர் தான், தனுஷ்கோடி கம்பெனி முதலாளி!
'பயோடேட்டா'வை பார்த்த தனுஷ்கோடி, வியப்பால் கண்கள் விரிய, எதிரில் அமர்ந்திருந்த நாகராஜை, உற்றுப் பார்த்தார்.
கையெடுத்து கும்பிட்டான், நாகராஜ்.
''உன் தாத்தா பெயர், பரமசிவமா?''
''ஆமாம் சார்.''
''செவலூர் பெரிய வீட்டுக்காரர் பேரனா?''
''ஆமாம் சார்,'' என்றான் பணிவுடன்!
அவருக்கு கடந்த கால நிகழ்வுகள் கண்முன் நிழலாடியது.
முப்பது ஆண்டுகளுக்கு முன், பரமசிவத்திடம் கூலி வேலை செய்தவர் தான், தனுஷ்கோடி. டிராக்டர்களில், நெல் மூட்டைகளை ஏற்றிப் போய், விருதுநகரில், வியாபாரிகளிடம் நெல்லை போட்டு, பணத்தை வாங்கி வருவது, தனுஷ்கோடியின் வேலை. அவனுக்கென்று ஊரில், கோவணத்துண்டு நிலம் கூட இல்லை; கூலி வேலை தான். விவசாய வேலையில் அனுபவமில்லை என்றாலும், விளையும் தானியங்கள் எதுவானாலும், விற்று, காசாக்கி விடுவான்; நாணயமானவன்.
ஏற்றுக்கூலி, இறக்கு கூலி மட்டும் தான் வாங்குவான். தரகு, கமிஷன் என்று, யாரிடமும் ஒரு பைசா வாங்க மாட்டான்.
உர மூட்டை, விதை நெல், விதைப் பயறுகள் என, அந்த கிராமத்தில் யாருக்கு என்ன தேவையோ அவன் தான், வாங்கி கொடுப்பான்; விருதுநகரில் உள்ள வியாபாரிகள், ஏஜென்டுகள் அனைவரும், அவனுக்கு அத்துப்படி.
தொழிலில் உள்ள நேர்மை, நாணயம் அவனை இன்னொரு படிக்கு உயர்த்தியது. கம்பெனி களுக்கிடையில், சரக்கு பரிவர்த்தனை செய்யும் வேலையில் ஈடுபட்டான். தொழில் வியாபார நுணுக்கங்களை கற்று, இன்று, பல பெரிய உணவு கம்பெனிகளுக்கு, பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு முதலாளியாகி விட்டார், தனுஷ்கோடி.
'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்'ன்னு சொல்வார்களே அது, இது தானோ... எந்த பரமசிவத்திடம் கூலிக்கு வேலை பார்த்தேனோ, அவருடைய பேரனே என்னிடம் வேலை கேட்டு வந்துள்ளான்...' என எண்ணியவர், ''தம்பி... உனக்கு இங்க வேலை தர்றேன்; அதுக்கு முன், உன் அப்பாவ பாத்து பேசணும்; வரச் சொல்றியா...'' என்றார்.
தனுஷ்கோடி, தனக்கு வேலை கொடுத்ததை எண்ணி மகிழ்ந்தாலும், 'எதற்கு அப்பாவை பாக்கணும்ன்னு சொல்றார்...' என்று புரியாமல், ''சரிங்க சார்,'' என்று, வணங்கி, வெளியேறினான். அவனுக்கு தெரியாது தனுஷ்கோடி யாரென்று!
வீட்டுக்கு வந்ததும், அப்பாவிடம் விஷயத்தை சொன்னான், நாகராஜ்.
தனுஷ்கோடி எண்டர்பிரைசஸ் முதலாளி யாரென்பது அவருக்கு தெரிந்திருந்ததால், வறட்டு கவுரவம் தலை தூக்க, ''போயும் போயும் நம்ம வீட்டுல, மூட்டை தூக்கி, கூலி வேலை செஞ்சவன்கிட்டயா, நீ வேலை கேட்டு போனே... சே... கேவலமா இருக்கு. பெரிய வீட்டு பரமசிவம் பேரன் நீ... நம்ப பரம்பரையில, யாரும் ஒருத்தன்கிட்டே போய், அடிமை வேலை பாத்ததில்ல. நாம, வாழ்ந்து கெட்ட குடும்பங்கிறத, அவன்கிட்டே போய் காட்டணுமா... ஊருக்கே படியளந்த குடும்பத்தில பொறந்துட்டு, ஊரான்கிட்டே போய், அடிமை வேலை பாக்க வேணாம்; வேலை பாக்கணுமன்னு நினைச்சா, அரசாங்க வேலைக்கு முயற்சி செய்,'' என்றார்.
பதில் பேசாமல் அமைதியாக, நின்றிருந்தான், நாகராஜ்.
''என்னடா... பதில் பேசாம நிற்கிறே...'' என்றார், சுருளி.
''அப்பா... காலம் மாறுது; காட்சிகளும் மாறுது; நாமும், மாறி தான் ஆகணும். அந்தக் காலத்து பெரிய வீட்டு பெருமை, இன்னைக்கு நம்ம கஷ்டத்துக்கு கை கொடுக்காது. வாங்கின கடன கொடுக்க முடியாம, கடன் கொடுத்தவன் கிட்ட அவமானப்படுறத விட, தனுஷ்கோடி கம்பெனியில சேர்ந்தா, வேலைய கத்துக்கலாம்; அதோட, மூட்டை தூக்கினவரோட முன்னேற்றத்துக்கு, எது காரணமுன்னு தெரிஞ்சுக்கலாம்.
''பரம்பரை பெருமை பேசி, உழைக்காமலே தின்று தீர்த்து, சொத்தை கரைச்ச நீங்க, தனுஷ்கோடி எண்டர்பிரைசஸ் முதலாளியின் பூர்வீகத்தை பற்றி சொல்றீங்களே... உங்க தாத்தாவுடைய தாத்தா, எப்படி பொழைச்சாருன்னு தெரியுமா உங்களுக்கு?
''பரமசிவம் தாத்தாவின் அப்பா, கூலி விவசாயி; அவரோட தாத்தா... அதாவது, என் பாட்டனுக்கு பாட்டன், மாடு மேய்ச்சவர். இது, எனக்கெப்படி தெரியும்ன்னு கேட்கிறீங்களா... நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போதே, இதையெல்லாம் சொல்லி, 'இன்று இந்த சொத்து, பத்துக, பெரிய வீட்டுக்காரர் என்ற பெருமை எல்லாம் உழைப்பால கிடைச்சது'ன்னு சொன்னார், பரமசிவம் தாத்தா. ஆனா, நீங்க அண்ணன், தம்பிக எல்லாம், உழைக்க சோம்பேறித்தனப்பட்டு, வீண் பெருமை பேசிட்டு இருக்கீங்க...'' என்றதும், ''அப்ப, அந்த ஆளை போய் பார்த்து, அவன் முன், என்னை கை கட்டி நிற்க சொல்றியா?'' என்றார், சுருளி.
''வேணாம்... நீங்க போய் பாத்தா, உங்களையறியாமல், உங்க பரம்பரை பெருமைய காட்டி, கிடைக்கிற வேலையும், கிடைக்க விடாம செய்துடுவீங்க; நானே பாத்துக்கிறேன்,''என்று கூறி, எழுந்து சென்றான்.
மறுநாள், தனுஷ்கோடி முன் கை கட்டியவாறு நின்றிருந்தான், நாகராஜ்.
''என்னப்பா நாகராஜ்... உங்கப்பா வரலயா...'' என்று கேட்டார், தனுஷ்கோடி.
''இல்ல சார்... அவருக்கு உடம்புக்கு முடியல; உங்கள பத்தி, ரொம்ப பெருமையா சொன்னாரு; உங்க கம்பெனியில, எனக்கு வேலை கிடைச்சது, பெரிய அதிர்ஷ்டம்ன்னு சொன்னாரு,'' என்றான் நாகராஜ்.
''அப்படியா... உனக்கு வேலை போட்டுட்டேன்; உன் அதிர்ஷ்டத்துக்காக இல்ல... உன் படிப்பு, பணிவுக்காக! மார்க்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ்; மாசம், 20 ஆயிரம் ரூபா சம்பளம்; இன்னைக்கே வேலையில் சேர்ந்துரு... மேனேஜரை போய் பாரு; 'அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' தருவார். நீ, நல்லா வருவே... வாழ்த்துகள்,'' என்று கூறிய தனுஷ்கோடியின் பேச்சு, தன்னம்பிக்கை மற்றும் உழைப்பின் பெருமைக்கு சாட்சியாய் இருந்தது.
மு.சுந்தரம்
