PUBLISHED ON : ஜூன் 11, 2017

ஓ.ரகுநாதன், மதுரை: ஓய்வு என்பது எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?
கட்டிப் போட்ட, 'கம்பல்சரி' ஓய்வாக இருக்கக் கூடாது. 'இதைச் செய்யாதே... அதைச் செய்யாதே... வெளியே போகாதே...' இது போன்று கிடைக்கும் ஓய்வு, வேதனையைத் தரும்!
கே.செல்வகணேஷ், புதுச்சேரி: சென்னையில் கிரெடிட் கார்டு புழக்கம் எப்படி?
கூவி அழைத்து, கிரெடிட் கார்டு கொடுக்கின்றனர். மொபைல் போன் வைத்திருந்தால் போதும்... அதில் அழைத்து, 'கார்டு தருகிறோம்...' என்கின்றனர். 'இருக்கிறது' என்றால், 'பர்சனல் லோன் தருகிறோம்; வாங்கிக் கொள்ளுங்கள்...' என்கின்றனர். இன்று, சென்னைவாசிகள் பலரின் வாழ்வில், 'கிரெடிட் கார்டு' ஒரு அங்கமாகி விட்டது.
* எஸ்.ஆர்.ரவிவர்மா, திருநின்றவூர்: மாடி வீடு, குடிசை வீடு எதில் குடியிருப்பது சுகம்?
மன வீடு சந்தோஷமாக, சஞ்சலம் இல்லாமல் இருந்தால், மாடி என்ன, குடிசை என்ன... எல்லாமே சுகம் தான்!
* மு.தேனப்பன், கோவை: அரசுப் பணியில் இருப்போருக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையும், சுய தொழில் செய்வோருக்கு கிடைக்கவே கிடைக்காது என்கின்றனரே...
சுய தொழில் செய்பவர் களுக்கு, 60 வயதுக்கு பிறகும் முன் போலவே மதிப்பும், மரியாதையும் இருந்து வரும். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டால், பெரும்பாலானவர்கள், அதிர்ச்சியை சந்திக்கின்றனர். அதுவரை கூழை கும்பிடு போட்டு, காலடியில் நின்றவர்கள் கூட, கண்டு கொள்ளாமல் சென்று விடும் நிதர்சனத்தை, உணர்ந்து சிலையாகின்றனர்.
எம்.சரவணக்குமார், வேடந்தாங்கல்: விவாகரத்து கோரும் தம்பதிகள் அதிகரித்து வருவதாக தெரிகிறதே...
உண்மைதான்; பத்து ஆண்டுகளுக்கு முன், விவாகரத்து கேட்டு, மும்பையில் வழக்கு தொடர்ந்த தம்பதிகளின் எண்ணிக்கை, 2,055 தான்; இன்றோ, அதே எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளதாக கூறுகின்றனர்.
ப.அருணாசலம், ஸ்ரீவில்லிபுத்தூர்: நம் நாட்டில் கறுப்புப் பண புழக்கம் ஏராளமாக உள்ளதாமே...
ஆம்; இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் கறுப்புப் பணம் எவ்வளவு தெரியுமா... 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்! வருமான வரி, விற்பனை வரி, உற்பத்தி வரி, சுங்கவரி என்று இருப்பதெல்லாம், நம்மில் பலருக்கும் தெரிவதில்லை!
பொ.ஜடேஷ்வரன், திருப்பரங்குன்றம்: வாரமலர் இதழில் வெளியாகும் உமது படங்களில், கையில் வாட்ச் கட்டாமல் இருக்கிறீரே... காரணம் என்ன?
வாட்ச் வாங்க வசதி வேண்டும்; மேலும், ஆபிஸ் பையனுக்கு, 'வாட்ச்'எதற்கு?
எம்.மதியழகன், சென்னை: இலக்கை எட்ட முடியவில்லை என்றால், பயணத்தை மாற்றி கொள்ள வேண்டுமா, இலக்கை மாற்ற வேண்டுமா?
இலக்கை மாற்றினால், கடைசி வரை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். கொள்கை பிடிப்பு இல்லாதவர்கள் தான், இலக்கை மாற்றிக் கொண்டே இருப்பர். பிடித்த பிடியில் உறுதியாக இருந்தால், நிச்சயம் இலக்கை அடையலாம்!
