PUBLISHED ON : ஜூன் 11, 2017

பெரியசாமி அண்ணாச்சி, விபரமானவர் தான்; ஆனால், 'சிலிப் ஆப் த டங்' என்போமே... வாய் தவறி பேசுவதில் படு கெட்டிக்காரர். சப்ஜெக்டை, பட்ஜெட் என்றும், குட்மார்னிங்கை, குட்மீனிங் என்றும் ஏறுக்கு மாறாகப் பேசுவதில் வல்லவர். அவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம்; வசிப்பது சென்னையில். தொழில் செய்வதோ சேலத்தில்... மாட்டுத் தீவனம் தயாரித்து, தமிழகம் முழுவதும் விற்பனை செய்கிறார்.
அண்ணாச்சியை தினசரி வாக்கிங் போகச் சொல்லி ஆலோசனை கூறி உள்ளனர், டாக்டர்கள். ஆனால், இவரோ, 'வாக்கிங்' என்ற பெயரில், 100 அடி நடந்து, அரட்டைக் கச்சேரியில் கலந்து கொள்ள வந்து விடுவார்.
அன்று சனிக்கிழமை; ஈரோட்டை சேர்ந்த டாக்டர் சுகுமார், அட்டகாசமாக டிரஸ் செய்து, அரட்டை கச்சேரிக்கு வந்திருந்தார்.
அப்போது போலி, 'வாக்கிங்' முடித்து வந்த அண்ணாச்சி, டாக்டரிடம் வேகமாக வந்து, 'சுகர் பாருங்க...' என்றார், படபடப்புடன்!
அருகில் இருந்த லென்ஸ் மாமா, 'ஓய் அண்ணாச்சி... உம்மோட பெரும் தொல்லையாப் போச்சு. இப்போ எப்படி டாக்டரால சுகர் பாக்க முடியும்... கையைப் புடிச்சு நாடி பாக்கணும் உமக்கு... அதத்தானே சொல்ல வர்றீர்?' எனக் கேட்டார்.
'ஆமா சார்... அதே தான்; கொஞ்சம் படபடப்பா இருந்தது அதான்... இந்த இங்கிலீசு தான் என்னை அப்பப்ப காலை வாரி விடுது...' என்றவர், டாக்டரிடம் கையை நீட்டினார்.
அண்ணாச்சியின் கையைப் பிடித்து பார்த்த டாக்டர், 'ஒரு பிரச்னையும் இல்ல... எல்லாம் நார்மலாத் தான் இருக்கு...' எனக் கூறியபடியே, அண்ணாச்சியின் உள்ளங்கையை உற்று நோக்கினார்.
அப்போது, லென்ஸ் மாமா, 'டாக்டர்... உங்களுக்கு கைரேகை கூட பாக்கத் தெரியுமா... எங்கே எனக்கு பாருங்களேன்...' என, தம் கையை நீட்டினார்.
லென்ஸ் மாமாவின் உள்ளங்கையைப் பார்த்த டாக்டர், 'உங்களுக்கு ரத்த சோகை இருக்கும் போலிருக்கே...' என்றவர் தொடர்ந்து, 'நான், உள்ளங்கையையும், விரல்களையும் சோதித்தது, கைரேகை பாக்க அல்ல... எனக்கு ரேகை பாக்கவும் தெரியாது. ஒருவருடைய விரல்களையும், உள்ளங்கையையும் சோதித்தாலே அவருடைய உடல்நிலையை கணித்துக் கூற முடியும்.
'வயிற்றில் அல்சர் உள்ளவர்களின் உள்ளங்கை சுருக்கங்கள் மிகுந்து இருக்கும். வெண்மையான உள்ளங்கைகள் ரத்த சோகைக்கு அறிகுறி. தேவைக்கு அதிகமாக, 'தைராய்டு' சுரப்பிகள் இயங்கினால், கைகள் வெதுவெதுப்பாக இருக்கும்; அவற்றின் மீது வியர்வை பிசுபிசுப்பும் காணப்படும்.
'அதேநேரம் தைராய்டு சுரப்பிகள் சரிவர இயங்காவிட்டால், தோல் வறண்டு சொர சொரப்பாகக் காணப்படும். வறண்ட நகங்கள் சத்துக் குறைவை வெளிப்படுத்தும். மூட்டு வாதம், கீழ் வாதம் ஆகிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்கள் வீக்கமடைந்து காணப்படும்...' என்றார்.
இதைக் கேட்ட அண்ணாச்சி, தம் கைகளை இறுக மூடி, 'எனக்கு ஒரு வாதமும் இல்லப்பா...' என்றார்.
எங்கே... உங்கள் உள்ளங்கையையும், விரல்களையும் ஒருமுறை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள் பார்ப்போம்!
ஆஸ்திரேலியாவில் குடியேறிய மதுரைக்கார நண்பர் ஒருவர், 'இந்த நாட்டில், 40 சதவீதம் வருமானவரி வசூலித்தாலும், குடிமக்களின் அடிப்படைத் தேவைகள், மருத்துவம் உட்பட அனைத்தும் அரசாங்கமே கவனிச்சுக்கறதாலே, எங்களுக்கு வரிச்சுமை தெரியறது இல்ல...' என்று கூறினார்.
'அட போங்க சார்... இங்க எது எதுக்கெல்லாமோ புதுசு புதுசா வரிய போட்டுத் தள்ளுறாங்க... இன்னும் எது எதுக்குப் போடலாமுன்னு தெரியாம முழிச்சுகிட்டும் இருக்காங்க. வரிய ஏய்கிறவங்களும் புதுப் புது பிளான் போட்டு ஏமாத்திகிட்டுத் தான் இருக்காங்க. எப்பவுமே, மது, பெட்ரோல், பஸ் கட்டணம் இந்த மூணும் தான் மாட்டுது...' என்ற குப்பண்ணா, 'எனக்கு இன்னொரு யோசனையும் தோணுது...' என்றவர், சிறிது நிறுத்தி, 'பெண்களுக்கெல்லாம் அழகு வரி போடலாம்; ஏராளமாக பணம் வசூலாகும். அந்தந்தப் பெண்ணையே அவள் அழகுக்கு மதிப்பு போடும்படி சொல்லிடணும். மதிப்பின் உயர்வுக்குத் தகுந்த மாதிரி வரியையும்
உயர்த்திப் போடணும். எந்தப் பெண்ணும் தன் அழகு விஷயத்தில் குறைச்சலா மதிப்பு போடவே மாட்டாள்; தாராளமாக நடந்து கொள்வாள்...' என்றார்.
பெண்களே... குப்பண்ணாவின் யோசனை எப்படி?
இப்போதெல்லாம் அடிக்கடி சேலம் போய் வருகிறார், லென்ஸ் மாமா. இம்முறை, சேலம் சென்று வந்ததும், அந்நகர் குறித்து, அவரிடம், நான் போட்ட புதிர்:
* சேலம் நகரின் ஒரு பகுதி, அங்கு சந்தை நடைபெறும் கிழமையின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுகிறது; அப்பகுதி எது?
* இந்நகரில் உள்ள ஒரு கோவிலில், மின் அதிர்ச்சியால் இறந்து போன கோவில் யானைக்கு, அக்கோவில் அருகிலேயே சமாதி கட்டியுள்ளனர்; அது எந்தக் கோவில்?
*சேலம் நகர் நடைபாதைகளில் சிலர் குச்சிகளை வெட்டி, கட்டுகளாக்கி விற்கின்றனர்; அது என்ன குச்சி?
* சேலத்தில் நடக்கும் பொருட்காட்சியின் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும், ஒரு நல்ல காரியத்திற்காகவே நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறது, நகராட்சி; அது என்ன காரியம்?
* இவ்வூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரங்கில், தன் புதிய நாடகங்களை அரங்கேற்றம் செய்வதை, சென்டிமென்டாக வைத்திருந்தார், பிரபல நடிகர் ஒருவர். -அந்த நாடக நடிகர் யார்?
* இந்நகரில் மாம்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களை, ஒரு புதுமாதிரியான பையில் போட்டுத் தருவார்கள், கடைக்காரர்கள். அது என்ன பை?
— எல்லா கேள்விகளுக்கும், சரியான பதிலைச் சொல்லி விட்டார், லென்ஸ் மாமா. எங்கே, உங்கள் விடையை, 21 ம் பக்கத்தில் உள்ள விடையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இன்று ஆட்சி அதிகாரங்களில் பெண்களின் கை ஓங்கி வருகிறது. அத்துடன், வெகு காலமாக, 33 சதவீத ஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர், பெண்கள். ஆனால், கடந்த நூற்றாண்டில் பெண்களின் நிலை எப்படிப் பட்டதாக இருந்தது தெரியுமா?
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில், இந்திய பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்திலிருந்து, இந்தியாவுக்கு குடிபெயர்ந்த ஆங்கிலப் பெண்களான அன்னிபெசன்ட், மார்கரட் கசின்ஸ் மற்றும் டோரதி போன்றவர்கள், இந்தியப் பெண்களின் வாக்குரிமைக்காக போராடினர்.
சரோஜினி நாயுடுவை தலைவியாகக் கொண்டு, 18 இந்தியப் பெண்கள், நான்கு ஐரோப்பியப் பெண்கள் கொண்ட குழு ஒன்று, பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்தது.
ஆனால், முதலில், இக்கருத்தை ஆதரிக்காத இந்தியத் தலைவர்கள், பின், சுதந்திரப் போராட்டம் தீவிரமானதும், அதில் இந்தியப் பெண்களின் ஆதரவும் தேவை என்ற காரணத்தால், இதற்கு உடன்பட வேண்டியதாயிற்று.
முதன்முதலில், 1923ல் ராஜ்காட் மாநிலமும், 1924ல் திருவிதாங்கூர் மற்றும் கொச்சியும், 1925ல் வங்காளமும், 1926ல் பஞ்சாப் மற்றும் அஸ்ஸாமும், 1929ல் பீகார் மற்றும் ஒடிசாவும் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தன.
வாக்குரிமை அளிக்கப்பட்ட பிறகும், பெண்கள் சட்டசபைத் தேர்தலில் நிற்க தடை இருந்தது. பெண்கள் குழுக்களின் தொடர் போராட்டத்தால், 1927ம் ஆண்டு பெண்கள் சட்டசபை உறுப்பினர் ஆவதற்கு இருந்த தடை, சென்னை, மும்பை, பஞ்சாப், அஸ்ஸாம் மற்றும் மத்திய மாகாணங்களில் நீக்கப்பட்டது.
ஆனாலும், சொத்துரிமை உள்ள பெண்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், அதிக அளவு பெண்கள், வாக்குரிமை இல்லாமல் இருந்தனர்.
பின், இதற்கான சட்டமும் திருத்தப்பட்டு, 1935ல், ஆண்களைப் போன்று, 21 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்று சட்டம் இயற்றினர்.
பா.கே.ப., விடைகள்!
* செவ்வாய் பேட்டை (இங்கு செவ்வாய் கிழமைகளில் சந்தை கூடும்)
* ஸ்ரீ சுகவனீசுவரர் ஆலயம்.
* பல் தேய்க்கும் கருவேல மரக்குச்சிகள்.
* கல்வி பணிக்கு மட்டுமே!
* நடிகர் மனோகர் - நேரு கலை அரங்கம்.
* பனியன் துணியிலான பைகள்!
