PUBLISHED ON : ஜூன் 11, 2017

கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்; கவலை இல்லை ஒப்புக் கொள்!
புறநகர் பகுதியில், நானும், என் நண்பரும் பிளாட் வாங்கியிருந்தோம். அதை, அவ்வப்போது சென்று, பார்த்து வருவது வழக்கம். வழியில், 10 குடும்பங்களை கொண்ட குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. நாங்கள், அந்த வீடுகளை கடக்கும் போதெல்லாம், மாமியார் - மருமகள் சண்டை, குடித்து விட்டு சாலையில் கலாட்டா செய்யும் குடிமகன், குழாயடி மற்றும் வம்பு சண்டை என, இப்படி ஏதாவது அரங்கேறியபடி இருக்கும். என் நண்பருக்கு என்ன தோன்றியதோ... ஒருநாள், அங்கிருந்த ஒரு பெரியவரிடம், 'ஐயா... என் நண்பர் ஒருவர், தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். உங்க குடியிருப்பை சேர்ந்தவர்கள், அங்கு ஒருநாள் பயிற்சி எடுத்து, அத்தொழிலை செய்யலாமே... இங்குள்ளவர்களிடம் சொல்லிப் பாருங்களேன்...' என்றார்.
அப்பெரியவரும், அதை அங்குள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்ல, இப்போது, தீப்பெட்டியில் லேபிள் ஒட்டுதல், தீக்குச்சியில் மருந்து வைத்தல், பசை செய்தல் மற்றும் பீடி சுற்றுதல் என ஆளுக்கொரு வேலையை செய்து, கணிசமாக பணம் சம்பாதிக்கின்றனர். அத்துடன், சைக்கிளில் இருந்து, இரு சக்கர வாகனம் வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி பெற்று விட்டனர். இதற்கு தான், 'கைத் தொழில் ஒன்றை கற்றுக் கொள்; கவலை இல்லை ஒத்துக் கொள்...' என்று சொல்கின்றனர்.
—டி.கே.ஆறுமுகம், கோவை.
நண்பர்கள் ஒரு எல்லையோடு நிற்கட்டும்!
மிகவும் வசதி படைத்த, என் உறவினரின் ஒரே மகன், வெளிநாட்டில் பணிபுரிகிறான். அவனுக்கு முன் நெற்றி தலைமுடி உதிர்ந்து, வழுக்கை விழுந்து, முதிர்ச்சியாக தெரிவதால், திருமணம் தள்ளிப் போனது.
இந்நிலையில், நிறைய படித்த, ஆனால், வசதியற்ற ஒரு பெண்ணின் ஜாதகம் கிடைத்து, உறவினரிடம் கொடுத்தேன். ஜாதகம் பொருந்தி, மாப்பிள்ளை - பெண் மற்றும் இரு வீட்டாரின் மனப் பொருத்தமும் நிறைவடைந்து, நிச்சயதார்த்தமும் முடிந்தது. திருமண நாள், நெருங்கும் நிலையில், நானும், என் கணவரும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தோம்.
அங்கு, கலகலப்புக்கு பதிலாக, திருமண வேலைகள் நின்று போயிருந்ததை கண்டு அதிர்ச்சியாகி, காரணம் கேட்டோம். மாப்பிள்ளையின் நண்பர்கள், பெண்ணின் புகைப்படத்தை பார்த்து, 'பெண்ணின் கன்னத்தில் கிள்ளிப் பிடிக்க கூட, சதை இல்லையே... எப்படி சம்மதித்தாய்...' என விமர்சித்ததாகவும், அதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி, 'திருமணத்தில் சம்மதமில்லை...' என்று மகன் மறுத்து விட்டதாக கூறி, மனம் வருந்தினார், உறவினர். பையனை அழைத்து, 'உன் சம்மதம் கேட்டுத் தானே முடிவு செய்தோம்; பெண் ஒல்லியாக இருந்தா என்ன நீ, வசதி படைத்தவன் தானே, உன் வீட்டிற்கு வந்தால், பூரித்து விட போறா...
'உன்னிடம் மட்டும் குறையில்லையா; இதற்கு போயி, கூடி வந்த திருமணத்தை, நிறுத்தி விட்டாயே...' என்று புத்தி புகட்டி, நின்று போன திருமணத்தை முடித்து வைத்தோம்.
நண்பர்களே... வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று, ஒரு பெண்ணைப் பற்றி எதிர்மறையாக கூறி, திருமணத்தை கலைத்து விடாதீர்!
—எஸ்.ஜெயம் சதாசிவம், மதுரை.
'வாட்ஸ் -ஆப்' வாத்தியார்!
தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறான், என் மகன். அவனது வகுப்பாசிரியர், தன் மாணவர்கள் அனைவரிடமும், அவர்களது பெற்றோரின், 'வாட்ஸ் - ஆப்' எண்ணை பெற்று, தனியாக, 'வாட்ஸ் - ஆப் குரூப்' ஒன்றை ஏற்படுத்தினார்.
யாராவது ஒரு மாணவன், வகுப்பிற்கு வராமல், விடுப்பு எடுத்தால், அவனது விடுமுறை விண்ணப்பத்தை, மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, அவனது தந்தைக்கு, 'வாட்ஸ் - ஆப்' பில் அனுப்பி விடுவார்; இதனால், மாணவர்கள் பொய் சொல்லி, லீவு போடுவது, முற்றிலும் தடுக்கப்பட்டது.
மேலும், அன்றன்று நடத்திய பாடம் பற்றிய விவரங்களை, அனைத்து பெற்றோருக்கும், 'வாட்ஸ் - ஆப்'பில் அனுப்பி விடுவார்; இதனால், பெற்றோர், தங்கள் பிள்ளையின் படிப்பின் மீது, ஒரு கண் வைத்து கண்காணிக்கும் சூழ்நிலை, தானாகவே உருவாகி விட்டது.
பள்ளியில் நடக்கும் பேச்சு, விளையாட்டுப் போட்டி மற்றும் பொது அறிவு போட்டிகளில் தன் வகுப்பு மாணவர்கள் பரிசு பெற்றால், அந்த மாணவர்களின் புகைப்படத்தோடு, பரிசு பெற்ற விபரத்தையும், அனைத்து பெற்றோருக்கும் அனுப்பி வைப்பார். அவர்களும், அந்த மாணவர்களை வாழ்த்த, இதனால், மற்ற மாணவர்களுக்கும், 'நாமும், அதுபோல் செய்து, பெற்றோரின் பாராட்டை பெற வேண்டும்...' என்ற ஆர்வம், உருவாகியது. அதுமட்டுமல்லாமல், அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுமே, படிப்பில் திறமைசாலிகளாக திகழ ஆரம்பித்து விட்டனர்.
ஆசிரியரின் இந்த செயலை, அனைத்து பெற்றோரும் பாராட்டுகின்றனர்; மற்ற ஆசிரியர்களும், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை, மாணவர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தினால், கல்வியின் தரம், தானாக உயர்ந்து விடும் என்பதில், எள்ளளவும் ஐயமில்லை!
—ஆர்.பிரபு, கோவை.
