PUBLISHED ON : ஜூன் 25, 2017

மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
கடந்த, 2006 முதல், 2014ம் ஆண்டு வரை, இந்திய பிரதமராக இருந்தவர், மன்மோகன் சிங். அவரது வாழ்க்கை வரலாற்றை, அவரது ஊடக ஆலோசகரான, சஞ்சய்பாரு என்பவர் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில், தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில், தற்போது, இந்தியில், ஒரு படம் தயாராகிறது; அப்படத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வேடத்தில், இந்தி இயக்குனர், அனுபம் கெர் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா
சினேகாவின் ரீ - என்ட்ரி!
சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்து வரும், வேலைக்காரன் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், ரீ - என்ட்ரி கொடுத்துள்ள, நடிகை சினேகா, தன் குடும்ப, 'இமேஜை' கெடுக்காத கதாபாத்திரங்களில், நடிக்க முடிவெடுத்துள்ளார். அத்துடன், பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வேடங்களில், அதிகமாக நடிக்க விரும்புவதாகவும், கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தால், 'நெகடிவ்' கதாபாத்திரங்களிலும், நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போல சேரும்!
— எலீசா
கதாநாயகியானார் எஸ்தர்!
மலையாளத்தில், 50 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், எஸ்தர். இவர், கமல் நடித்த, பாபநாசம் படத்தில், அவரது இளைய மகளாக நடித்தார். தற்போது, பத்தாம் வகுப்பு படித்து வரும் எஸ்தர், குழலி என்ற தமிழ் படத்தில், கதாநாயகியாக நடிக்கிறார். கிராமத்து கதையில் உருவாகும் இப்படத்தில், பத்தாம் வகுப்பு மாணவியாகவே நடிக்கிறார்.
— எலீசா
தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
பிரேமம் பட கதாநாயகி, சாய் பல்லவி, தன் தங்கை, பூஜாவையும் சினிமாவுக்கு கொண்டு வருகிறார். முன்னதாக, தற்போது, கோவையிலுள்ள ஒரு கல்லுாரியில், இளங்கலை ஆங்கிலம் படித்து வரும், பூஜாவை, காரா என்றொரு குறும்படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதை, விரைவில், சினிமா வட்டாரங்களில் சுற்றலில் விட இருக்கும் அவர், நல்ல கதையம்சம் உள்ள படத்தில், பூஜாவை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார். நாக்கில் இருக்கிறது நன்மையும், தீமையும்!
— எலீசா
சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன், உமாபதி நடித்துள்ள, அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின், 'டிரெய்லரை' வெளியிட்ட சிவகார்த்திகேயனை, 'இளம் சூப்பர் ஸ்டார்...' என்று, அவ்விழாவுக்கு வந்திருந்தவர்கள் கூறினர். அதை ஏற்காத அவர், 'இம்மாதிரி பட்டங்கள் எதுவும், எனக்கு தேவையில்லை; நான் எங்கிருந்து வந்தேன், எனக்கான இடம் என்ன என்பது, எனக்குத் தெரியும்; அதனால், இம்மாதிரி பட்டங்களைக் கொடுத்து, சர்ச்சையில், என்னை சிக்க வைக்க வேண்டாம்...' என்று கேட்டுக் கொண்டார்.
—சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தன் இடுப்பு நடனத்தால், ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த, ரன் நடிகை, மறுபடியும், சினிமாவில் பிரவேசித்துள்ளார். ஆனாலும், அவரது மாஜி கதாநாயகர்கள், இதுவரை அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் கடுப்பான நடிகை, 'மறுபடியும், சினிமாவில், பிரபல மாகி, அவர்களாக என்னை நடிக்க அழைக்கும் வகையில், வளர்ந்து காட்டுவேன்...' என்று, சவால் விட்டுள்ளார்.
தான் நடிக்கும் படங்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பதில்லை என்பதால், தன் படங்களில், முன்னணி நடிகைகளை நடிக்க வைத்து, ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்க நினைக்கிறார், கபடி குழு நடிகர்.
அதனால், தற்போது தான் நடிக்கும் படங்களில், முன்னணி நடிகைகளை ஒப்பந்தம் செய்ய, தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். 'அவர்கள் அதிக சம்பளம் கேட்பர்...' என, தயாரிப்பாளர்கள் தயங்கினால், தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்து, அவர்களை ஒப்பந்தம் செய்யுமாறு கூறுகிறார்.
சினி துளிகள்!
* கதாநாயகன் படத்தில், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார், மெட்ராஸ் பட கதாநாயகி, கேத்ரின் தெரசா.
* வணங்காமுடி படத்தில், இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார், நடிகை, சிம்ரன்.
அவ்ளோதான்!
