தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வயிற்றுப்பாடு!

வயிற்றுப்பாடு!

வயிற்றுப்பாடு!


PUBLISHED ON : ஜூன் 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''மங்கா... ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்தியே பிரியாணி... ரெண்டு பார்சல் வாங்கியாந்திருக்கேன்; வா சாப்பிடலாம்,'' என்று கூறியபடி, குடிசைக்குள் நுழைந்தான், மருதமுத்து. பிரியாணி பொட்டலத்தைப் பார்த்த மங்கம்மாவின் கண்கள் அகலமாய் விரிந்தன. நாவில், நீர் சொட்டியது. அடுப்படி வேலையை அப்படியே போட்டு, கணவன் கையிலிருந்த பிரியாணி பொட்டலங்களை, விழுங்குவது போல் பார்த்தாள்.

கட்டட மேஸ்திரிக்கு கீழ் வேலை பார்க்கும் மருதமுத்துவிற்கு, தினக்கூலி, 200 ரூபாய்; சாராயம், பீடி செலவிற்கு, 30 - 40 ரூபாய் போக, மீதியை மனைவியிடம் கொடுப்பான்.

அவளும், சிற்றாள் வேலைக்கு போவாள்; 100 ரூபாய் கிடைக்கும். தண்டல்காரனுக்கு தினமும், 50 ரூபாய் கட்டியது போக, மீதியை வைத்து அரிசி, பருப்பு, புளி, மிளகாய், காய்கறி வாங்கி, குடும்பத்தை ஒப்பேற்றுவாள்.

வக்கணையாக சாப்பிட முடியாது; ஏதோ வயிறு நிறையும்.

''ஏதுய்யா பிரியாணி வாங்க காசு...'' என்றாள், மங்கம்மா.

''வழக்கமா மொட்டை கோபுரத்துக்கிட்ட, எல்லாரும் வேலைக்காக நின்னுக்கிட்டு இருந்தோமா... மத்தவங்க எல்லாம் அவங்களோட கொத்தனார் வந்ததும் போயிட்டாங்க; எனக்கு வேலை தர்ற மேஸ்திரி மட்டும் வரல.

''வாடகைக்கு சைக்கிள எடுத்துட்டு, மேஸ்திரி வீட்டுக்கு போனேன். அங்க போனா, அவரு, ஒடம்புக்கு முடியாம, படுத்து கெடக்காரு. ராத்திரியிலேர்ந்து ஜுரமாம்... 'உடம்புக்கு முடியல; அதான் சொல்லியனுப்ப முடியாம போயிடுச்சு'ன்னாரு... 'போச்சுடா இன்னிக்கி, 200 ரூபா'ன்னு கவலையோடு திரும்பி, வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். அப்ப, கூட வேலை பாக்குற ஒருத்தர், 'ஒரு வேலையிருக்கு; வர்றியா... முன்னுாறு ரூபா கூலி; கூடவே, பிரியாணி மற்றும் 'டாஸ்மாக்' சரக்கு'ன்னார். அடிச்சதுடா யோகம்ன்னு கிளம்பிட்டேன்.''

''அப்படி இன்னாய்யா வேல... முன்னுாறு ரூவா கூலி; பிரியாணி, சரக்குன்னு சலுகை செய்ற அளவுக்கு...''

''கலெக்டர் வேலையா தரப் போறாங்க... என்னமோ வேலை... கூலி வருதா, அதைப்பாரு,'' என்று கூறி, பிரியாணி பொட்டலத்தை அவள் முன் வைத்தான். பொட்டலத்தை பிரிக்க முற்பட்டாள், மங்கம்மா. அதற்கு முன், அதன் வாசனையை, அவள் மூக்கு, சுவைக்கத் துவங்கியது.

''கல்யாணம் ஆன புதுசுல, ஒருமுறை வாங்கி குடுத்த; அதோட, இப்ப தான்யா வாங்கியாந்திருக்கே. அன்னிக்கு, ரஜினியோட, படையப்பா சினிமாவுக்கு வேற கூட்டிட்டு போனியே, ஞாபகம் இருக்கா...''

''இன்னிக்கு சினிமாவுக்கு போலாமா சொல்லு... கையில, முந்நூறு ரூபா இருக்கு; விஜய் படத்துக்கு போலாம்.''

அவனும் பொட்டலத்தை பிரிக்க ஆரம்பித்தான். வழக்கமாய் குடிக்கும் பாக்கெட் சாராயம், இரண்டு அடித்தாலே நிதானம் இழப்பவன், இன்று, 'டாஸ்மாக்' சரக்கு அடித்தும், 'ஸ்டெடி'யாய் இருந்தான்.

''நீ வீட்டுல சமைச்சிட்டியா?''

''பின்ன... நீ பிரியாணி வாங்கியாற விஷயம் எனக்கென்ன தெரியும்... சோத்தை வடிச்சு, ரசம் வெச்சு, கத்திரிக்கா பொரியல் செய்திருக்கேன். சோத்துல, அப்படியே தண்ணிய ஊத்தி வெச்சோம்ன்னா, காத்தால பழையதுக்கு ஆச்சு.''

''சரி சரி இப்ப நீ சாப்பிடு,'' என்றதும், பிரியாணியை துழாவி, பீஸ்களை ஒதுக்கினாள். பெரிய சிக்கன் துண்டுகள், அவளுள் உமிழ் நீரை உருவாக்கியது.

''என்ன வேலைன்னு கேட்டேனே... சொல்லவேயில்லயே...''

''ஆங்... அது பெரிய தமாசும்மே... கல்லு, மண்ணு சுமக்க வேணாம்; கலவை போடவோ; சாரத்துல ஏறி நின்னு, 'ரிஸ்க்' எடுக்கவோ வேணாம்; சும்மா, ஜாலியா சந்தைய சுத்தி வந்தா போதும்... துட்டு.''

''என்னய்யா இது... சும்மா சுத்தி வர்றதுக்கு, எந்த இளிச்சவாயன்யா பணம் தருவான்; முழுசா சொல்லுய்யா...''

''இளிச்சவாயன்னு சொல்லாதே மங்கா... அவரு பெரிய ஆளு; பெரிய காரெல்லாம் வெச்சுருக்காரு. முனிசிபல், 'வார்டு' உறுப்பினர் வேற. சந்தைக்கு, அவர் வர்றார்ன்னா, எல்லாரும் சலாம் அடிச்சு, பணம் தர்றாங்க; அதை, வாங்கிட்டு வர வேண்டியது தான், எங்க வேல. இதுக்குன்னே, ரெண்டு, மூணு பேரு இருக்காங்க. ஒருத்தன் வரல... அதான், என்னை கூப்பிட்டாங்க. நான் கட்டுமஸ்தா, பெரிசா மீசை வெச்சிட்டு இருக்கேனா... அதான், இந்த, 'சான்ஸ்' எனக்கு கெடைச்சது. இதுக்கு, நோஞ்சானா இருந்தா சவுகர்யப்படாது. ஆனா, வம்பு, தும்பு ஏதுமில்ல; வழக்கமா நடக்கறது தானாம். மாமூலான்னு கேக்குறாங்க; ஆமான்னதும், குடுத்துடுறாங்க,'' என்றான், பெருமை பொங்க!

''என்னது... சந்தையில வசூல் செய்த மாமூல் பணத்துக்கு கெடைச்ச கூலியிலயா பிரியாணி வாங்கிட்டு வந்தே...'' மங்கம்மாவின் முகம் சுருங்கியது.

அவளது கை, பிரியாணி பொட்டலத்திலிருந்து, வேகமாய் வெளிநடப்பு செய்தது. கணவனை புழுவைப் போல் பார்த்து, ''மாமூல் வாங்குற ரவுடி வேலைக்கா போன?'' என்று கேட்டாள்.

''அதனாலென்ன... நாய் வித்த காசு, குரைக்கவா போவுது; சாப்பிடு புள்ள.''

''அடப்போய்யா நீயும், உன் பிரியாணியும்... துப்பு கெட்ட மனுஷா... வருமானம் எப்படி வேணும்ன்னாலும் வரலாம்ன்னா நினைக்கிறது... இப்படித்தான் உழைக்கணும், பொழைக்கணும்ன்னு, ஒரு வரைமுறை இல்ல,'' என்றாள்.

''இன்னாம்மே தத்துவம் பேசிட்டு இருக்கே... ஏழைகளுக்கெல்லாம் எதுக்கும்மே தத்துவம்... தத்துவம் பேசினா, பிரியாணி கெடைக்குமா... 'டாஸ்மாக்' சரக்கு தான் கெடைக்குமா?''

''ஏன்யா... நாம, அதை திங்கறமா; அது, நம்மை திங்குதா... வயித்தை நிரப்பிக்கறதுலயும் ஒரு நெறி இருக்கு; பல பேருங்க வயித்தெரிச்சல கொட்டி, வயித்தை நிரப்பிக்கறது நல்லது இல்ல தெரிஞ்சிக்க.''

''இன்னாம்மே முறைங்கிற, நெறிங்கறே... பெரிய மனுசங்க, நாலெழுத்து படிச்சவங்க எல்லாம் அய்யா கூட சுத்திகிட்டு இருக்காங்க... நீ என்னமோ, அவரை பாவியாட்டம் பேசுறயே...''

''ஒனக்கு என்னய்யா தெரியும் அதப்பத்தி... நீ, மாமூல் குடுக்கிற நிலையில இருந்தியின்னா, அதோட கஷடம் தெரியும். எங்கப்பா, சந்தையில வள்ளிக் கெழங்கு வித்தாரு; தினமும் அம்பதோ, நூறோ தான்

கெடைக்கும். அதுல, பாதி மாமூல் குடுத்திடணும். அப்போதைக்கு குடுத்திடுவாரு; வீட்டுல வந்து சபிப்பாரு பாரு... மாமூல் வாங்கி தின்ற சோறு, ஒடம்புல ஒட்டாதுய்யா; ஈன பொழைப்பு அது.''

''அப்ப, இப்படி பொழைக்கறவங்க எல்லாரும்...''

''இப்ப நல்லா இருப்பாங்க; ஒரு நாளைக்கு அனுபவிப்பாங்க. எங்கப்பாகிட்ட மாமூல் வாங்கின ரவுடி என்ன ஆனான் தெரியுமா... ரோட்டுல, மண் லாரியில, நாய் மாதிரி அடிபட்டு, செத்தான். அவனுக்கு துணை போனவங்களும், இருக்குற எடம் தெரியாம போய் சேர்ந்தாங்க. இப்ப, நீ சொல்ற ரவுடி புதுசா வந்திருக்கான்; இவனுக்கும், சீக்கிரத்துல கேடு வரும். பல பேர் வயித்தெரிச்சல், சும்மா விடாதுய்யா.''

மங்கம்மா பேசப் பேச, சிந்திக்க ஆரம்பித்தான், மருதமுத்து. குடித்திருந்தாலும், மனைவியின் பேச்சு, சரியாக தான் இருக்கு என்று பட்டது.

பிரியாணி பொட்டலங்கள் இரண்டையும், சாக்கடையில் தூக்கி எறிந்தான்.

வடித்து வைத்திருந்த சாதத்தை, அலுமினிய தட்டில் போட்டு, ரசத்தை ஊற்றி, கத்திரிக்காய் பொரியலை வைத்து, தட்டை அவனிடம் நீட்டினாள் மங்கம்மா.

இருவருக்கும், அந்தச் சாப்பாடு, பிரியாணியை விட, ருசியாக இருப்பதாகப்

பட்டது.

எம்.கே. சுப்பிரமணியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us