PUBLISHED ON : ஜூன் 25, 2017

எல்.டி.கர்ணன், சென்னை: நேரத்தின் அருமையை உணர்ந்து, அரட்டை அடிப்பதையும், வீணாக பொழுது போக்குவதையும் குறைத்துக் கொண்டேன். இதனால், 'வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன்' என, நண்பர்கள், என்னை கேலி செய்கின்றனரே...
பாழடித்த நேரத்தை எண்ணி பின்னால், 'அனுபவிக்க' போகின்றனர் அவர்கள்!
* எம்.மனோகரி, தேனி: நாலைந்து குழந்தைகளாவது இருந்தால்தான், வீடு, 'கலகல' வென்றிருக்கும். குறைந்தது நான்கு குழந்தையாவது பெற்றுக் கொள்வேன் என்கிறாளே என் தோழி...
கலகலப்பு தானே வேண்டும்... வீட்டிலேயே குழந்தைகள் காப்பகம் நடத்த சொல்லுங்கள். அதை விடுத்து, நாட்டுக்கும், வீட்டுக்கும் கெடுதி நினைக்காதிருக்க சொல்லுங்கள்!
கே.பி.ராம்குமார், நிலக்கோட்டை: அக்கா மகனுக்கு, பெண் கொடுக்க மறுக்கும் தம்பி; தம்பி மகனுக்கு பெண் கொடுக்க துடிக்கும் அக்கா... இதில் யார் உசத்தி?
தம்பி தான் விவரமான ஆளு. 'நெருங்கிய சொந்தத்தில் திருமண உறவு கொள்வது, எதிர்கால சந்ததியினரின் நலனுக்கு உகந்தது அல்ல...' என்ற அறிவியல் கண்டுபிடிப்பை, அவர் ஆதரிக்கிறார் போலும்... தம்பியே நம்பர் ஒன்!
டி.கே.சுப்புராவ், கோவை: 'டிவி'யில் நீங்கள் விரும்பி பார்ப்பது எதை?
காலையில், 'டைம்ஸ்' (லண்டன்), மாலையில், நேரம் கிடைத்தால், 'சேட் சேனல்'கள் -இரண்டுமே ஆங்கிலத்தில் ஆயிற்றே... ஆங்கிலம் தெரிந்த ஒருவரின் உதவி, அப்போது கண்டிப்பாக இருக்கும்!
மு.இப்ராஹிம், மதுரை: வருமான வரி கட்டாமல், 'டிமிக்கி' கொடுப்போரை சுட்டு பொசுக்கித் தள்ளினால் என்ன?
தள்ளலாம் தான்; அதற்கு முன், நம்மிடமுள்ள கண்மூடித்தனமான தாங்க முடியாத வருமான வரியை குறைக்க வேண்டும். (இது பெரிய, 'சப்ஜெக்ட்!' தனிக் கட்டுரையாகத்தான், 'டிஸ்கஸ்' செய்ய முடியும்.)
எம்.ஸ்ரீதர், கம்பம்: நான் பள்ளி மாணவன்; எனக்கும், படிப்புக்கும் வெகுதூரம் என்கிறார் என் ஆசிரியர். என்ன செய்வது?
அளந்து பார்த்த பின் தான் சொல்லி இருப்பார், ஆசிரியர். இனியும் படித்து, பொழுதை வீணே கழிப்பதோடு, அரசின் மானியத்தை விரயம் செய்யாமல், ஏதாவது வியாபாரம் ஆரம்பித்து, 'செட்டில்' ஆக முயற்சி செய்யுங்கள்.
* எஸ்.அபினவ், சென்னை: யாரெல்லாம் நிம்மதியாக வாழ்கின்றனர்?
அடுத்தவர் செலவில் காலம் தள்ளுபவர், மந்திரிக்கு மருமகனாய், உறவினராய் ஆனவர்!
