தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்று திங்கட்கிழமை -

வழக்கமாக, இந்நாளில் கடற்கரை மீட்டிங் களைகட்டாது; நண்பர்கள் பட்டாளம் குறைவாகவே இருக்கும். ஆனால், அன்று வழக்கத்திற்கு மாறாக, எக்கச்சக்க கூட்டம்.

மாட்டுத்தீவன வியாபாரி பெரியசாமி அண்ணாச்சி, சீவல் தயாரிப்பாளர் காதர்பாய், பாரின் கார் டீலர் வெங்கட், இன்ஜினியர் சுப்புராஜ், இன்கம்டாக்ஸ் அதிகாரி சேகரன், கஸ்டம்ஸ் அதிகாரி கோடீஸ்வரன், தனியார் தொலைக்காட்சி பைனான்ஸ் மேனேஜர் சந்திரசேகர், லோக்கல் தாதா ஜம்பு, மொபைல்போன் கம்பெனியின் விற்பனை மேலாளர், நாராயணன்; இவர்களுடன், வழக்கம் போல நானும், லென்ஸ் மாமாவும்!

இவர்களில் பலர் உ.பா., பார்ட்டிகள்; இரண்டாவது, 'ஷிப்ட்' வேலைக்கு வருவது போல, பையில், மினரல் வாட்டர், உ.பா., பாட்டில், கண்ணாடி கோப்பை மற்றும் நொறுக்கு தீனி சகிதம், இரவு, 8:30 முதல், 9:00க்குள் ஆஜராகி, அவரவர் வேலையை ஆரம்பித்து விடுவர்.

அன்றும் அப்படித்தான் எல்லாரும் உ.பா., ஏற்றிக் கொண்டிருக்க, பாரின் கார் டீலர், வெங்கட், தம் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த கொண்டை கடலை சுண்டல், வெள்ளரிக்காய், பப்பாளி துண்டுகளை, 'குடி' மகன்களுக்கு வினியோகம் செய்தவர், எனக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுத்தார்.

தன் கார் பேனட் மீது, திராட்சை பழம், ஆப்பிள், மசாலா பொரி, மிளகு வடை, ரிப்பன் தூள் பக்கோடா, முந்திரி பருப்பு, வேர்கடலை ஆகியவற்றை கடை பரப்பி வைத்திருந்தார், இன்ஜினியர், சுப்புராஜ்.

இவருடைய இன்னொரு ஸ்பெஷாலிட்டி, பூண்டும், பச்சை மிளகாயும்!

இவற்றில், என்னென்ன விட்டமின்கள் உள்ளன... உடல் நலத்திற்கு அதனால் என்னென்ன நன்மை என்பதை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கூற தவற மாட்டார்.

எல்லாரும் இரண்டு, மூன்று ரவுண்டு முடித்திருக்கும் நேரத்தில், எங்களுக்கு எதிர்புறமாக, மின் விளக்கு வெளிச்சம் விழாத இடத்தில், கைனடிக் ஸ்கூட்டரில் வந்து இறங்கினர், இரு இளம் பெண்கள்.

கோஷ்டியினரிடையே பரபரப்பு...

'ரவுடிகளும், திருடர்களும் நிறைந்த இடமாயிற்றே... இவர்கள் ஏன் அங்கே நிற்கின்றனர்...' என, கிசுகிசுத்தனர்.

சிறிது நேரத்தில், அப்பெண்கள் நிற்கும் இடத்திலிருந்து, 100 மீட்டர் தொலைவில், போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் சுப்புராஜ், 'அடடே... நம்ம அஸிஸ்டண்ட் கமிஷனர்... அடிமட்டத்தில் இருந்து பிரமோட் ஆகி வந்தவர்ப்பா...' என, கோஷ்டியிடம் கூறினார்.

நேராக, அவ்விளம் பெண்களை நோக்கிச் சென்ற ஏ.சி., தன் கையில் வைத்திருந்த பையில் இருந்து இரண்டு பீர் பாட்டில்களை எடுத்து, அவற்றை, 'ஓப்பன்' செய்து, அப்பெண்களிடம் கொடுத்தார்.

அவர்கள் அதைக் குடிக்க ஆரம்பித்ததும், 'நான் போய் பேசப்போறேன்...' என்றார், சுப்புராஜ்.

'வேணாம்ஜி... யார் இடைஞ்சலும் இருக்கக் கூடாதுங்கிறதுக்குத் தானே, தனியா இருட்டுல நிற்கிறார்; அவரது தனிமையக் கெடுக்காதீங்க...' என்றேன்.

ஆனால், எங்கள் சொல்லைக் கேட்காமல், ஏ.சி.,யை நோக்கிச் சென்ற சுப்புராஜ், அவர்களிடம் அளவளாவ ஆரம்பித்து விட்டார். பின், ஏ.சி.,யையும், அவ்விரு இளம் பெண்களையும் எங்களிடம் அழைத்து வந்தார்.

பரஸ்பரம் அறிமுகம் நடக்க, என்னைப் பற்றி முழுமையான அறிமுகம் வேண்டாம் என, சுப்புராசுக்கு சமிக்கை செய்தேன்; அது போலவே செய்தார்.

அவ்விரு இளம்பெண்களும் பியூட்டி பார்லர் நடத்துகின்றனராம்; ஏ.சி.,யின் தோழியராம்! ஏ.சி.,யை, 'அங்கிள்...' என்றே அழைத்தனர்.

பந்தா விட்டபடி, கோஷ்டியினர் கையில் இருந்த கண்ணாடி கோப்பைகளை நாசுக்காக, அதேநேரம் ஆவலாக நோட்டம் விட்டார், ஏ.சி., இதைக் கண்ட சுப்புராஜ், 'சார் ஏதாவது சாப்பிடுறீங்களா?' எனக் கேட்க, 'வேணாம்; எப்பன்னாலும் கூப்பிட்டுத் தொலைப்பாங்க. இப்பக் கூடப் பாருங்க... --- (ஒரு இடத்தின் பெயர்) அங்கே கலவரமாம்; என்னைக் கூப்பிட்டாங்க... 'போய்யா வரமுடியாது'ன்னுட்டேன்...' என்றார்.

'அதான் வரமாட்டேன்னு சொல்லீட்டீங்கல்ல... அப்புறம் என்ன... கொஞ்சமா போடுங்க...' என, சுப்புராஜ் வற்புறுத்தவும், 'என்ன இருக்கு?' எனக்

கேட்டார், ஏ.சி.,

'ரம், ஒயிட் ரம், பிராண்டி, விஸ்கி... ஸ்காட்ச் விஸ்கி பிளாக் லேபிள் இருக்கு...' என்றார் சுப்புராஜ்.

'ஆசைப்படுறீங்க... பிளாக் லேபிள் சாப்பிடுறேன்...' என்றவர், தம் சபாரி சூட்டில் இருந்து கறுப்பு வண்ணத்தில் ஒரு தோல் பையை எடுத்தார். ஒரு கண்ணாடி கிளாஸ், 'ஜிப்' போட்டு மூடப்பட்டிருந்தது.

அந்த கிளாசை வாங்கி, அதில், சரக்கு ஊற்றிக் கொடுத்தார், நாராயணன். ஒரே மடக்கில் அதை உள்ளே தள்ளியவர், 'எங்கிருந்து பாரின் சரக்கு

வாங்குறீங்க... பர்மா பஜார்ல மட்டும் வாங்கிடாதீங்க... எல்லாம் டூப்ளிகேட். வெளிநாட்டில் இருந்து யாராவது வந்தா, அவங்ககிட்ட வாங்கிட்டு வரச்சொல்லுங்க அல்லது ஏர்போர்ட்டில் இருக்கிற டுயூட்டி பிரி ஷாப்பில் நண்பர்கள் யாராவது இருந்தா வாங்குங்க...' என, அட்வைஸ் செய்தவருக்கு, அடுத்த ரவுண்ட் ஊற்றிக் கொடுத்தார், நாராயணன்.

'என்னா தம்பி இது... ஊத்திக் கிட்டே இருக்கீங்க... மதியானம், 2:00 மணிக்கு சரக்கு போட ஆரம்பிச்சது; இன்னும் கன்டினியூ ஆகிகிட்டே இருக்கு. என் பொண்டாட்டி இன்னிக்கு வீட்டு வாசல்ல தான் நிக்க வைக்கப்போறா...' என்றபடி, அடுத்த ரவுண்ட்டையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தவர், 'அந்தக் காலத்திலே...' என ஆரம்பித்தார்...

'நான், எஸ்.ஐ.,யாக இருந்த காலத்தில எங்களுக்கு என்ன இன்ஸ்டிரக் ஷன் கொடுப்பாங்கன்னா... மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் போன்ற பொது ஜனங்கள் கூடுற இடங்கள்ல வாட்டசாட்டமா, உயரமா யாராவது நடமாடினா, அவன் நல்லவனா இருந்தாலுமே 'என்னடா மொறைக்கிற... நீ என்ன பெரிய தாதாவா...' எனக் கேட்டு, பொதுமக்கள் முன், மொத்தி எடுக்கச் சொல்வர். இது, எதுக்காகன்னா, போலீஸ் மீது பொதுமக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதற்காக!

'அப்புறம், ஸ்டேஷனுக்கு கூட்டி வந்து, 'எலும்பை உடைச்சு எடு...' என்றனர். இப்போ அதுவும் போய், 'உங்களுக்கு எதுக்கு வம்பு... அவன் வட்டமோ, மாவட்டமோ எவன்னே நமக்கு தெரியாது; கண்டுக்காம போங்க'ன்னு சொல்றாங்க பிரதர்...

'இப்போதெல்லாம், பொதுமக்கள் கூடுமிடத்திலோ, ஊர்வலங்கள் நடக்குமிடத்திலோ, யாராவது எங்க முகத்தை உற்றுப்பார்த்தாலே, எதுக்கு வம்புன்னு நாங்களே முகத்தை திருப்பிக்கிறோம்.

'மேலதிகாரிகள் ஸ்டிராங்கா இல்ல; பதவிக்காக அரசியல்வாதிகள சார்ந்திருக்க ஆரம்பிச்சுட்டாங்க... அதனால, போலீஸ் டிபார்ட்மென்ட்டே கெட்டுப்போச்சு. மக்கள் மத்தியில் மதிப்பே இல்ல...' என, சொல்லிக் கொண்டிருக்கும் போது, 'நீ யார்ன்னு அறிமுகப்படுத்தட்டுமா...' என, என்னை நச்சரித்த, சுப்புராஜ், நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், ஏ.சி., காதில் நான் யார் என்பதை ஊதி விட்டார்.

அதைக்கேட்டதும் அதுவரை, 'தம்பி... பிரதர்...' எனச் சொல்லியபடி இருந்தவர், 'சார்...' போட ஆரம்பித்துவிட்டார்.

'நான் சொன்னதெல்லாம் எழுதுங்க சார்... ஆனால், பேரு, ஊரு போட்டு அடையாளம் காட்டிடாதீங்க...' என்றார். இதனிடையே, இரண்டு, மூன்று முறை அவருக்கு மொபைல்போனில் அழைப்பு வந்து விட்டது.

'இதோ, பத்து நிமிஷத்தில் வந்துடுறேன்...' என, 'எக்ஸ்க்யூஸ்' கேட்டு, தம் ஜீப்பை நோக்கி நடந்தார்.

அந்த இளம்பெண்களில் ஒருவர், 'மாமா... இந்த மாதம் மாமூல் எல்லாம் வாங்கிட்டியா, எங்களுக்கு எப்போ டிரஸ் எடுத்து தரப்போற...' எனக்கேட்டார். 'அடுத்த வாரம்...' எனக்கூறி, ஜீப்பில் ஏறி பறந்து விட்டார், ஏ.சி.,

பீரை முடித்திருந்த அவ்விரு இளம் பெண்களும், தத்தமது ஸ்கூட்டரில் சென்று மறைந்தனர்.

'காலம் கெட்டுப்போசுய்யா...' எனக் கூறியபடி, தம் காரை ரிவர்ஸ் செய்து கிளம்பினார், பெரியசாமி அண்ணாச்சி.

'நவம்பர் 14ம் தேதிய, ஏன், குழந்தைகள் தினமா கொண்டாடுறாங்க தெரியுமா?'

'நேருவோட பிறந்தநாள்...'

'இல்ல; பிப்., 14 காதலர் தினம். அன்றிலிருந்து, கரெக்டா ஒன்பது மாசம் கணக்கிட்டா, குழந்தைகள் தினமான, நவ., 14 வரும். இப்ப தெரியுதா ஏன், அந்த நாளை குழந்தைகள் தினம்ன்னு சொல்றாங்கன்னு!

— எங்கோ, எதிலோ , எப்போதோ படித்தது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us