PUBLISHED ON : ஜூன் 25, 2017

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.
காளி என்.ரத்தினம் என்னை அவசரமாக அழைத்து வரச் சொன்னதாக, சைக்கிளில் என்னை அழைத்துச் சென்றார், சீன் வேலை செய்யும் பரமேஸ்வரன். போகும் போது, 'எதற்கு' என்று கேட்ட போது, அவர் பதில் சொல்லவில்லை.
நாடக கொட்டகைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
அங்கே, பரதன் வேடத்தில், கே.ஆர்.ராமசாமி நடிக்க, ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார், ரத்தினம்.
என்னிடம், 'பரதன் வேடத்தில் நீ நடிக்கிறாயா?' என்று கேட்டார்.
புரியாமல், ராமசாமியைப் பார்த்தேன். அவர் ரகசியமாக, 'நான் முழுவதும் பாடம் செய்யவில்லை...' என்றார்.
'நடிக்கிறேன்' என்றதும், என்னை வைத்து ஒத்திகை பார்த்தார். பரதன் கதாபாத்திரத்திற்கான வசனத்தை கேட்டுக் கேட்டு, மனப்பாடம் ஆகியிருந்ததால், எல்லாம் சரிவர ஒப்பித்தேன்.
அன்றிரவு, நானே பரதனாக நடிக்க முடிவாயிற்று.
நாங்கள் இருவருமே, ஒருநாள் விட்டு ஒருநாள், பரதனாகவும், சத்துருக்கனனாகவும் மாறி மாறி வேடம் போட வேண்டுமென்று சொன்னார், ரத்தினம்.
'நம்மை நடிக்கச் சொல்றாரே... சின்னப்பா எங்கப்பா?' என்று கேட்டேன், ரத்தினத்திடம்!
'சின்னப்பாவின் தாய் மிகவும் ஆபத்தான நிலையிலிருப்பதாக ரெண்டு நாளுக்கு முன் தந்தி வந்ததாம்; அதை, சின்னப்பாவுக்கு தெரிவிக்காமல் மறைச்சுட்டாங்க, கம்பெனி நிர்வாகிகள். அடுத்த நாளும் தந்தி வந்திருக்கு; அதையும் மறைச்சுட்டாங்க.
'இன்னைக்கு காலையில, அவங்கம்மா இறந்து விட்டதாக ஒரு தந்தி வந்தது. அதையும் மறைக்க இருந்தாங்களாம்; ஆனா, தபால்காரர் தந்தியை கொடுத்த போது, சின்னப்பா அருகில் இருந்ததால், அவரே அதை வாங்கி, படிக்கச் சொல்லி, தெரிந்து, உடனே, ஊருக்கு புறப்பட்டு போயிட்டார்...' என்று கூறினார், ராமசாமி.
அவர், புதுக்கோட்டைக்கு புறப்பட்டு போய்விட்டதால், பரதனாக நடிக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்தது.
அன்று இரவு, வேலுநாயருடன் நாடக கொட்டகையில் தங்கினேன்.
மறுநாள் காலை, கம்பெனி வீட்டிற்கு சென்றேன்; வழக்கம் போல் வீட்டு திண்ணையில், சுருட்டுடன் உட்கார்ந்திருந்தார், கம்பெனியின் பெரிய முதலாளி. அவரை கண்டால் எல்லாருக்குமே அச்சந்தான்.
அவர், என்னை கண்டதும் திகைத்து, 'உள்ளே யார் ஒத்திகை பார்ப்பது...' என்று கேட்டார்.
உள்ளே சென்று கவனித்தேன்.
பரதன் வேடத்திற்குரிய உரையாடலை, உரக்கச் சொல்லியபடி இருந்தார், ராமசாமி.
ராமசாமி பாடம் செய்து கொண்டிருப்பதாக சொன்னேன்.
பெரியவருக்கு சந்தேகம்.
'நேற்று யார் பரதனாக நடித்தது?' என்று கேட்டார்.
'நான் தான்...' என்றேன்.
'பின் ஏன் ராமசாமி பாடம் செய்யணும்?' என்று கேட்டார்.
'ஒருநாள் நானும், மறுநாள் ராமசாமியும் மாறி மாறி, அவ்வேடத்தில் நடிக்கணும்ன்னு ரத்தினம் சொல்லியிருக்கிறார்...' என்று சொன்னேன்.
'ரத்தினத்தை வரச் சொல்லு...' என்றார்.
உள்ளே சென்று, காளி என்.ரத்தினத்திடம், பெரியவர் அழைப்பதாக சொன்னேன். அவர், ஒத்திகையை நிறுத்தி, பெரியவரை பார்க்க சென்றார்.
கே.ஆர்.ராமசாமியும், நானும் வாயிற்படியின் கதவருகில் ஒளிந்து நின்றபடி, பெரியவரும், ரத்தினமும் பேசுவதை கேட்டோம்.
'ராமசாமிக்கு ஏன்ப்பா ஒத்திகை பாக்கறே... ராமச்சந்திரன் சரியாக செய்தானில்லே...' என்று கேட்டார் பெரியவர்.
'ஆமாம்... சரியாகத்தான் செய்தான்; ஆனா, அவனுக்கு தொண்டை கட்டினா, என்ன செய்றதுன்னு தான் ராமசாமியை தயார் செய்றேன்...' என்றார், ரத்தினம்.
'அதெல்லாம் வேணாம்; பத்து பதினைஞ்சு நாள்ல சின்னப்பா வந்துடப் போறான்... இதுக்கு என்னத்துக்கு ரெண்டு பேர்...' என்றதும், ஒன்றும் பேச முடியாமல் திரும்பினார், ரத்தினம்.
என்னை திரும்பி பார்த்தார், ராமசாமி. அவர் பார்வையின் பொருள், சில நாட்களுக்கு பின் தான் புரிந்தது. அதாவது, நானே கம்பெனி முதலாளியிடம் சென்று, 'பரதன் வேடத்தை நானே போடுவதாக கேட்டதாகவும், அதனால், அவர் என்னை அனுப்பி, ரத்தினத்தை அழைத்து வர செய்து, 'ராமசாமிக்கு ஒத்திகை பார்க்க வேண்டாம்...' என்று சொன்னதாகவும், கே.ஆர்.ராமசாமியும் ரத்தினமும் நினைத்து விட்டனர்.
இதை, ராமசாமி என்னிடம் நடந்து கொண்ட முறையிலிருந்து புரிந்தது.
எதிர்பாராமல் எனக்கு கிடைத்த வாய்ப்பின் விளைவாக, நெருங்கிய நண்பராக இருந்த ராமசாமிக்கு, விரோதியாக மாறிப் போனேன்.
அதுவரை கேட்பாரற்று கிடந்த நான், பரதன் வேடம் போட ஆரம்பித்த நிமிடத்திலிருந்து, கம்பெனியில் முக்கியமானவனாக கருதப்பட்டேன். நாடக கொட்டகையில் வேலுநாயருடன் படுத்து தூங்கியவன், பரதன் வேடம் போட்ட மறுநாளில் இருந்து, நாடகத்தில் வேலை முடிந்ததும், கம்பெனி வீட்டிற்கு வந்து விட வேண்டுமென்று கட்டளை பிறந்தது.
காலையில், பலகாரம் சாப்பிடப் போனால், அங்கே, பிரத்யேகமான சட்னி பரிமாறப்பட்டது. கம்பெனி மொழியில் சொல்வது என்றால், ஸ்பெஷல் சட்னி!
ஸ்பெஷல் சட்னி என்றதும், பிரமாதமாக எதையாவது நினைத்து விடாதீர்கள்.
சட்னியில், தண்ணீரை ஊற்றி கரைப்பதற்கு முன், கொஞ்சம் எடுத்து வைத்திருந்து தருவர்; இதற்கு பெயர் தான், ஸ்பெஷல் சட்னி!
இந்த ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட ஆரம்பித்ததும், அதுவரையில் என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்கள், என்னை தொட்டு பேசுவது கூட மரியாதையற்ற செயலாகவும், என்னையும், அவர்களுக்கு சரிசமமாக நினைக்கின்றனரே என்று எண்ணி, அவர்களிடமிருந்து விலகி நிற்க முயன்றேன்.
இந்த என் எண்ணம் எத்தனை நாள் இருந்தது என்று கேட்கிறீர்களா... பி.யு.சின்னப்பா கம்பெனிக்கு திரும்பி வரும் வரை!
அவர் வந்ததும், 'பழைய குருடி, கதவைத் திறடி' என்பரே, அந்நிலை ஏற்பட்டது.
ஸ்பெஷல் சாப்பாடு தொடர்ந்தாலும், எனக்கு கிடைத்திருந்த பிரதம நடிகர் என்ற ஸ்தானம் நிரந்தரமானதல்ல என்பது நிரூபிக்கப்பட்டது.
இந்த திடீர் ஸ்தானம் வந்தது போலவே போயிற்று; ஆனால், இழந்த நண்பர் களை, திரும்ப பெற முடியவில்லை.
இந்நிகழ்ச்சிக்கு பின், 'உயர்ந்த நிலை ஸ்திரமற்றது' என்பதையும், அகம்பாவத்தின் விளைவு என்ன என்பதையும் நன்கு உணர்ந்தேன்; திருந்தினேன் என்றால் பொருந்தும்!
ஈரோட்டுக்கு சென்று நாடகம் நடத்திய போது, ஒருநாள், நாடகத்தன்று,
டி.வி. அனந்தராமன் என்ற பையனுக்கு, தொண்டை கம்மி விட்டது; பாட முடியவில்லை.
நாரதர் வேடமென்றால் பாடுவது மிக அவசியம்.
ஒவ்வொரு நாடகத்தன்றும், கொட்டகையில் ஒப்பனை அறையின் பக்கமாக, மேடையிலிருந்து நடிகர்கள் உள்ளே வரும் வழியில் உட்கார்ந்திருப்பார், பெரியவர். பாதி நாடகம் முடிந்த பின்தான் வீட்டுக்கு போவார். அன்றும், அவர் அங்கு உட்கார்ந்திருந்தார். அவரிடம் வந்து, 'தொண்டை கம்மியுள்ளதால், என்னால் பாட முடியவில்லை...' என்றார், அனந்தராமன்.
உடனே, அருகிலிருந்த என்னிடம், 'நீ, நாரதர் வேடம் போடுறாயா?' என்று கேட்டார், பெரியவர்.
நான் தான், வேடம் கிடைத்தால் போதும் என்று காத்து கிடந்தேனே, விடுவேனா...
அனந்தராமனின் உடைகளை எல்லாம் வாங்கி அணிந்து, நெற்றியில் கோபி பொட்டு இடுவதற்காக, அக்காலத்தில், 'பவுடர் பிளேஸ்' என்று சொல்லப்படும், ஒப்பனை அறைக்கு சென்றேன்.
அங்கே, கோபி இட்டு முடித்திருந்தார், கே.ஆர். ராமசாமி.
அவருக்கு, என்னை பார்த்ததும் ஆத்திரம் வந்தது. காரணம், அனந்தராமனுக்கு பாட முடியவில்லை என்றதும், காளி என்.ரத்தினத்திடம், தான் நாரதர் வேடம் போடுவதாக கேட்டிருக்கிறார், ராமசாமி; அவரும் சம்மதித்துள்ளார்.
நாரதர் வேடமணிந்து, நான், அவர் முன் நின்றதும், அவருக்கு கோபம் வந்துவிட்டது.
—தொடரும்
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.
