PUBLISHED ON : ஜூன் 25, 2017

கர்ப்பிணிகளே... உஷார்!
கர்ப்பிணி பெண்ணான நான், எங்கள் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு, பெண் டாக்டரிடம், பரிசோதனைக்கு சென்று வந்தேன்.
கடந்த மாதம் சென்றிருந்த போது, நிறை மாத கர்ப்பிணியான என் தோழி, அங்கு வந்திருந்தாள். பிரசவத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில், மருத்துவர், அவளிடம், சிசேரியன் செய்ய, நல்ல நேரம் குறித்து வர செல்லியுள்ளார். அதுவும், மருத்துவமனை பக்கத்தில் உள்ள ஜோதிடரிடம் கேட்க வற்புறுத்தியுள்ளார்.
என் தோழிக்கு பின், நான், மருத்துவர் அறைக்குள் சென்றேன். அங்கிருந்த நர்ஸ், போனில், 'டாக்டர் அம்மா ஒரு பேஷன்ட்ட அனுப்பியிருக்காங்க; 'நைட் டைம்'மா பார்த்து சொல்லச் சொன்னாங்க...' என்று, சொன்னதும், விக்கித்து போய் விட்டேன்.
இரண்டு வாரத்திற்கு பின், என் தோழியிடம் மொபைல் போனில் பேசிய போது, அவள் கூறிய விஷயம் என்னை யோசிக்க வைத்தது.
ஜோசியரிடம் போகாமல், வேறு ஒரு மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டதாகவும், 'குழந்தை, வயிற்றில் நன்றாக தான் உள்ளது; சுகப்பிரசவம் ஆகும்...' என்று கூறியதாகவும், அதன்படி, இரண்டு நாளில் பிரசவ வலி வந்து, சுகப்பிரசவம் ஆனதாகவும் சொன்னாள்.
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில், சிசேரியன் செய்யலாம்; தப்பில்லை. ஆனால், பணத்திற்கு ஆசைப்பட்டு, இப்படி தொழில் தர்மத்தை மீறுவோரை, அடையாளம் கண்டு, அந்த மருத்துவமனையை தவிர்த்திட வேண்டும், கர்ப்பிணி பெண்கள். முக்கியமாக, ஜோதிடரை பார்க்க சொல்பவராக இருந்தால், அங்கு போகவே போகாதீர்கள்! இச்சம்பவத்திற்கு பின், நான், வேறு மருத்துவரிடம் தான் காண்பிக்கிறேன்.
—கீதா பிரகாஷ், பொள்ளாச்சி.
தூங்கி எழும் போது...
முதுகு தசை பிடிப்பால் அவதியுற்ற என் அம்மாவை, சமீபத்தில், அருகில் உள்ள எலும்பு சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் சென்றேன். அவர், என் அம்மாவை பரிசோதித்த பின், 'வயதானவர்களுக்கு எலும்பு மற்றும் தசைகள் பலவீனமாக இருக்கும்; அதனால், காலையில் படுக்கையிலிருந்து எழும்போது, மெதுவாக எழ வேண்டும். இல்லையென்றால், இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்...' என்றவர், 'நாய், பூனை போன்ற மிருகங்களை பாருங்க. அவை தூங்கி எழும் போது, கால்களை நன்றாக நீட்டி, சோம்பல் முறித்து, ஒரு பக்கம் சாய்ந்து, பின் தான் எழும். ஆனால், ஆறறிவு பெற்ற மனிதன், இதையெல்லாம் செய்வதில்லை. தூங்கி எழும் போது வேகவேகமாக எழுந்து, தசை பிடிப்பு போன்ற உடல் உபாதைகளில் சிக்கிக் கொள்கிறான்...' என்றார்.
வயதானவர்கள், மருத்துவர் சொன்ன அறிவுரையை பின்பற்றி, பிரச்னைகளை தவிர்க்கலாமே!
—ஜெ.கண்ணன், சென்னை.
லாபம் பார்க்காத மருத்துவர்!
எங்கள் ஊரில், சித்த மருத்துவர் ஒருவர், 'கிளீனிக்' வைத்துள்ளார். அவரிடம் வைத்தியம் பார்க்க வருவோருக்கு, சிறிய புத்தகம் ஒன்றைக் கொடுப்பார்.
அதில், குழந்தைகளுக்கான வைத்திய குறிப்பு மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டினால், அதற்கான, மருத்துவ குறிப்புகளும் இருக்கும். மேலும், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு மருந்து தயாரிப்பது, எப்படி உபயோகிப்பது போன்றவற்றையும் அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'கிராமப்புறங்களில், இரவு நேரத்தில் ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டாலோ, அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல, வாகன வசதி கிடைக்காமல் போனாலோ, இதுபோன்ற குறிப்புகள் தற்காலிகமாக நிலைமையை சமாளிக்க உதவும்...' என்றார், மருத்துவர்.
மருத்துவ சேவையோடு, பொதுநல சேவையையும் செய்யும் இவரை, மற்ற மருத்துவர்களும் பின்பற்றலாமே!
— டி.கிருஷ்ணசாமி, கோவை.
