
ஷேக்ஸ்பியர் காவியத்தில் ரஜினிகாந்த்!
பிரபல இந்திப் பட இயக்குனரான விஷால் பரத்வாஜ், ஷேக்ஸ்பியர் எழுதிய காவியங்களான, 'மேக்பத், ஒதெல்லோ மற்றும் ஹேம்லெட்' ஆகியவற்றை இந்தியில், மக்பூல், ஓம்காரா மற்றும் ஹைதர் என்ற பெயர்களில் படங்களாக இயக்கினார். இந்நிலையில், ஷேக்ஸ்பியரின் இன்னொரு முக்கிய படைப்பான, 'கிங் லியர்' கதையை படமாக்கும் ஆசையும், தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ளது. 'அப்படி அப்படத்தை இயக்கினால், அதில், கிங்லியர் கதாபாத்திரத்தில், ரஜினிகாந்தை தான் நடிக்க வைப்பேன்; அவர் தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்...' என்று கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா
திறமை இருக்க, 'அட்ஜஸ்ட்மென்ட்' எதற்கு?
'அட்ஜஸ்ட்மென்ட் விவகாரத்தை நான் ஒத்துக்கொள்வதில்லை; அதனால் தான், எனக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை...' என்று, சமீபத்தில், ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார், நடிகை, பத்மப்பிரியா. அவரைத் தொடர்ந்து, காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷும்,'நடிகைகளை சினிமாவில் நடிக்க வைப்பதற்கு, 'அட்ஜஸ்ட் பண்ணக் கேட்பது, கேவலமான செயல். யாராக இருந்தாலும், நடிகைகளின் திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும்...' என்று கூறியுள்ளார். நாக்கில் இருக்கிறது நன்மையும், தீமையும்!
— எலீசா.
திருமணத்தால் அழகு குறையாது... - ஸ்ரேயா!
'திருமணத்திற்கு பின் நடிப்பீர்களா...' என்று ஸ்ரேயாவிடம் கேட்டால், 'கண்டிப்பாக நடிப்பேன்...' என்கிறார். மேலும், 'திருமணமாகி குழந்தை பெற்றதும், பெண்களின் அழகு போய் விடுகிறது என்று சொல்வதை, ஏற்க முடியாது; அதன்பின், அழகிலும், திறமையிலும் முழுமை பெறுகின்றனர் பெண்கள் என்பதே என் கருத்து. அதனால், நடிகர்களைப் போன்று, நடிகைகளும் வயதாகும் வரை நடிப்பதற்கு தகுதியானவர்களே...' என்கிறார். சொன்னாலும் பொல்லாது; சும்மா இருந்தாலும் நோவும்!
— எலீசா.
திட்டத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ்!
சாவித்திரி வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும், மகாநதி படத்தில், சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார், நடிகை, கீர்த்தி சுரேஷ். அதனால், அவர் நடித்த, பாசமலர் உள்ளிட்ட பல படங்களை பார்த்தவர், 'நடித்தால் இந்த மாதிரி நடிக்க வேண்டும்; இனிமேல், நானும் சாவித்திரி மாதிரியான நடிகையாகப் போகிறேன்...' என்று கூறி வந்தார். ஆனால், சில இயக்குனர்கள், அவரை கவர்ச்சி கலந்த கதைகளுக்கு ஒப்பந்தம் செய்த போது, 'சாவித்திரி காலம் வேறு; என் காலம் வேறு. அவர் மாதிரி நடிக்க நினைத்தாலும், வாய்ப்புத் தர மாட்டார்கள்...' என்று, தன் எண்ணத்தை கைவிட்டு விட்டார்.
— சினிமா பொன்னையா.
கறுப்பு பூனை!
தெகிடி படத்திற்கு பின், தமிழ் சினிமா தன்னை ஆதரிக்கவில்லை என்ற கோபத்தில், மலையாள சினிமாவுக்கு சென்ற, மூன்றெழுத்து நடிகைக்கு, கேரளாவும் கைகொடுக்காததால், மறுபடியும் தமிழில் நடித்து வருகிறார். அத்துடன், 'நான் ஆச்சாரமான பொண்ணு...' என்று கிளாமருக்கு ரெட் சிக்னல் கொடுத்து வந்தவர், இப்போது, வந்த வேகத்திலேயே கிரீன் சிக்னல் கொடுத்து, சில படங்களில் வரிந்து கட்டி நிற்கிறார்.
காதல் மற்றும் திருமண தோல்விகளில் சிக்கி தடுமாறிய மூனுஷா நடிகை, இப்போது காதல் மற்றும் திருமணம் என்ற பேச்சை யாராவது எடுத்தாலே, காதுகளை பொத்தி ஓடுகிறார். அந்த அளவுக்கு வெறுப்பில் இருக்கும் நடிகை, தன்னை காதலிப்பதாக மோசம் செய்த நடிகரையும், திருமணம் செய்து கொள்வதாக சொல்லி கழட்டி விட்ட தயாரிப்பாளரையும், வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்.
சினி துளிகள்!
* த்ரிஷா நடித்துள்ள, கர்ஜனை மற்றும் மோகினி படங்கள், ரிலீசுக்கு தயாராகி விட்டன.
* டார்ச்லைட் படத்தில், விலைமாதர்களாக நடிக்கின்றனர், சதா மற்றும் ரித்விகா.
* தானா சேர்ந்த கூட்டம் படத்தில், குணசித்ர வேடத்தில் நடித்துள்ளார், காமெடியன் செந்தில்.
* பலூன் படத்தை அடுத்து, தொலைக்காட்சி படத்தில், கரகாட்டமாடும் பெண்ணாக நடித்துள்ளார், ஜனனி அய்யர்.
அவ்ளோதான்!

