sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சபாபதி சார்!

/

சபாபதி சார்!

சபாபதி சார்!

சபாபதி சார்!


PUBLISHED ON : அக் 08, 2017

Google News

PUBLISHED ON : அக் 08, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊரிலிருந்து மாமனாரும், மாமியாரும் வந்தாலே, கண்மணிக்கு மனதில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். காரணம், பிரச்னை அவளுக்கும், அவர்களுக்கும் அல்ல; அவள் கணவன் கண்ணனுக்கும், மாமனார் சபாபதிக்கும் தான். அப்பாவும், பிள்ளையும் ஏதாவது வாக்குவாதம் செய்வதும், மாமியாரும், மருமகளும் அவர்களைச் சமாதானப்படுத்துவதும், அவர்கள் இங்கு வரும் போதெல்லாம் நடப்பது, வாடிக்கை.

வழக்கமான, மருத்துவ சோதனைக்காக, ஊரிலிருந்து அவர்கள் வந்து இறங்கியதுமே, ஒரு வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது; அது முடிந்து, மருத்துவமனைக்குச் சென்று வந்த பின், இப்போது, மாலையில் தான், ஒருவாறு வீட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது.

இந்த நேரம் பார்த்து, வீட்டுக்கு வந்த பழம் விற்பவரை, உட்கார வைத்து பேசிக் கொண்டிருந்தார், மாமனார்...

''உன் பெயர் என்னப்பா?''

''ஏழுமலை சார்...''

''ஊர்...''

''திருப்பத்தூர் பக்கம்...'' என்று ஒரு கிராமத்தின் பெயரைச் சொன்னார்.

''அட நம்ம ஊர் பக்கம் தான்... நான், உங்க பக்கத்து ஊர்ல தான் ஹையர் செகண்டரி ஸ்கூல்ல, கணக்கு வாத்தியாரா இருந்தேன்; சபாபதி வாத்தியார்ன்னா எல்லாருக்கும் நல்லா தெரியும்...'' என்றார்.

அவர்கள் பேசுவதை பார்த்து, கடுப்பானான், கண்ணன். மீண்டும் ஏதாவது பிரச்னை வெடிக்குமோ என்று பயந்த கண்மணி, கண்ணனை, உள் அறைக்கு அழைத்து, ''அவங்க ஏதாவது பேசிக்கிறாங்க; நீங்க இங்கேயே இருங்க...'' என்றாள்.

''பழம் விற்பவர உட்கார வைச்சு, குசலம் விசாரிக்கணுமா...''

''பெரியவங்க அப்படித்தான் இருப்பாங்க... இத்தனை நாள் பழம் வாங்குறோமே... என்னைக்காவது அவரோட பேரை கேட்கணும்ன்னு நமக்கு தோணிச்சா...'' என்றதும், ''அது சரி...'' என்று பம்மினான்.

''கண்மணி... எனக்கும், ஏழுமலைக்கும் டீ கொண்டாம்மா...'' என்று குரல் கொடுத்த சபாபதி, ஏழுமலையிடம், ''என் மருமக போடும் டீ அருமையா இருக்கும்...'' என்றார்.

''சரி மாமா...'' என்று எழுந்தவளின் பின், கண்ணனும் அடுக்களைக்குள் நுழைந்தான். வழியில், அப்பாவிடம், ''ஏம்பா, அம்மா கோவிலுக்குப் போகணும்ன்னு சொன்னாங்களே... கிளம்பலயா...'' என்றான், அப்போதாவது பேச்சை முடித்து, பழம் விற்பவரை வெளியே அனுப்பட்டுமே என்று!

''அம்மா அசதியா தூங்குறாளேடா... அவ எழுந்துக்கட்டும்,'' என்றவர், ஏழுமலையிடம் பேச்சை தொடர்ந்தார்.

டீ போடுகையில், காதில் விழுந்த மாமனாரின் பேச்சு, மீண்டும் கண்மணிக்கு பயத்தைக் கிளப்பியது.

''பையனோட காலேஜ் பீஸ் கட்டுறதுக்கு ஏம்பா தண்டல்காரன் கிட்ட கடன் வாங்குற.. வட்டியக் கணக்குப் போட்டுப் பார்த்தால், மாதம் ஐயாயிரம் ரூபாய் வருமே... நீ, சம்பாதிக்கிறதுல பாதிக்கு மேல் வட்டி கட்டினா, குடும்பத்தை எப்படி சமாளிப்பே, அசலை எப்படி கட்டுவே...'' என்றார்.

''என்ன செய்றது சார்... அவசரத்துக்குப் பணம் வேணும்ன்னா, நாம இருக்கிற இடத்துக்கு வந்தே குடுத்துட்டுப் போறாங்க; தினம் அவங்களே வந்து தண்டல் வசூல் செய்துக்குறாங்க. அதனால, வட்டி கணக்கெல்லாம் பாக்குறதில்ல...'' என்றார்.

''கணக்கு பாத்து தான் கடன் வாங்கணும்; பேங்குல குறைவான வட்டிக்கு கடன் தராங்க; பேங்குல வாங்கலாமில்ல...''

''நான், பழம் வாங்க போறதா, வியாபாரத்துக்கு போறதா... இல்ல பேங்குல போயி நிக்கிறதா... பேங்குக்காரன், ஒத்த ரூபாய் கொடுக்கணும்ன்னா கூட, அதுக்கு, சொத்து மதிப்பு, அத்தாட்சின்னு கேட்பான். ஆனா, எந்த அத்தாட்சியும் இல்லாம, நம்ம இடத்துக்கு வந்து கடன் தரான், தண்டல்காரன். இது தான் சார் நமக்கு வசதி... இப்படியே பழகிப் போச்சு...'' என்றான்.

''யாராவது தெரிஞ்சவங்ககிட்ட கம்மி வட்டிக்கு வாங்கலாம் இல்லன்னா வட்டியில்லாம கடன் தர்ற நல்லவங்க இருப்பாங்க; அவங்ககிட்ட கேட்கலாமே...'' என்று இழுத்தார்.

அடுத்து, அவர் ஏதாவது பேசுவதற்குள், டீயைக் கொடுத்து, பேச்சை மாற்றினாள், கண்மணி.

டீயைக் குடித்து, கிளம்பினார், பழம் விற்பவர். தூங்கி எழுந்து, தயாராக வந்த மனைவியுடன் கோவிலுக்கு கிளம்பினார், சபாபதி!

நிம்மதி பெருமூச்சு விட்ட கண்ணனை பார்த்து, ''என்ன பெருமூச்சு விடுறீங்க... பழம் விற்பவருக்கு மாமா பணம் கொடுத்துடுவாருன்னு பயந்துட்டீங்களா...'' என்று சீண்டினாள், கண்மணி.

''கொடுப்பாரு...கொடுப்பாரு...'' என்று உறுமினான், கண்ணன். காலையில் நடந்த வாக்குவாதம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

காரிலிருந்து இறங்கிய மாமியாரைப் பார்த்ததும், 'என்னங்க அத்தை... 'கவரிங்' வளையல போட்டிருக்கிறீங்க...' என்று கேட்டாள், கண்மணி.

'பேசாம இரு' என்பது போல், கண் ஜாடை காண்பித்த பின்தான், கேள்வியின் விபரீதம் புரிந்தது கண்மணிக்கு!

எதிர்பார்த்தது போலவே விசாரணையை ஆரம்பித்தான் கண்ணன்...

'ஏம்மா... உன் வளையல் என்ன ஆச்சு?'

'அது வந்துடா...' என்பதற்குள், 'டேய்... எல்லாத்துக்கும் உனக்கு விளக்கம் வேணுமா... எந்த வளையல் போட்டா என்னடா...' என்று எகிறினார், சபாபதி.

'சும்மா குதிக்காதீங்கப்பா... அம்மா வளையல் எங்க...' என்று பதிலுக்கு கோபமானான், கண்ணன்.

'பேங்கில அடகு வச்சுருக்கு...' என்றார்.

'அதுக்கு என்ன அவசியம் வந்தது... ஏன் என்கிட்ட சொல்லல...'

'எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணுமா... போய் வேலையப் பாரு...'

இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்த அம்மா, 'இல்லடா கண்ணா... நான் தான் குடுத்தேன்; பரசுராம மாமாவுக்கு வீட்டிற்கு தளம் போட அவசரமா பணம் தேவைப்பட்டது. அதிக வட்டிக்கு ஏன் வெளியில கடன் வாங்கணும்... பேங்குல வச்சு குடுக்கலாம்ன்னு கொடுத்தோம்...' என்றாள்.

'கொடுத்தோம்ன்னு சொல்லாத... சார் கொடுத்தார்ன்னு சொல்லு. மாமாவாம் மாமா... பால்காரர் எனக்கு மாமாவா... அக்கம் பக்கத்துல இருக்குறவங்கள எல்லாம் உறவு சொல்லி அழைச்சா, இப்படித்தான் பணம் கேட்பாங்க... உதவி செய்ய வேண்டியது தான் அதுக்குன்னு ஒரு அளவு இல்ல... யாரோ வீடு கட்ட, எங்க அம்மா, 'கவரிங்' வளையல் போடணுமா...'

'டேய்... அது என்ன நீ செஞ்சு போட்ட வளையலா... நான் சம்பாதிச்சு, என் பொண்டாட்டிக்கு வாங்கிப் போட்டது...' என்ற சபாபதி, மனைவியை பார்த்து, 'அப்பவே சொன்னேன்... ஊர்ல இருக்குற டாக்டரை பாத்தா போதும்ன்னு கேட்டியா... உசத்தியான டாக்டரை பார்த்து, எதுக்கு உயிரை புடிச்சு வைச்சுக்கிட்டு இருக்கணும்...' என்றார், கோபத்துடன்!

'டென்ஷன் ஆகாதீங்க... பிரஷர் ஜாஸ்தியா ஆகிடும்...' என்று, அவரைச் சமாதானப் படுத்த முயற்சித்தாள், அம்மா.

'உண்மைய சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதோ... நீங்க சம்பாதிச்ச நகையா இருந்தா கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லயா... போறவன் வர்றவனுக்கு எல்லாம் எங்க அம்மா நகையில உரிமை இருக்கு; நான் கேட்கக்கூடாதா...' என்ற கண்ணனை, இழுத்துச் சென்றாள் கண்மணி.

சாதாரணமாய் தான் கேட்ட கேள்வி, இப்படி சண்டையை உருவாக்கி விட்டதே என்று வருத்தப்பட்டவள், 'என்னங்க... டாக்டர், 'செக் - அப்'க்கு நேரம் ஆகுது; நீங்க, ஏதோ ஆபீஸ் வேலை இருக்குன்னு சொன்னீங்களே... அதை, செய்யுங்க... நான், அத்தை, மாமாவை, 'செக் - அப்'க்கு கூட்டிப் போறேன்...' என்று கிளம்பிச் சென்றாள்.

கோவிலிலிருந்து திரும்பிய தன் பெற்றோரிடம், இப்போது, சமாதானமாக பேசினான், கண்ணன்.

''அப்பா... நான் பணம் தர்றேன்; முதல்ல அம்மாவோட வளையல மீட்டுப் போடுங்க,'' என்றான்.

சபாபதி, ''சரிடா...'' என்று சொல்லவும், ''எதுக்குடா, வேணாம்...'' என்று மகனிடம் சொல்லியபடியே, மருமகளை பார்த்தார், மாமியார்.

''பரவாயில்ல அத்தை...'' என்றாள் கண்மணி.

இப்படி, முதலில் முட்டிக் கொள்வதும், பின் ஒட்டிக் கொள்வதுமாக, ஒரு வாரத்திற்கு பின், ஊருக்கு திரும்பினர், சபாபதி தம்பதியர்.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கண்ணன், ஷூவைக் கழற்றும் போது, ''சார்...'' என்றபடி உள்ளே நுழைந்தார், ஏழுமலை.

''வாங்க ஏழுமலை...'' என்று, பழம் விற்பவரை, கண்ணன் பேர் சொல்லி அழைத்தது, அவர்கள் இருவருக்குமே வித்தியாசமாக இருந்தது.

''இந்தாங்க சார் பேயன் பழம்; நீங்க ஆபீஸ் விட்டு வர்றத பாத்தேன்; அதுதான் உடனே கொடுத்துடலாம்... இல்லன்னா வேறு யாராவது கேட்டு வந்துருவாங்கன்னு கொண்டு வந்தேன்...'' என்றார்.

''நேத்து தானே வாழைப் பழம் கொடுத்தீங்க...'' என்றபடி ஹாலுக்கு வந்தாள், கண்மணி.

''இல்லீங்கம்மா... ரெண்டு நாளைக்கு முன், சாரோட அப்பா, பேயன் பழம் கிடைச்சா, உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார். வெயிலுக்கு நல்லது; அம்மை வந்தவங்க கூட உடல் குளிர்ச்சிக்கு சாப்பிடுவாங்க; இப்பத் தான் கிடைச்சது... அதான் கொண்டு வந்தேன்,'' என்றார்.

''எவ்வளவு ரூபா...'' என்று கேட்டான், கண்ணன்.

''பணம் வேணாம் சார்... எப்பவும் என்கிட்டத்தான் பழம் வாங்குறீங்க... இது, உங்கப்பா சொன்ன மரியாதைக்காக,'' என்று சொல்லி, திருப்பியவரை, கூப்பிட்டு, ''அன்னைக்கு பையனோட காலேஜ் பீஸ் கட்டணும்ன்னு அப்பாகிட்ட பேசிட்டு இருந்தீங்களே... கட்டிட்டிங்களா...'' என்று கேட்டான்.

''இன்னும் இல்ல சார்... தண்டல்ல சொல்லியிருக்கேன்...''

ஒரு வினாடி யோசித்தவன், ''தண்டல் வேணாம்; வட்டியில்லாம நான் தர்றேன். அப்பப்போ உங்களால எவ்ளோ முடியுமோ, கொடுத்து அடைச்சிடுங்க,'' என்றான்.

''ரொம்ப நன்றி சார்... பையன வந்து உங்கள பாக்கச் சொல்றேன்,'' என்று கிளம்பினார், ஏழுமலை.

தன் செய்கையை தானே நம்ப முடியாமல், கண்மணியை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல், கழற்றி வைத்த ஷூவையே பார்த்தான், கண்ணன்.

லேசாகத் தொண்டையை செருமினாள், கண்மணி. அவன் நிமிர்ந்து பார்க்க, அவனை குறுப்பாக பார்த்து சிரித்தாள், கண்மணி.

பாலா சிவசங்கர்

கல்வித்தகுதி: எம்.பி.ஏ.,

பணி: சென்னையில் கணினி நிறுவனம் ஒன்றில் மேலாளர்.

சொந்த ஊர்: காவேரிப்பாக்கம்.

நிறைய கவிதைகள் எழுதி, பரிசுகளும் பெற்றுள்ளார்.

இணையதளங்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். பத்திரிகையில், இவரது சிறுகதை வெளியாவது இதுவே முதல் முறை; பரிசு பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் இணைந்து, குழந்தைகளுக்கான, 'பிள்ளைப்பா' என்ற பெயரில், 25 பாடல்கள் அடங்கிய தொகுப்பை, புத்தகம் மற்றும் சி.டி., வடிவில் வெளியிட்டுள்ளார். 'குறளும் பொருளும்' என்ற தலைப்பில், திருக்குறளை ஒலி வடிவில் கொண்டு வர இருக்கிறார். இதுதவிர, தாகூரின் கீதாஞ்சலியை தமிழில் மொழி பெயர்த்து வருகிறார். திரைப்பட பாடல் எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளது.






      Dinamalar
      Follow us