PUBLISHED ON : பிப் 11, 2018

ரூபாய், 320 கோடியில், கமலின், இந்தியன் 2!
ஷங்கர் இயக்கத்தில், கமல் இரு வேடங்களில் நடித்த படம், இந்தியன்; இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, மீண்டும் கமலை வைத்தே இயக்குகிறார், ஷங்கர். 320 கோடி ரூபாய், பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின், இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரராக நடிக்கிறார், கமல். மேலும், சுபாஷ் சந்திரபோஸ், விமான விபத்து ஒன்றில், தைவானில் இறந்து விட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில், தைவானில் இப்படத்தின் துவக்க விழா நடத்தப்பட்டு, இந்தியன் 2 என்று எழுதப்பட்ட பறக்கும் பலுானை, வானில் பறக்க விட்டுள்ளனர்.
— சினிமா பென்னையா
மீண்டும் படம் இயக்கும் தனுஷ்!
ராஜ்கிரண் நடித்த, பவர் பாண்டி படத்தை இயக்கிய தனுஷ், தற்போது, வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் மாரி 2 படங்களில் நடிக்கிறார். இந்த படங்களை அடுத்து, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை, தானே இயக்கி, நாயகனாக நடிக்கிறார். பவர் பாண்டியில், காதல் கதையை படமாக்கிய அவர், இம்முறை, அரசியல் பின்னணி கொண்ட ஒரு ஆக் ஷன் படத்தை இயக்க இருக்கிறார்.
— சி.பொ.,
புதுமையை விரும்பும், காஜல் ஆகர்வால்!
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகியாக வலம் வருபவர், காஜல் அகர்வால். மும்பை நடிகையான இவர், படத்திற்கு படம் தன்னை இளமையாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது ஆயுர்வேத மசாஜ் செய்து கொள்கிறார். அத்துடன், ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு மாதிரியாக தன் அழகு வெளிப்பட வேண்டும் என்பதற்காக, ஆடை அலங்காரத்தில் புதுமை செய்ய, ஒவ்வொரு படத்திற்கும், தன் சார்பில், ஒரு காஸ்டியூம் டிசைனரை நியமித்து கொள்கிறார். இல்லது வாராது; உள்ளது போகாது!
— எலீசா
மகன்களுடன் இணைந்து இசையமைக்கும் இளையராஜா!
சமீபத்தில், இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை பிசியாக இசையமைத்து வரும் இளையராஜா, சீனு ராமசாமி இயக்கத்தில், விஜயசேதுபதி நடிக்கும், மாமனிதன் என்ற படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில், அவருடன் இணைந்து, அவரது மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் இசையமைக்கின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இசையமைப்பாளர்கள், ஒரு படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை.
— சி.பொ.,
கறுப்பு பூனை!
தளபதியுடன் இரண்டாவது முறையாக டூயட் பாடும், ரெமோ நாயகி, இதுவரை கோடு தாண்டாமல் நடித்து வந்தார். ஆனால், இந்த படத்தில், மாடர்ன் கெட்டப்பில், கவர்ச்சி கோதாவில் இறங்குகிறார். தளபதி படத்திற்காக மட்டுமே தன் கொள்கையை சற்று தளர்த்தியிருப்பதாக அபிமானிகளிடம் காது கடித்து வருகிறார்.
பி்ரபல வாரிசு நடிகை, தன் லண்டன் பாய் பிரண்டை, சமீபத்தில், தன் பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன், தற்போது, புதிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி, வெறுத்துப்போனவர், அடுத்த படியாக பாய் பிரண்டை திருமணம் செய்து, சினிமாவுக்கு குட்பை சொல்ல முடிவு செய்துள்ளார்.
சினி துளிகள்!
* தற்போது, தன் அப்பா கமலுடன் இணைந்து, சபாஷ் நாயுடு என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார், ஸ்ருதிஹாசன்.
* ஒரே நேரத்தில், சாமி 2, நடிகையர் திலகம், மகாநதி மற்றும் விஜய் 62 என, நான்கு படங்களில் நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ்.
* வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் படங்களை தொடர்ந்து மீண்டும், சீமத்துரை படத்தில், சிவகார்த்திகேயனும் - சூரியும் இணைந்து உள்ளனர்.
அவ்ளோதான்!
