PUBLISHED ON : பிப் 11, 2018

சித்திரன் எனும் கந்தர்வன், கந்தர்வப் பெண்களோடு நீராடி கொண்டிருந்தான். அந்தப் பக்கமாக வந்தார், நாரதர். அவரைக் கண்டதும், குளத்தை விட்டு வெளியேற முயன்றனர், கந்தர்வ பெண்கள். ஆனால், அவர்களை தடுத்து நிறுத்திய சித்திரன், அவர்களோடு குளத்தில் கும்மாளம் போட்டதோடு, நாரதரை அவமானப்படுத்தவும் செய்தான்.
'கந்தர்வனே... உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்; அதை மீறி நடந்து, முறைகேடான செயல்களில் ஈடுபட்ட நீ, குயிலாக பிறக்கக் கடவாய்...' என, சாபம் கொடுத்தார், நாரதர்.
இதனால், மனம் வருந்திய கந்தர்வன், அவரை வணங்கி, சாப விமோசனம் கேட்க, 'ஆமலக வனத்தில் குயிலாக பிறந்து, பொருணையாற்றில் மூழ்கி, காசிபேசுவரரை சில காலம் வழிபடு; உன் சாபம் நீங்கும்...' என்று கூறிச் சென்றார்.
அதேபோல், பாண்டிய நாட்டில் உள்ள ஒரு காட்டில் குயிலாக பிறந்தான், கந்தர்வன். ஒருசமயம், அங்கிருந்த கோவிலில் தேவர்கள் வழிபாடு முடித்து செல்வதை கண்டது, குயில். உடனே, தன் பிறவியின் அறிவு உண்டாக, 'நாமும் இறைவனை வழிபாடு செய்து, நற்கதி பெற வேண்டும்...' என, எண்ணியது.
அதனால், அனைவரும் சென்ற பின், பொருணையாற்றில் நீராடி, தன் வாயில் நீரை எடுத்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்தது; பின், செடிகளில் உள்ள மலர்களை, தன் அலகில் கொய்து வந்து அர்ச்சனை செய்தது; மறுபடியும் பறந்து போய் பழங்களை கொத்தி வந்து நைவேத்தியம் செய்து, இனிமையான குரலில் பாடியது.
மாலையில், காசிபேசுவரருக்கு பூஜை செய்யும் ஆதி சைவர், சிவனடியார்களுடன் கோவிலுக்கு வருவதை கண்டு, அங்கிருந்து பறந்து சென்றது.
கருவறையில், இறைவனின் திருக்கோலத்தை கண்ட ஆதி சைவர், 'யாரோ முறைகேடாக உள்ளே வந்து ஏதோ செய்திருக்கின்றனர்...' என, எண்ணி வருந்தி, அத்தகவலை உடனே மன்னருக்கு தெரிவித்தார்.
அதிர்ந்துபோன அரசர், கோவிலுக்கு விரைந்தார். கோவில் முன், ஊர் மக்கள் அனைவரும் கூடினர். மன்னர் விசாரணை தொடர, பலனேதும் கிடைக்கவில்லை. வருந்திய மன்னர், 'இதை கண்டுபிடிக்கும் வரை, உணவு உட்கொள்ள மாட்டேன்...' என்று சொல்லி, கோவிலிலேயே உறங்கினார்.
அன்றிரவு, அரசரின் கனவில் தோன்றிய சிவபெருமான், 'மன்னா... கவலை வேண்டாம்; எனக்கு வழிபாடு செய்தது, ஒரு குயில் தான். அதன் வழிபாடு எனக்கு மிகவும் உவப்பானது; அதை விரட்டவோ, வேறெதுவும் செய்யவோ வேண்டாம்...' என்று அருளி மறைந்தார்.
கனவு கலைந்ததும், 'பரம்பொருளே... இந்த அடியேன் மீது உனக்கு இவ்வளவு கருணையா...' என, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, தான் கண்ட கனவைப் பற்றி அனைவரிடமும் கூறினார், மன்னர். பின், காசிபேசுவரரையும் - மரகதாம்பிகையையும் வணங்கி, அரண்மனை திரும்பினார்.
அதன்பின், சில காலம் குயில் பூஜை செய்து வர, சிவபெருமான், குயிலின் முன் தோன்றி, அதற்கு சாப விமோசனம் தந்தார். கூடவே, 'குயிலே... உனக்கு வேண்டுவனவற்றை கேள்...' என்றார்.
'பெருமானே... எனக்கு முக்தி தந்தருள வேண்டும்; இவ்வூரும் அடியேனால் வழிபட்ட தாங்களும், அடியேன் நீராடிய இத்தீர்த்தமும், அடியேன் பெயரால் வழங்கப்பட வேண்டும்...' என, வேண்டியது.
குயில் கேட்ட வரங்களை குறைவில்லாமல் வழங்கினார், சிவபெருமான். அன்று முதல் அவ்வூரின் பெயர், கோகிலேச்வரம் என்றும், சுவாமியின் திருநாமம், கோகிலேச்வரர் என்றும், இங்குள்ள தீர்த்தம் கோகில தீர்த்தம் என்றும் வழங்கப்பட்டன.
கந்தர்வனாக இருந்த ஒருவன், நாரதர் என்னும் வேகத் தடையை பொறுமையாக கடந்து, சிவம் என்னும் பரம்பொருளை தரிசித்து, தன் பெயரையும் நிலைநாட்டிய வரலாறு இது!
பி.என்.பரசுராமன்
அறிவோம் ஆன்மிகம்!
சிவ தரிசன பலன் யாது?
காலையில் சிவ தரிசனம், உடல் ஆரோக்கியத்தையும், மன தைரியத்தையும் அளிக்கும். உச்சிகால தரிசனம், செல்வ வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மாலைப் பொழுது சிவதரிசனம் வாழ்க்கையில் ஏற்படும், கஷ்ட, நஷ்டங்களை விலக்கி நன்மை தரும்; அர்த்தஜாம பூஜையின்போது தரிசனம் செய்தால், இல்லற வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
