PUBLISHED ON : பிப் 18, 2018

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
பல ஆண்டுகளாக, இந்தியில் படங்கள் இயக்கி வந்த பிரபுதேவா, மீண்டும் தமிழில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தேவி என்ற படத்தில், நாயகனாக, 'ரீ-என்ட்ரி' கொடுத்தார். அந்த படம் ஓரளவு ஓடியபோதும், அதன்பின் அவர் நடித்த படங்கள் தோல்வியடைந்தன. இந்நிலையில், தற்போது, மீண்டும், ஏ.எல்.விஜய் இயக்கும், லட்சுமி என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில், ஏதாவது பெண் பெயரை கொண்டதாக இருக்க வேண்டும் என்று பிரபுதேவா கேட்டுக் கொண்டதாலேயே, அப்படத்திற்கு, லட்சுமி என்று டைட்டில் வைத்துள்ளார் ஏ.எல்.விஜய். தேவி படம் வெற்றி பெற்றதால், பெண் பெயரில் டைட்டில் வைக்கும் சென்டிமென்டை தொடரப் போவதாக கூறுகிறார், பிரபுதேவா.
—சி.பொ.,
சமந்தா வரவேற்பு!
முன்பெல்லாம் திருமணம் முடிந்ததும், நடிகையரை ஓரங்கட்டி விடுவர். ஆனால், இப்போது, வித்யாபாலன், சமந்தா, அமலாபால் உள்ளிட்ட சில நடிகையர், தொடர்ந்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி, களத்தில் உள்ளனர்.
இதுபற்றி சமந்தா கூறுகையில், 'சினிமா உலகம், படிப்படியாக மாறி வருகிறது; குறிப்பாக, வயதான நடிகர்கள், 'டூயட்' பாடுவது போன்று, வருங்காலத்தில் திருமணமான நடிகையருக்கும், கதாநாயகி வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல் உருவாகி வருகிறது. சினிமா உலகில் பெண்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி இருக்கின்றனர். இது, வரவேற்க வேண்டிய விஷயம்...' என்கிறார். ஊதின சங்கு ஊதினால், விடிகிற போது விடியட்டும்!
— எலீசா
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
தன் மகள் ஜான்வி கபூரை, சினிமாவில் நடிக்க வைப்பதற்காக, தொடர்ந்து கதைகள் கேட்டு வந்த ஸ்ரீதேவி, இப்போது, தெலுங்கில் வெளியான, டெம்பர் படத்தின் இந்தி ரீமேக் மற்றும் மராத்தியில் வெளியான, சாய்ரத் என்ற படத்தின் இந்தி ரீமேக்கான, தடக் என்ற படம் என, ஒரே நேரத்தில், இரண்டு படங்களில் மகளை நடிக்க வைக்கிறார். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்!
— எலீசா
சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
பிச்சைக்காரன், சைத்தான் மற்றும் எமன் என்று தன் படங்களுக்கு நெகடிவ் டைட்டில்களாக வைத்து வரும் விஜய் ஆண்டனி, தற்போது, திமிரு புடிச்சவன் என்ற படத்தில், முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில், வழக்கமான போலீசாக உருட்டல், மிரட்டல் என்று நடித்து விட்டு செல்லாமல், ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று ஒரு காட்சியில், சிலம்பாட்டம் ஆடயிருக்கிறார். அதற்காக, தற்போது, தீவிரமாக, சிலம்பம் கற்று வருகிறார்.
— சி.பொ.,
கறுப்பு பூனை!
சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் பூ நடிகையை, தமிழில் யாரும் கண்டுகொள்வதில்லை. அதனால், இதுவரை அரசியலில் மட்டுமே காய் நகர்த்தி வந்த நடிகை, தற்போது, சினிமா வட்டாரங்களிலும் தலை காட்டுகிறார். குறிப்பாக, முன்னணி நடிகர்களை யாரேனும் சமூக வலை தளத்தில் வம்புக்கு இழுத்தால், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நடிகை, அந்த சாக்கில் அவர்களுடன் நட்பு வளர்த்து, அவர்களின் படங்களில் நடிப்பதற்கும், 'ரூட்' போட்டு வருகிறார்.
தென்னிந்திய நடிகையர், தன்னுடன், 'டூயட்' பாட தயங்கி வருவதால், மும்பை நடிகையரை இறக்குமதி செய்யும் வாசனை காமெடியன், அவர்களுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இச்செய்தி மீடியாக்களில் புகைந்து, அவரது குடும்பத்தில் விவகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இப்போது சினிமா நிகழ்ச்சிகளில் தன்னுடன் நடிக்கும் நடிகையர் பங்கேற்றால், அவர்களை விட்டு பத்து அடி தள்ளியே நின்று, தன்னை நல்லவராக காட்டிக் கொள்கிறார்.
சினி துளிகள்!
* அழுத்தமான வேடமாக இருந்தால், அம்மா வேடங்களிலும் நடிக்கப் போவதாக கூறுகிறார், குஷ்பு.
* கமல்ஹாசனின், 'ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிக்கும் ஒரு படத்தில், நாயகனாக நடிக்கிறார், சீயான் விக்ரம்.
* ரஜினி நடித்த, தளபதி படத்திற்கு பின், தற்போது தயாராகியுள்ள, கேணி படத்தில், கே.ஜே.யேசுதாஸ் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்.
* சந்தானத்துடன், சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி சாண்டில்யா, தற்போது, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில், கவுதம் கார்த்திக்குடன் நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!
