தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நல்லதை நினை!

நல்லதை நினை!

நல்லதை நினை!


PUBLISHED ON : பிப் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கன்னட நாட்டில், வராகபுரம் எனும் ஊரில், கண்வன் எனும் அந்தணர் வாழ்ந்தார்; அவருடைய மகன் சுசரிதன். சிறு வயதிலிருந்தே தந்தையின் சொல்படி வேதங்களையும், ஞான நுால்களையும் கற்றுத் தேர்ந்தான். பின், அவனுக்கு திருமணமும் செய்து வைத்தனர்.

நற்குணசீலனான சுசரிதன், தர்ம நெறிப்படி வாழ்ந்து வந்தான். இந்நிலையில், அவனது தந்தையான கண்வனிடம் சில தீய பழக்கங்கள் தொற்றிக் கொள்ள, மனம் போன போக்கில் வாழ்ந்து, நோயில் வீழ்ந்தார்.

ஒருநாள், மகனை அழைத்து, 'சுசரிதா... தீயவர்களுடன் சேர்ந்து, செய்யக் கூடாதவைகளை எல்லாம் செய்தேன்; உத்தமர்களை துன்புறுத்தினேன். இனி, நான் பிழைக்கப் போவதில்லை; எனக்காக சேதுவிற்கு போய், புனித நீராடி வா... அப்போது தான், நற்கதி பெறுவேன்...' என, வேண்டினார், கண்வன்.

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற, தீர்த்த யாத்திரை புறப்பட்டான், சுசரிதன். பல ஸ்தலங்களுக்கு சென்றவன், ஜோதிவனம் எனும், 'திருக்கானப்பேர்' என்ற திருத்தலத்தை அடைந்த போது, மாலையாகிவிட்டது. அங்கிருந்த ஆனைமடு எனும், புனித தடாகத்தை கண்டான். உடனே, அவனுள் ஏதேதோ உணர்வுகள் ஏற்பட, 'இங்கு வந்தவுடன் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறதே... இன்றிரவு இங்கு தங்கி, நாளை, இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடிய பின், பயணத்தை தொடரலாம்...' என்று தீர்மானித்தான்.

இரவு, ஆனைமடு தடாகத்தின் கரையில் படுத்து உறங்கினான், சுசரிதன். கனவில், அவனது தந்தை வந்து, 'மகனே... நீ ஊரை விட்டு புறப்பட்ட பின், எம துாதர்கள் வந்தனர்; எனக்கு கொடிய தண்டனைகள் பலவும் தந்து, நரகத்தில் தள்ளுவதற்காக இழுத்துச் சென்றனர். அப்போது, எமன் வந்து, 'துாதர்களே... இவன் பிள்ளை, திருக்கானப்பேர் எனும் சிவ தலத்தில் உள்ள ஆனைமடு எனும் புண்ணிய தீர்த்தத்தில், நாளை நீராட வேண்டும் என்ற எண்ணத்தோடு உறங்குகிறான்; ஆகையால், இவனை விட்டு விடுங்கள்...' என்றார். அவர்கள் என்னை விடுவித்ததும், 'உன் நோய் நீங்கப் பெறுவாயாக...' என, வாழ்த்தி, அனுப்பி வைத்தார் எமன்...' என்று சொல்ல, சுசரிதனுக்கு கனவு கலைந்து, விழிப்பு ஏற்பட்டது.

விடிந்ததும், ஆனைமடு எனும் அப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, ஊர் திரும்பினான். வீட்டில், கனவில் கண்டபடியே, தன் தந்தை நோய் நீங்கி, நலமாக இருந்ததைக் கண்டு, 'ஏழு கடல்கள், கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்கள் ஆகியவற்றில் நீராடிய புண்ணியம், ஆனைமடு தீர்த்தத்தில் ஒருமுறை முழுகினாலும் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்வது எத்தனை உண்மை...' என்று கூறி வியந்தான், சுசரிதன்.

துர்வாச மகரிஷியால் சபிக்கப்பட்ட, இந்திரனின் ஐராவதம் எனும் யானை, ஆனைமடு தீர்த்தத்தில் நீராடி, சாபம் நீங்கப் பெற்றது.

சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில், 20 கி.மீ., துாரத்தில் உள்ளது, இத்தலம்.

தந்தைக்கு நல்லது நடக்க நினைத்தான், தனயன்; அது அப்படியே பலித்தது. நாமும் நல்லதையே நினைப்போம்; நல்லதே நடக்கும்!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

நவக்கிரக வழிபாட்டின் பலன் என்ன?

ஆரோக்கியம் பெற, சூரியனையும்; புகழ் - சந்திரன், செல்வ வளம் - செவ்வாய், அறிவு - புதன், ஞானம்- வியாழன், அழகு மற்றும் நாவன்மை பெற - வெள்ளி, சந்தோஷம் மற்றும் ஆயுள் - சனீஸ்வரர், எதிரி பயம் நீங்க - ராகு, குலம் அபிவிருத்தியடைய கேதுவையும் வணங்க வேண்டும் என, சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us