PUBLISHED ON : மார் 18, 2018

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
இந்தியில், படங்கள் இயக்கி வந்த பிரபுதேவா, ஏழு ஆண்டுகளுக்கு பின், தேவி படத்தில் நாயகனாக நடித்தார். அதைத் தொடர்ந்து, பல படங்களில் நடித்து வரும் அவர், ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கும், மெர்குரி படத்தில், வசனம் பேசாமல், 'மோனோ ஆக்டிங்' செய்து, நடித்துள்ளார், இது குறித்து அவர் கூறும் போது, 'இந்த ஒரு படத்தில் நடித்தது, நுாறு படத்தில் நடித்ததற்கு சமம்; அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். இப்படம், காலத்துக்கும் என் பெயர் சொல்லும்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி!
கமல் - ஸ்ரீபிரியா நடித்த, நீயா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. இதில், ஜெய் நாயகனாக நடிக்க, ராய்லட்சுமி, கேத்ரின் தெரசா, வரலட்சுமி ஆகியோர் நாயகியராக நடிக்கின்றனர். பழி வாங்கும் பாம்பாக, ஸ்ரீபிரியா நடித்த வேடத்தில் நடிக்கிறார், ராய் லட்சுமி. அவர், நவீன காலத்து பாம்பாக மாறி, பழிவாங்குவதை, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்குகின்றனர். காலத்துக்கு ஏற்ற கோலம்!
— எலீசா
அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
சபாஷ் நாயுடு படத்தில், தன் தந்தை கமலுடன் இணைந்து, அவரின் மகளாகவே நடிக்கிறார், ஸ்ருதிஹாசன். இந்நிலையில், தற்போது, நடிகை வரலட்சுமியும், தன் தந்தை சரத்குமாருடன் இணைந்து, பாம்பன் படத்தில் நடிக்கிறார். நிஜத்தில் அப்பாவின் பாசக்கார மகளாக இருக்கும் வரலட்சுமி, இப்படத்தில், எதிரும் புதிருமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கண் கட்டி வித்தை காட்ட வந்தாயோ!
— எலீசா
போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
மலையாள படம் ஒன்றில், 'கண் சிமிட்டல்' பாடல் மூலம் பிரபலமான, மலையாள நடிகை பிரியா வாரியர், சமீபத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்ற, போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து, விற்பனை செய்யப்பட்டு வரும் போதை பொருட்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர், அதன் தீமைகளை எடுத்துச் சொல்லும் விதத்தில் மாணவர்கள் மத்தியில் பேசினார். இதனால், அவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தொடர்ந்து இதுபோன்ற இளைய சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போவதாக கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* தளபதி நடிகரும், எதிர்காலத்தில் அரசியல் கோதாவில் குதிப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பியிருந்தனர். ஆனால், நடிகரின் தந்தைகுலம், சமீபத்தில் ஒரு பட விழாவில் பேசும்போது, 'இப்போது அரசியல் ரொம்ப கெட்டுக் கிடக்கிறது; அதனால், என் மகனை அரசியலுக்கு கொண்டு வரும் எண்ணமே இல்லை...' என்று திட்டவட்டமாக பேசினார். அதையடுத்து, தளபதியை நம்பிக் கொண்டிருந்தால், தங்களுக்கு வாழ்க்கை இருக்காது என்று, அவரது ரசிகர் மன்றத்திலுள்ள சில முக்கிய நிர்வாகிகள், புதிதாக அரசியலில் பிரவேசித்துள்ள இரு உச்ச நடிகர்களின், ரசிகர் மன்றங்களை தேடிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
* இரண்டெழுத்து படத்தில் நடித்துள்ள பிரேமம் நடிகை, படப்பிடிப்பு தளத்தில், காட்சியை அப்படி மாற்றுங்கள், இப்படி மாற்றுங்கள் என்று இயக்குனருக்கு ஏகப்பட்ட, 'டார்ச்சர்' கொடுத்து விட்டார். இதனால், நடிகையால், பெரும் தலைவலிக்கு ஆளான இயக்குனர், அந்த நடிகையை பற்றி தன்னிடம் விசாரிக்கும் இயக்குனர்களிடம், 'நல்ல நடிகை தான்; ஆனா, கதையை மட்டும் பிரிச்சு மேஞ்சிடுவாரு...' என்று சொல்ல, இதனால், தங்கள் படங்களுக்கு, 'புக்' பண்ண நினைத்திருந்த சில இயக்குனர்கள், எகிறி குதித்து ஓடுகின்றனர்.
சினி துளிகள்!
* 'மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்தபோதும், தமிழ் படங்களில் நடிக்கும்போது தான் தமிழச்சியான எனக்கு பெருமையாக உள்ளது...' என்கிறார், சாய் பல்லவி.
* கத்தி படத்தை போன்று, தன், 62வது படத்திலும், விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கிறார், விஜய்.
* ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்க இருக்கும், இந்தியன் 2 படத்தில், வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இந்தி நடிகர், அஜய் தேவ்கான்.
* இந்தியில் ஷாருக்கான் நடித்துள்ள, ஜீரோ படத்தில், கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார், சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இதுவே, அவரது கடைசி படமாகும்.
அவ்ளோதான்!
