PUBLISHED ON : ஜூலை 15, 2018

ரஜினி - எஸ்.பி.பி.,யை இணைத்த அனிருத்!
ரஜினி நடித்த அதிகப்படியான படங்களில், அவருக்கான ஓப்பனிங் பாடலை பாடியவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஆனால், சமீப காலமாக, ரஜினி படங்களில், எஸ்.பி.பி., பாடிய பாடல் இடம்பெறவில்லை. தற்போது, ரஜினி நடித்து வரும், 165வது படத்தில், அனிருத் இசையில், ரஜினியின் அறிமுக பாடலை பாடுகிறார், எஸ்.பி.பி., இதற்கு முன், ரஜினிக்காக, பாட்ஷா படத்தில் அவர் பாடிய, 'நான் ஆட்டோக்காரன்...' முத்து படத்தில், 'ஒருவன் ஒருவன் முதலாளி...' மற்றும் படையப்பா படத்தில், 'என் பேரு படையப்பா...' போன்ற பாடல்கள் வரிசையில், 'இந்த பாடலும், ரஜினி - எஸ்.பி.பி., கூட்டணியில், 'மாஸ் ஹிட்' பாடலாக இருக்கும்...' என்கிறார் அனிருத்.
— சி.பொ.,
ஹேர் ஸ்டைலை மாற்றும் நயன்தாரா!
அறம் படத்திற்கு பின், கோலமாவு கோகிலா படத்தில் நடித்துள்ள நயன்தாரா, இமைக்கா நொடிகள் என்ற படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த, சி.பி.ஐ., வேடத்தில் நடித்துள்ளார். கதைப்படி தொடர் கொலைகள் செய்யும் சைக்கோவை பிடிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த வேடத்திற்காக, தன் தலைமுடியில் பாதியை கத்தரித்து அதை ஸ்டைலிஷாக மாற்றியுள்ள நயன்தாரா, முதன்முதலாக ஆக் ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். கூத்துக்கு தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!
— எலீசா
இன்ஸ்டாகிராமை கலக்கிய மதுஷாலினி!
இதுவரை பாலிவுட் நடிகைகள்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். ஆனால், சமீபகாலமாக கோலிவுட் நடிகைகளும் அந்த பட்டியலில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அவன் இவன் மற்றும் துாங்காவனம் போன்ற படங்களில் நடித்துள்ள மதுஷாலினியும், தற்போது, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மேலாடை இல்லாத ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு கலக்கு கலக்கி விட்டார். இதுகுறித்து விசாரித்தவர்களிடம், 'அடுத்து அதிரடியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆயத்தமாகி விட்டேன். அதற்கான ஒரு முன்னோட்டம் தான் இது...' என்று அதிரடி பதில் கொடுத்துள்ளார் மதுஷாலினி. போகாத ஊருக்கு வழியும், காராமணிக்கு களையும்!
— எலீசா
கவுதம்மேனன் படத்தில் சசிகுமார்
சமுத்திரகனி இயக்கத்தில், நாடோடிகள்-2 படத்தில் நடித்து வரும் சசிகுமார், கவுதம்மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில், ஒரு சின்ன கேரக்டரில் நடிக்கிறார். இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த அவர், இந்த படத்தில், 20 நிமிடம் மட்டுமே வந்து செல்லும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். காரணம், கவுதம்மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது சசிகுமாரின் நீண்ட நாள் ஆசையாம். அதனால்தான், 'கெஸ்ட் ரோல்' என்றாலும், 'ஓ.கே.,' சொல்லியதாக, குறிப்பிடுகிறார்.
—சி.பொ.,
கறுப்பு பூனை!
ஓவியமான அந்த நடிகை, சினிமாவில் விட்ட மார்க்கெட்டை மீண்டும் கைப்பற்றியிருக்கிறார். அதேசமயம், இம்முறை வெகு விரைவிலேயே வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக, மேல்தட்டு நடிகர்களுடன் நடித்து, மார்க்கெட்டை ஸ்டெடி பண்ண திட்டம் தீட்டி வருகிறார். அதற்காக, மேல்தட்டு நடிகர்களுக்கு கதை சொல்லி, கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இளவட்ட இயக்குனர்களுடன் நட்பு வளர்க்கும் நடிகை, அவர்களுக்கு, 'வீக் எண்ட் பார்ட்டி'யும் கொடுத்து, தன் மேல்தட்டு ஆசையை, 'ஓப்பன்' பண்ணி வருகிறார்.
மறுபிரவேசம் செய்துள்ள அங்காடி நடிகை, வந்த வேகத்தில் அதிரடியாக படங்களை கைப்பற்றி விடவேண்டும் என்று நினைப்பவர், சில இளவட்டங்களுடன் நட்பு வளர்த்து, புதிய படங்களில் வேகமாக ஒப்பந்தமாகி வருகிறார். அதேசமயம், முதல் ரவுண்டில் மிட்நைட் மசாலா நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்த அம்மணி, இம்முறையும் அதே போன்று வந்தால், தன் பெயர் மீண்டும், 'டேமேஜ்' ஆகிவிடும் என்பதற்காக, பார்ட்டிகளுக்கு விசிட் அடிப்பதை நிறுத்தி, கேரவனுக்குள்ளேயே பார்ட்டி கொடுத்து, வருகிறார், நடிகை.
சினி துளிகள்!
* அஞ்சலி நடிக்கும், லிசா என்ற படம் தமிழ், மலையாளத்தில் உருவாகிறது.
* விமல் - ஓவியா நடித்து வரும், களவாணி-2 படத்தின் தலைப்பு, கே-2 என்று மாற்றப்பட்டுள்ளது.
* திமிறு புடிச்சவன் படத்தில், போலீஸ் வேடத்தில் நடிக்கிறார், நிவேதா பெத்துராஜ்.
* நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது, பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கும், ஆர்.ஆர்.ஆர்., என்ற படத்தில் நடிக்கிறார்.
அவ்ளோதான்!
