PUBLISHED ON : ஆக 19, 2018

எம்.ஜி.ஆர்., பட தலைப்பில் விஜயசேதுபதி!
விஜயசேதுபதி போலீசாக நடித்த, சேதுபதி படத்தின் இரண்டாம் பாகம் துவங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு, சேதுபதி - 2 என்று தற்போதைக்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், எம்.ஜி.ஆரின், வெற்றிப்பட தலைப்புகளில் ஒன்றை இப்படத்திற்கு வைக்க முடிவெடுத்துள்ளனர். அதன் காரணமாக, எம்.ஜி.ஆர்., நடித்த, திருடாதே மற்றும் மலைக்கள்ளன் ஆகிய இரண்டு பெயர்களில் ஒன்றை இப்படத்திற்கு வைக்க பரிசீலிக்கப்படுகிறது.
— சினிமா பொன்னையா
அஜீத்தின் கிராமிய நடனம்!
அஜீத் தற்போது நடித்து வரும், விஸ்வாசம் படம், கிராமத்து கதையில் உருவாகி வருகிறது. அதனால், இப்படத்தில், கிராமத்து பாடல் இடம்பெற்றிருப்பதோடு, நாட்டுப்புற நடன கலைஞர்களின் உடல்மொழி அசைவை உள்வாங்கி, கிராமிய கலைஞர்களுடன் அசத்தலாக நடனமாடியுள்ளார். நாட்டுப்புற பாடல்களுக்கு பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசையமைத்துள்ளார், டி.இமான்.
— சி.பொ.,
சாயிஷாவை கவர்ந்த கிராமத்து வேடம்!
கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ள இந்தி நடிகை, சாயிஷா சாய்கல், அடுத்தபடியாக, மூன்று தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். அத்துடன், 'நவீன கால பெண்ணான நான், முதலில் கிராமத்து வேடம் என்றதும் பயந்தேன்; ஆனால், இப்போது அந்த தோற்றமே எனக்கு பிடித்து விட்டது. காரணம், இதுவரை இல்லாத அளவுக்கு உணர்வுப்பூர்வமான நடிப்பு என்னிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. அதனால், தொடர்ந்து கிராமிய கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்...' என்கிறார்.
கிடைக்காத சரக்குக் கிடைத்ததைப் போல!
— எலீசா
சமந்தாவிற்கு ஏற்பட்ட, 'டப்பிங்' ஆர்வம்!
சமந்தாவிற்கு பாடகி சின்மயிதான் தொடர்ந்து, 'டப்பிங்' கொடுத்து வந்தார். ஆனால், நடிகையர் திலகம் படத்தில் தனக்குத்தானே, 'டப்பிங்' பேசிய சமந்தா, அதன்பின், நடித்து வரும் படங்களுக்கும் தானே, 'டப்பிங்' பேசி வருகிறார். அத்துடன், 'நான் நடித்த காட்சிகளுக்கு நானே, 'டப்பிங்' பேசுவதில் இருக்கும் உயிரோட்டத்தை இப்போது தான் உணர்ந்துள்ளேன். அதனால், இனிமேல், நானே, 'டப்பிங்' பேசுவேன்...' என்கிறார். தனக்குத் தனக்கு என்றால் தாய்ச்சீலையும் பதக்குக் கொள்ளும்!
— எலீசா
வயதான வேடங்களில் பிரகாஷ்ராஜ்!
பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் சரிந்ததை அடுத்து, குணசித்திர நடிகராகியிருக்கிறார். அவ்வகையில், பிரியதர்ஷன் இயக்கிய, சில சமயங்களில் என்ற படத்தில் முதிர்ச்சியான வேடத்தில் நடித்தார். தற்போது, ராதாமோகன் இயக்கியுள்ள, 60 வயது மாநிறம் என்ற படத்தில், 60 வயது முதியவராகவே நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
ஆரம்பத்திலேயே சில அபிமான நடிகைகளுக்கு சிபாரிசு செய்து கெட்ட பெயரை சம்பாதித்தவர், மெரினா நடிகர். சமீபகாலமாக, நடிகரின் மார்க்கெட் எகிறி விட்டதால், அவருடன் கடலை போட நடிகையர் கூட்டம் படையெடுக்கிறது. ஆனால், அம்மணிகளுடன் நெருக்கம் காட்டினால், பின், நேசம் காட்ட வேண்டியிருக்கும். அதன் பலனாக, அவர்களுக்கு படங்களில் நடிக்க சிபாரிசு செய்து, மீண்டும் கெட்ட பெயர் எடுக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கும் நடிகர், வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இதெல்லாம் தேவையா என்று தன்னை துரத்தும் இளவட்ட நடிகைகளுக்கு பிடிகொடுக்காமல் எகிறி ஓடுகிறார்.
''என்னப்பா... சிவகார்த்திகேயா... என் அடுத்த படத்துல உன்ன ஒப்பந்தம் பண்ணலாம்ன்னு உன்னைத் தேடி வந்திருக்கேன்; செய்றியா?''
''என்ன இயக்குனர் சார், இப்படி கேட்டுட்டீங்க... உங்க படத்துல நடிக்க காத்திட்டிருக்கேன். ஹீரோயின் யாரா இருந்தாலும் கவலையில்லை சார். ஆனால், கிராமத்து கதைக் களம் கொண்ட படமாக இருந்தால், நிச்சயம் சூரியைத்தான் காமெடியனாக
போடணும்ன்னு கேட்டுக்கறேன்.''
''சரி... அப்படியே செய்துடலாம்!''
திருமணமே வேண்டாம்; கடைசி வரை சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறும், மாமி நடிகை, அடிக்கடி வெளிநாடுகளுக்கு, 'டூர்' அடித்து, அங்குள்ள பாய் பிரண்டுகளுடன், 'ஜாலியோ ஜிம்கானா' பாடி வருகிறார். அதேசமயம், தன் முகம், மொபைல் கேமராக்களில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக, முகமூடி அணிந்தபடியே வெளியில் தலை காட்டுகிறார்.
''ஹலோ, டைரக்டர் சார்... நான் த்ரிஷா பேசறேன்... பேய் படங்கள்ல நடிச்சு நடிச்சு அலுத்துப் போச்சு; அதிரடி வில்லி வேஷம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்... அடிச்சு துாள் கிளப்பிடறேன்!'' என்கிறார்.
சினி துளிகள்!
* விக்ரம் பிரபுவுடன், துப்பாக்கி முனை, அதர்வாவுடன், 100 ஆகிய படங்களில் நடித்து வருகிறார், ஹன்சிகா.
* நடிகை ஆனந்தி, கதையின் நாயகியாக நடிக்கும் படத்திற்கு, அலாவுதீனின் அற்புத கேமரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அவ்ளோதான்!
