தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பார்வைகள்!

பார்வைகள்!

பார்வைகள்!


PUBLISHED ON : ஆக 19, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், 68 வயதான சோமநாதன், பள்ளி மற்றும் கல்லுாரியில் படித்த தன் இரு நண்பர்களுக்காக, பாரில் காத்திருந்தார்.

மூவருமே படிப்பில் ஒரே மாதிரி தான் என்றாலும், வாழ்க்கை வெவ்வேறு விதமாக அல்லவா அமைந்து விடுகிறது...

ராமகிருஷ்ணனுக்கு சென்னை மற்றும் பெங்களூரிலும்; குமாருக்கு, பெங்களூரு மற்றும் மும்பையில் சொந்த வீடுகள் உள்ளன. அதைத்தவிர, பங்குச் சந்தையில் வரும் லாபங்கள்; இருவருக்குமே ஆண், பெண் என்று அழகான இரு பிள்ளைகள். அவர்களும், வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். ராமகிருஷ்ணனும், அவன் மனைவியும் அமெரிக்கப் பிரஜைகள் ஆகிவிட்டனர்.

சோமநாதனும் திருமணமானவர் தான்; ஒரே மகன். ஆனால், மனைவியும், மகனும் அவருடன் இல்லை. அமெரிக்காவில் இருந்தனர். அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.

நினைத்துப் பார்த்த போது, 'எப்படி, மனைவி, மகன் ஞாபகமில்லாமல், 25 ஆண்டுகளை நகர்த்தினோம்...' என்று சோமநாதனுக்கு வியப்பாக இருந்தது. 'ஒருவேளை, புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததால், தனிமையின் வெறுமை தோன்றவில்லையோ...' என்று எண்ணினார். அரசு வேலை; நல்ல சம்பளம். சென்னையில் அவருக்கென்று, 20 ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு இருந்தது.

அவர் மனைவி, குழந்தைக்கு ஐந்து வயது இருந்த போதே சொல்லி விட்டாள்... 'இனிமேல் என்னால் உங்களுடன் குடும்பம் நடத்த முடியாது...' என்று!

'உன் இஷ்டம்... நீ எப்போது போகப் போகிறாய்ன்னு ஒரு மாசம் முன்பே சொல்லிடு...' என்றார் எதுவுமே நடக்காதது போல்!

சோமநாதன் மனைவி, எம்.பில்., முடித்திருந்தாள்; புத்திசாலிப் பெண். மேலே படித்து உயரப் பறக்க வேண்டுமென்று அவளுக்கு ஆசை அதிகம். அதிலும், சிகாகோவில் இருந்த அவள் சகோதரன் வீட்டிற்கு மூன்று மாதம் போய் இருந்துவிட்டு வந்தபின், அவளுக்கு இந்தியாவின் மீது நாட்டமின்றிப் போனது.

சோமநாதனை மணக்க, அவள் சம்மதித்ததற்கு ஒரே காரணம், அவர் படிப்பு. அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் அவர் வகித்த பதவி; தாய் மட்டும் தான் இருந்தாள். அதனால், அவரை அமெரிக்காவிற்கு அழைத்து சென்று விடலாம் என்று எண்ணினாள்.

ஆனால், பிறந்த நாட்டையும், பெற்ற தாயையும் விட்டுக் கிளம்பத் தயாராக இல்லை, சோமநாதன்.

அதுவே, அவர் மனைவிக்கு மன விரிசலை ஏற்படுத்தி விட்டது. அதனால், அவரை விட்டு பிரிய முடிவெடுத்தாள்.

ஒரு மாதத்திற்கு பின், அவள், பிள்ளையுடன் கிளம்பிய போது, பேரனை அழைத்துப் போவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாள், அம்மா. அப்போதும் சோமநாதன் தான், 'குழந்தைக்கு அப்பாவை விட அம்மா முக்கியம்; இதில் நீ தலையிடாதே... எங்களுக்குத் திருமணம் நடந்ததே எதேச்சை. இந்தக் குழந்தை ஓர் ஆச்சரியம்; விட்டுவிடு...' என்று சொல்லி விட்டார்.

இன்று, அவர் மனைவியும் ஓய்வு பெற்ற ஓர் ஆங்கிலப் பேராசிரியை. அமெரிக்காவில் மகனுடன் இருக்கிறாள். எப்போதாவது போன் வரும்; கடமைக்கு இரண்டு வார்த்தை பேசுவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், சோமநாதனின் தாய் இறந்து போனதைக் கூட, அவர் தன் மனைவிக்கோ, மகனுக்கோ தெரிவிக்கவில்லை.

ஏதேச்சையாக, ஒருநாள் போனில் பேசியபோது, 'உங்க அம்மா எப்படி இருக்கிறாங்க?' என்று கேட்டாள்.

'போயாச்சு...' என்றார்.

'ஓ சாரி...' என்றாள்.

அவள் அளவுக்கு கூட, அவர் மகன், அவரிடம் பேசியது இல்லை.

சிறிது நேரத்தில் ராமகிருஷ்ணனும், குமாரும் வர, மூவரும் மது அருந்தியபடியே பல்வேறு விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.

''உனக்கு, உன் மகனைப் பார்த்துப் பேச வேண்டுமென்று தோன்றவில்லையா?'' என்று கேட்டார், ராமகிருஷ்ணன்.

உதட்டைப் பிதுக்கி, ''எனக்கு, அவர்கள் முகமே மறந்து விட்டது,'' என்றார், சிரித்தபடி!

''இதை எப்படி உன்னால் சிரித்தபடி சொல்ல முடிகிறது?'' என்றார், குமார்.

''உடன் இருக்கும் வரைதான் உறவுகள்; விலகிப் போய்விட்டால்...''

''நீயாவது, யு.எஸ்., போயிருக்கலாமே... அவர்களை பார்க்க என்றில்லாமல் சுற்றுலாவாக சென்றிருக்கலாமே,'' என்றார், ராமகிருஷ்ணன்.

''எனக்கு அவ மீது எந்த வருத்தமும் இல்ல; அவள், அவ வழியில போனாள்; நான், என் வழியில் இருக்கிறேன். இதில, பகைமை பாராட்ட என்ன இருக்கிறது...''

''அப்போ, உனக்குப் பின், உன் வீடு, பணம், காசு இவற்றை எல்லாம் யாருக்குக் கொடுக்கப் போறே...'' என்றார் குமார் வெடுக்கென்று!

''நீங்க நினைக்கிற அளவுக்கு நான் பணக்காரனில்ல; ஆனால், நிச்சயமாக உங்களுக்கு இல்ல...'' என்றார், சிரித்தபடி!

இருவர் முகத்திலும் அசடு வழிந்தது.

மூவரும் ராமகிருஷ்ணனின் காரில் வீடு திரும்புகையில், ''என்ன சோமு... உன்னை வீட்டில், 'டிராப்' பண்ணி விடலாமா...'' என்றார், குமார். பின் சீட்டில் அமர்ந்திருந்த சோமநாதனிடமிருந்து பதில் வரவில்லை.

''ஏய் உன்னைத்தான்... என்ன சாப்பிட்ட மயக்கமா?'' என்று கேட்டபடி திரும்பிய குமார் திடுக்கிட்டார்.

சீட்டில் சற்று சரிந்தவாக்கில் இருந்தார், சோமநாதன். கண்கள் திறந்திருந்தன; ஆனால், முகத்தில் எந்தவித சலனமுமில்லை.

''ராமகிருஷ்ணா... காரை நிறுத்து; சோமு ஒரு மாதிரி இருக்கான்,'' என்றார் பதற்றமாக!

ராமகிருஷ்ணன் காரை ஓரமாக நிறுத்த, பரபரப்பாக இருவரும் பின் சீட்டின் கதவைத் திறந்து பார்த்தனர். சோமநாதன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை; அவரைத் தட்டி எழுப்பினார் குமார்; ஒரு பதிலும் இல்லை.

இருவரையும் பீதி கவ்வியது.

''பக்கத்தில் ஏதாவது ஆஸ்பிடல் இருக்கிறதா பார்... மயக்கமா, இல்ல வேறேதாவது...'' என்று வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்திய குமார், ''ராமகிருஷ்ணா... இதோ, அங்கே ஒரு நர்ஸிங்ஹோம் இருக்குது,'' என்று சொல்ல, அதை நோக்கி விரைந்து, காரை செலுத்திய ராமகிருஷ்ணன், ''அவன் பர்சில் ஏதாவது எமர்ஜென்சி கான்டாக்ட் எண்கள் இருக்கிறதான்னு பார்...'' என்றார்.

சோமநாதனின் சட்டைப் பையில் இருந்து மொபைலையும், பர்சையும் எடுத்தார் குமார். பர்சில், 'எமர்ஜென்சி' என்று எழுதி, அதற்குக் கீழ் கிருபா என்ற பெயரில் ஓர் எண் இருந்தது. அடுத்ததாக, யாமினி என்ற பெயரில், மற்றொரு எண் இருந்தது.

'இவர்கள் யார்... நாம் அறியாத பெயராக இருக்கிறதே...' என்று எண்ணியபடி, கிருபா என்ற பெயரை அழுத்தி, காதில் வைத்தார், ராமகிருஷ்ணன். மூன்று ஒலிகளுக்குப் பின், ''சொல்லுங்க சார்,'' என்றது இளமையான ஓர் ஆண் குரல்!

''கிருபா இருக்காரா...''

''நான் தான் கிருபா...'' என்றதும், ''நான், சோமநாதனின் நண்பர்; திடீரென்னு அவருக்கு உடம்புக்கு முடியல...'' என்றவர், கிளினிக்கின் பெயரை சொல்லி, ''நீங்க உடனே இங்கு வர முடியுமா... எமர்ஜென்சி அழைப்பில் உங்க பேரும், மொபைல் எண்ணும் இருந்ததால் தான் கூப்பிடுறேன்,''என்றார்.

''வர்றேன் சார்,'' என்று சொல்லி, இணைப்பைத் துண்டித்தான், கிருபா.

சோமநாதனின் நாடித் துடிப்பை பிடித்துப் பார்த்த டாக்டர், ''நீங்க ரெண்டு பேரும் அவருக்கு என்ன உறவு?'' என்று கேட்டார்.

''நண்பர்கள்...'' என்றார், குமார்.

''அவர், இறந்து அரை மணி நேரமாச்சு; மாஸிவ் ஹார்ட் அட்டாக்; அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லிடுங்க,'' என்றார் எந்தவித உணர்ச்சியுமின்றி!

இருவருக்கும், இடி விழுந்தது போல் இருந்தது. சற்று முன் பேசிக் கொண்டிருந்தவன், இப்போது பிணமாக... இதுதான் வாழ்க்கையா!

குமாரும், ராமகிருஷ்ணனும் என்ன செய்வது என்று குழம்பிப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கையில் உள்ளே நுழைந்தான், ஓர் இளைஞன். ''நீங்க, சோமநாதனின் நண்பர்கள் தானே...'' என்றான் ஆங்கிலத்தில்!

''யெஸ்...''என்றார், ராமகிருஷ்ணன்.

''நான், கிருபா; என்ன ஆயிற்று?''

ராமகிருஷ்ணனும், குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின், ''சாரி... அவர் இறந்துட்டார்,'' என்று குமார் சொன்னதும், கிருபாவின் கண்கள் கலங்கியது.

''நீங்க சோமுவுக்கு என்ன வேண்டும்?'' என்றார், ராமகிருஷ்ணன்.

''நண்பன்; ஆனா, அவருக்கு எல்லாமே நான் தான்,'' என்றவன், ''அவர் எங்கே?'' என்றான்.

அதற்குள் அங்கு வந்த டாக்டர், ''ஓ... நீங்க அவருடைய மகனா... போய் பாருங்கள்... பாடியைத் தர, சில விதி முறைகள் உள்ளன,'' என்றார்.

உள்ளே சென்று, உயிரற்ற அவர் உடலைப் பார்த்த கிருபா, விசித்து விசித்து அழத் துவங்கினான். குமாருக்கும், ராமகிருஷ்ணனுக்கும் ஒன்றுமே புரியவில்லை. ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர்.

''எனக்குத் தெரிவித்ததற்கு மிக்க நன்றி; உங்கள சந்திக்கப் போவதாக நேற்று என்கிட்ட சொன்னார். முதல்ல, அவர வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம்; அவரை கடைசியாகப் பார்க்க, அவரது நண்பர்களும், மாணவர்களும் வரலாம். இனிமேல் நான் கவனித்துக் கொள்கிறேன்,'' என்றான் தெளிவான குரலில்!

''கேட்கிறேன்னு தப்பாக நினைக்காதீங்க... உங்களுக்கும், சோமுவுக்கும் என்ன சம்பந்தம்?'' என்று கேட்டார், குமார்.

''பார்வை என்று ஒரு நிறுவனம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டான் கிருபா.

தலையசைத்து, ''தெரியும்; பார்வையற்றவர்களுக்கான இல்லம். அவர்களுக்கு அங்கு படிப்பு, இருக்க இடம் மற்றும் வேலை என்று பல உதவிகள் செய்து வருவதாகக் கேள்விப்பட்டு இருக்கேன்,'' என்றார், ராமகிருஷ்ணன்.

''அதேதான்; நான் முதல்ல, அங்கதான் வேலை செய்தேன்; இப்போது, ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நான், அங்கு வேலை செய்த காலத்தில் இருந்தே இவரைத் தெரியும். இவர், அந்த நிறுவனத்திற்குப் பல உதவிகள் செய்ததுடன், வாரம் ஒருநாள் அங்கு வந்து பார்வையற்றவர்களுக்கு புத்தகங்களைப் படித்துக் காட்டுவார். அவர்கள் சொல்வதை எழுதுவார். எனக்கும், மேலே படிக்க உதவி செய்திருக்கிறார். நான், இன்று நல்ல நிலையில் இருப்பது அவரால் தான்,'' என்றான், சோகமான குரலில்!

'கட்டிய மனைவியையும், சொந்த மகனையும் உதறி, இப்படி என்ன ஒரு பந்தம்...' என்ற கேள்வி, குமார் மற்றும் ராமகிருஷ்ணன் இருவர் மனதிலும் எழுந்தது.

''இவருடைய மனைவி, மகனைப் பற்றி தெரியுமா...'' என்று துவங்கினார், குமார்.

''தெரியும்; ஆனா, அவங்களுடன், இவருக்கு எந்த உறவும், தொடர்பும் இல்லை. அதனால், அவங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்ல. அதை அவரே என்னிடம் சொல்லி இருக்கிறார்.''

ராமகிருஷ்ணனுக்கு இது வினோதமாகத் தோன்றியது.

''அப்படின்னா, நீங்கதான் இவரது வாரிசா?'' என்றார் சற்றுக் கடுமையான குரலில்!

அவரை உற்றுப் பார்த்த கிருபா, ''கடைசியாக, அவர் விருப்பப்படி காரியங்களைச் செய்ய வேண்டியது தான் வாரிசின் வேலை என்றால், அந்த உரிமையை அவர் எனக்கு தான் தந்திருக்கிறார். அவரது வீடு என்றோ விற்கப்பட்டு, அந்தப் பணம், 'பார்வை'க்கு போய்விட்டது. மற்ற எல்லா விஷயங்களையும் நான்தான் கவனிச்சுக்கிறேன். வாழும் உயிருக்கு, கண் பார்வை மிகவும் அவசியம் என்பது அவரது கொள்கை. மற்ற ஊனங்களை விட பார்வை இன்றி இருப்பது தான் மிகவும் கொடுமை என்பது அவர் கருத்து. ஏனெனில், மிருகங்கள், பட்சிகள், சிறு சிறு பிராணிகளுக்குக் கூட பார்வை உண்டு என்பதை அவர் உணர்ந்திருந்தார்.''

''இப்போது, எங்கே அவரைக் கொண்டு செல்வது... காரியங்கள யார் செய்வர்?'' என்றார், குமார்.

''அவர் வீட்டுக்குத்தான்; அதில், அவர் வாடகை கொடுத்துட்டு இருக்கார். காரியங்கள், அதில், அவருக்கு நம்பிக்கை கிடையாது; அவரைப் பார்ப்பவர்கள் அங்கு வந்து அஞ்சலி செலுத்தியதும், அவர் உடலை, போரூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லுாரிக்கு, கண்களை எடுத்த பின் தானம் செய்யும்படி எழுதி வைத்து இருக்கிறார்,'' என்றான் கிருபா.

ராமகிருஷ்ணனும், குமாரும் அயர்ந்து போய் நின்றனர். அப்போது, 'டக் டக்' என்ற ஒரு கைத்தடி ஒலிக்க, சிவப்பாக, ஒல்லியாக ஒரு பெண், வேறொரு பெண்ணுடன் அவர்களை நெருங்கி வந்தவள்,

''கிருபா... சோமநாதன் சாருக்கு என்னாச்சு...'' என்றாள். கிருபா அவள் கைகளைப் பற்றி அழத் துவங்கினான்.

''சோமு சார், நம்மை விட்டுப் போயிட்டார்,'' என்றான் அழுகைக்கு நடுவில்!

அந்த இளம் பெண்ணின் உதடுகள் துடித்தன; லேசான விம்மலுடன், அவள் பார்வையற்ற கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

பின் ராமகிருஷ்ணன், குமார் பக்கம் திரும்பி, ''சார்... இது யாமினி; சோமு சார் மிகவும் பிரியம் வைத்திருக்கும் பெண். 'பார்வை' நிறுவனத்தில் வேலை செய்கிறாள். நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்; தாய் - தந்தை கிடையாது. ஒரு விபத்தில் இவள் பெற்றோர் இறந்து போக, இவள் பார்வை இழந்து, 'பார்வை' நிறுவனத்திற்கு வந்தவள்,'' என்றவன், '' யாமினி... சார் இவர்களுடன் தான் இருந்திருக்கிறார்,'' என்றான், கிருபா.

யாமினி பதில் தராமல் அவர்கள் இருந்த திசை நோக்கிக் கை கூப்பினாள். ஏனென்று சொல்ல முடியாமல் ராமகிருஷ்ணன், குமார் இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது.

''உங்களுக்குப் பணம் ஏதாவது...'' என்று ராமகிருஷ்ணன் பேசத் துவங்கியதும், இடைமறித்த கிருபா, ''எதுவும் தேவை இல்ல சார்... அவர் எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்,'' என்றவன், ''வேறு சடங்குகள் எதுவும் இல்லாததால், நீங்க, உங்க வேலைகளைப் பார்க்கச் செல்லலாம்; மிக்க நன்றி,'' என்றான்.

குமாருக்கும், ராமகிருஷ்ணனுக்கும் பேச வார்த்தைகள் இல்லை.

காரில் வீடு திரும்பும் போது,''சே... என்ன இவன்... சொந்த மனைவியையும், பிள்ளையையும் விட்டுட்டு எவர்களையோ நண்பர்கள்ன்னு சொல்லி சொந்தம் கொண்டாட விட்டு, பணத்தை தானம் பண்ணி, என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான்...'' என்றார், குமார்.

''வாஸ்தவந்தான்... எனக்குத் தெரிந்து அவனிடம் இருந்த ஒரே ஒரு பழக்கம், மது அருந்துவது தான். வேறு பெண் கூட அவன் வாழ்க்கையில் வரவில்லை போலிருக்கிறது,'' என்றார், ராமகிருஷ்ணன்.

''சரி... நான் அடுத்த வாரம் அமெரிக்கா போகிறேன்; என் மகன், அங்கே வீடு வாங்கி இருக்கிறான்,'' என்றார், ராமகிருஷ்ணன்.

''பெங்களூரில் புதுசா ஒரு வீடு வாங்கியிருக்கேன் அந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம் பண்ண வேண்டும்,'' என்றார், குமார்.

''என்னவோ... சோமு, வாழ்க்கைய, பார்த்த பார்வை சரியில்ல; என்ன பார்வையோ...'' என்றார், ராமகிருஷ்ணன்.

''என்ன செய்ய... பார்வைகள் பலவிதம்,'' என்றார் குமார், சமாதானமாக!

தேவவிரதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us