PUBLISHED ON : அக் 07, 2018

களமிறங்கும் இளையராஜா!
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரின் நலனுக்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா. தற்போது, அவருக்கு, 75 வயதாவதால், 'இளையராஜா - 75' என்று, அந்த இசை நிகழ்ச்சிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், இசைத்துறையில், இளையராஜா செய்த சாதனைக்காக, பாராட்டு விழாவும் நடத்துகின்றனர்.
— சினிமா பொன்னையா
விஜய்யின் மகனும் இறக்குமதியாகிறார்!
விஜய்யின் மகன் சஞ்சய், விஜய் நடித்த, வேட்டைக்காரன் படத்தில், ஒரு பாடலில் நடித்தார். அதையடுத்து, எந்த படத்திலும் நடிக்காத அவர், இன்னும் சில ஆண்டுகளில், நாயகனாக சினிமாவில், 'என்ட்ரி' கொடுக்கப் போகிறார். தற்போது, 18 வயதாகும் சஞ்சய்க்கு, சினிமாவுக்கு தேவையான நடனம், சண்டை என அனைத்து கலைகளிலும் பயிற்சி கொடுத்து வருகின்றனர். மேலும், மெர்சல் படத்திற்கு பின், 'இளைய தளபதி' என்ற தன் பட்டத்தை, 'தளபதி' என்று மாற்றிய விஜய், 'இளைய தளபதி' பட்டத்தை, மகனுக்கு கொடுக்கப் போவதாகவும், கூறுகிறார்.
— சி.பொ.,
'ரொமான்ஸ்' செய்ய விரும்பாத, நயன்தாரா!
ஜெயம்ரவி நடித்த, தனி ஒருவன் படத்தில், 'ரொமான்டிக்' நாயகியாக நடித்த, நயன்தாரா, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில், 'டூயட்' பாடும் நாயகியாக நடிக்க மறுத்தார். அதனால், சாயிஷாவை, 'ரொமான்டிக்' நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார், இயக்குனர் மோகன்ராஜா. ஆன போதும், அப்படத்தில், தடயவியல் நிபுணர் வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைத்துள்ளார். அதோடு, நயன்தாராவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு, அவரது கேரக்டரையும் இன்னொரு, 'ஹீரோ' போன்று வெயிட்டான ரோலாக உருவாக்கியிருக்கிறார், மோகன்ராஜா. ஆளுக்குத் தகுந்த சொட்டுக் கொடுக்கிறது!
— எலீசா
சில்க் ஸ்மிதாவின் கடைசி படம்!
நடிகர் விணுசக்ரவர்த்தியுடன், வண்டிச்சக்கரம் என்ற படத்தில் அறிமுகமான, சில்க் ஸ்மிதா, 1980 - 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மர்மமான முறையில் இறந்து விட்டார். இந்நிலையில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில், இந்தியில், த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற படம் தயாரானது. அதையடுத்து, சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த, ராக தாளங்கள் என்ற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஜாதி பிரச்னையில் உருவான இப்படத்தை வெளியிட, 'சென்சார்போர்டு' அப்போது தடை விதித்தது. இப்போது, சில மாற்றங்களுடன் படத்தை வெளியிடும் வேலைகள் நடக்கிறது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
பிரபல நடிகரின் வாரிசு நடிகை, தற்போது, ஓரிரு படங்கள் தவிர, மற்றவற்றில் இரண்டாம் நாயகியாக தான் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனபோதும், படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால், தான், பிரபல நடிகரின் மகள் என்பதை முன் வைத்து, நடிகை பண்ணும் பந்தாக்களுக்கு அளவே இல்லை. முக்கியமாக, படப்பிடிப்பு தளங்களில், ஹீரோக்களிடம், ஹீரோயினிகளை பேச விடாமல், அவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் அமர்ந்து, கடலை போடுகிறார்.
'அடேய்... சின்ன பையா... ஆயுத பூஜை வருது... கடையில ஒட்டடை அடிக்கணும். நம்ம வரலட்சுமி அக்கா வூட்டாண்ட போய், ஏணி வாங்கிட்டு வாடா...' என்றார், அண்ணாச்சி.
மூனுஷா நடித்த சில படங்கள், தொடர் தோல்விகளை சந்தித்ததால், அதை முன் வைத்து, அவரது சம்பளத்தை படிப்படியாக குறைத்து வந்தனர், தயாரிப்பாளர்கள். ஆனால், தற்சமயம், உச்ச நடிகருடன், 'டூயட்' பாடும் வாய்ப்பு கிடைத்ததால், உற்சாகமானார், நடிகை. இந்த தருணத்தை பயன்படுத்தி, மறுபடியும் படக்கூலியை பன்மடங்கு உயர்த்தி, தயாரிப்பாளர்களுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்து விட்டார்.
'ஒழுங்கா ஸ்கூலுக்கு போகாம... த்ரிஷா மாதிரி அலம்பல் பண்ணிட்டு... கிளம்பு, கிளம்பு...' என்றார், அம்மா.
சினி துளிகள்!
* விஜய் நடித்த,சர்கார் படத்தில், முதலமைச்சரின் மகள் வேடத்தில் நடித்துள்ளார், வரலட்சுமி.
* மிஷ்கின் இயக்கும், சைக்கோ என்ற படத்தில், நாயகனாக நடிக்கிறார், உதயநிதி ஸ்டாலின்.
அவ்ளோதான்!
