
பண்ணையார் பரமசிவம் வீட்டிலிருந்த வயசான பசு மாடு, மிகவும் நோயுற்று, அரை உயிரோடு இருந்தது. பெரிய பண்ணையார் காலமானபின், அவர் மகன் பரமசிவத்தின் மேற்பார்வையில் எல்லா நிர்வாகமும் இருந்தன. அவர் மனைவி தான், தற்போது அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருக்கிறார்.
வயதான பசுவை காப்பாற்ற, அவருக்கு மனம் இல்லை. போதாததற்கு, வீட்டில் பசு மாடு இறந்து போனால், அது குடும்பத்திற்கு ஆகாது என்று, எப்படியாவது அந்த பசு மாட்டை இறைச்சிக்காக விற்று விட சொல்லி இருந்தார், அவள் உறவினர் ஒருவர்.
அதனால், ஊழியரிடம் சொல்லி, உடனடியாக அந்த பசு மாட்டை, இறைச்சி கடைக்கு விற்க, கணவரிடம் வற்புறுத்தினாள்.
பண்ணையாருக்கோ முதலில் அந்த யோசனை பிடிக்கவில்லை. அவர்களது குடும்பத்தில், தாத்தா காலத்திலிருந்தே, வயதான மாடுகளை, சாகும் வரை வைத்து காப்பாற்றுவது தான் வழக்கம். இறந்த மாடுகளை, அவர்களின் பண்ணை நிலத்திலேயே புதைத்து விடுவர்.
மனைவியின் பிடிவாதத்தால், 'இத்தனை நாட்கள் காப்பாற்றி, முடிந்தவரை வைத்தியமும் பார்த்தாகி விட்டது. இனி, அதன் காலம் முடியப்போகும் நிலையில், மனைவி சொல்படி, அதை விற்று விடலாம்...' என, யோசிக்கலானார்.
பண்ணையாருக்கு, 10 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. பண்ணையாரும், அவர் மனைவியும் ஆசைபட்டபடி, அவர்களுக்கு ஆண் வாரிசு உருவாகவில்லை. ஏற்கனவே, ஆண் குழந்தை இல்லை என்ற வருத்தத்தில் இருந்தவளிடம், அவள் உறவினர், துாபம் போட, அந்த பசு மாட்டை, அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டும் என அவள் மனதில் பதிந்து போனது.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதுபோல், கொஞ்சம் கொஞ்சமாக, பரமசிவமும், மனைவியின் விருப்பப்படியே, பசு மாட்டை விலை பேச, தரகர் ஒருவரிடம் சொல்லி விட்டார். இந்த விஷயம், பரமசிவத்தின் தாயார் பாகீரதி அம்மாளுக்கு தெரிந்தவுடன், துடித்துப் போனார்.
உடனே, மகனை கூப்பிட்டு கேட்டார்.
அப்போது, மருமகளும் கூடவே வந்து, மாமியாரும், கணவரும் பேசுவதை கேட்டு, மாமியாரிடம், ''உங்களின் காலம் முடிந்து விட்டது. உங்களுக்கு வாரிசு என சொல்ல, ஒரு பிள்ளை இருக்கார். எங்களுக்கு அப்படி சொல்ல ஒரு ஆண் பிள்ளை இல்லையே... பண்ணை வீட்டில், பசு மாடு இறந்து போனால், வீட்டில் இருப்பவர்களுக்கு ஆகாது என, உறவினர்கள் சொல்லி இருக்கின்றனர்.
''ஏற்கனவே, உங்கள் குடும்பத்தில், நிறைய மாடுகளை சாகும் வரை வைத்துக் கொண்டிருந்து, அவை இறந்த பின், உங்கள் நிலத்திலேயே அடக்கம் செய்து கொண்டிருந்தீர்கள்.
''அந்த பாவமோ, என்னவோ, எங்களுக்கு ஆண் வாரிசு இல்லை. ஆண் குழந்தை வேண்டுமென, நாங்களும், விரதங்கள், கோவில்களில் பரிகாரங்கள் செய்தும், ஒரு பலனும் இல்லை.
''நான் முடிவாக சொல்லி விட்டேன், உங்கள் பிள்ளையிடம். 'இனிமேல், இந்த வீட்டில் எந்த மாடும் சாகும் வரை வைத்துக் கொள்ளக் கூடாதென... அதனால், இனிமேல் இந்த மாதிரி விஷயங்களிலும் நீங்கள் தலையிடாதீர்கள். உங்களுக்கு வேண்டியது கிடைக்கிறதல்லவா... அதோடு திருப்தி படுங்கள்,'' என, தயவு தாட்சண்யமின்றி, மிகவும் கண்டிப்பாக சொல்லி விட்டாள்.
மனைவியின் பேச்சுக்கு மாறாக மகனும் ஒன்றும் சொல்லாமல், மவுனமாக இருந்ததைப் பார்த்த தாயாருக்கு, மனம் மிகவும் உடைந்து போயிற்று. இனிமேல், தான் என்ன சொன்னாலும், மகனின் மனதில் ஏறாது எனவும் புரிந்து கொண்டாள்.
அடுத்த இரண்டு நாட்களில், ஒரு இறைச்சி கடைக்காரரை அழைத்து வந்தார், தரகர். பரமசிவமும், அவர் மனைவியும், அவர்களுடன் தொழுவத்திற்கு போய் பசு மாட்டை, விலை பேசி முடித்தனர்.
அவர்களும், ஞாயிறு காலை, பசு மாட்டை ஓட்டிச் செல்வதாகவும், அன்றே பசு மாட்டிற்கான முழு கிரயத்தையும் கொடுத்து விடுவதாக சொல்லி சென்றனர்.
பசு மாட்டை விலை பேசி விட்டனர் என தெரிந்ததிலிருந்து, பாகீரதி அம்மாளுக்கு, சாப்பிட பிடிக்கவில்லை. தன் வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், கர்ப்பமாக இருந்த பெண்களுக்கும், வியாதியுடன் சரியாக ஆகாரம் சாப்பிட முடியாமல் இருந்த அத்தனை பேர்களுக்கும், தன் ரத்தத்தை பாலாக்கி கொடுத்த பசுவை நினைத்து பார்த்தார்.
தலைமுறை தலைமுறையாக, கொஞ்சமும் வஞ்சமின்றி தங்களுக்கு உழைத்த பசு மாடுகளை, சாகும் வரை மனிதாபிமானத்தோடு வைத்து காப்பாற்றி வந்த தன் கணவர் மற்றும் மாமனாரின் நல்ல குணம், எப்படி அவர்களின் வாரிசான தன் மகனுக்கு இல்லாமல் போய் விட்டது எனவும் தாளாத வருத்தத்தில் இருந்தாள்.
தன்னுடைய எந்த ஒரு சொல்லுக்கும், இனி இந்த வீட்டில் மரியாதை இருக்காது எனவும் தெரிந்து கொண்டதால், தன் வேதனையையும், வருத்தத்தையும் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தாள்.
மருமகள் கையால் சாப்பிடவும் மனம் இல்லை. அதனால், சாப்பிடாமலேயே நாட்களை கடத்தினாள். மாமியார் சாப்பிடவில்லை என தெரிந்ததும், அதற்கான காரணம் நன்றாக புரிந்தாலும், மருமகள் தன் அதிகாரத்தை சிறிதும் விட்டுக்கொடுக்க மனமில்லாமல், மாமியாரை பற்றி கவலைப்படவில்லை. அவர் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பதையும், கணவருக்கு சொல்லவில்லை.
சனிக்கிழமை இரவு, வீட்டில் எல்லாரும் துாங்கிய பின், பாகீரதி அம்மாள், மெதுவாக எழுந்து, பின்புறத்தில் இருந்த தொழுவத்தில், மாட்டுடனேயே தரையில் படுத்துக் கொண்டாள். அவளின் கைகள் பசு மாட்டை மிக வாத்சல்யத்துடன் தடவியபடி இருந்தன. தன் சேயை, தாய் அணைப்பதைப் போல, அந்த பசுவை அணைத்து, படுத்திருந்தாள்.
காலையில், தரகரும், மாட்டை விலை பேசியவனும், மாட்டை ஓட்டிச் செல்ல, வண்டியுடன் தொழுவத்திற்குள் நுழைந்தனர். அங்கே, பசுவை கட்டிக்கொண்டு, பாகீரதி அம்மாள் படுத்திருப்பதை பார்த்து, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
மெதுவாக பாகீரதியிடம் சென்று, ''அம்மா... தயவுசெய்து எழுந்திருங்கள்... நாங்கள் மாட்டை ஓட்டிச் செல்ல வந்திருக்கோம்,'' என சொல்லிப் பார்த்தனர். அவர்களை திரும்பி பார்த்த பாகீரத அம்மாள், பதிலேதும் சொல்லாமல், தன் இரு கைகளாலும் பசுவை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, கண்களில் நீர் வழிய படுத்திருந்தார்.
நிலைமையை புரிந்து கொண்டவர்கள், வீட்டிற்குள் சென்று, சின்ன பண்ணையாரை அழைத்து, தொழுவத்தில் அம்மா படுத்திருப்பதையும், பசு மாட்டை ஓட்டிச் செல்ல விடாமல் தடுக்கிறார் என்றும், கூறினர்.
தொழுவத்திற்கு வந்த பரமசிவம், அம்மாவை சில வினாடிகள் பார்த்தபடி நின்றார். அவர் மனதிலும், தன்னுடைய செயல் எத்தனை பாவமானது என்ற எண்ணமும் ஓடியது. அதேசமயம் அங்கு வந்த அவரின் மனைவியை பார்த்தவுடன், மனைவியின் பக்கம் மனம் சாய்ந்தது. அதனால், அம்மாவின் அருகில் போய், ''அம்மா... ஏன் இப்படி படுத்துகிறாய்... இத்தனை நாட்கள் காப்பாற்றியதை மறந்து விட்டாயா... அந்த பசு, அதிக நாட்கள் இருக்காது. வீட்டில், மாடு சாகக் கூடாதென்கிற காரணத்தால் தானே, அதை விற்க, முடிவு செய்தேன். எங்களின் மனதை புரிந்து கொள்... எழுந்திரு... அவர்கள் மாட்டை ஓட்டிச் செல்லட்டும்,'' என சொல்லி, மெதுவாக அம்மாவின் கைகளை பசு மாட்டிடமிருந்து பிரிக்கலானார்.
கைகளை பிடித்து, தன்னை எழுப்ப வந்த மகனை பார்த்து, ''நீ விற்ற மாட்டை கொண்டு போக வேண்டாம் என, நான் சொல்லவில்லை. அத்துடன், எனக்கும் ஒரு விலையை கொடுத்துட்டு, என்னையும் அதனுடன் எடுத்துக் கொண்டு போகட்டும்...
''நீ, என் பாலை குடித்தது, 18 மாதங்கள் தான். ஆனால், கடந்த, இரு ஆண்டுக்கு முன் வரை, இந்த மாட்டின் பாலைத்தானே நீயும், உன் மனைவியும் குடித்து வளர்ந்தீர்கள்...
''இந்த வாயில்லா ஜீவன், தன் ஆயுளில், தன்னால் முடிந்த மட்டும், கொஞ்சமும் வஞ்சனை இல்லாமல், தன் ரத்தத்தை, உங்களுக்கு பாலாக கொடுத்ததே, அதை எப்படி நீங்கள் மறந்தீர்கள்... நமக்கு என்ன, இந்த பசு மாட்டை விற்றுதான் ஜீவிக்கணும்ன்னு இருக்கா... உன் தகப்பனாரும், பாட்டனாரும் சேர்த்து வைத்த சொத்து, 10 தலைமுறைக்கு போதுமே...
''ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ ஆண்டவனாக பார்த்து கொடுப்பது தானே... பெண் என்றால் என்ன குறை... உனக்கு, ஒரு ஆண் குழந்தை வேண்டுமென்றால், தாராளமாக, ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாமே; நம் வம்சத்தில், உன் அப்பாவே, தத்தாக வந்தவர் தானே! வம்சம் வளராமலா போயிற்று...
''காலத்திற்கேற்ப எத்தனையோ மாற்றங்களை ஏற்றுக்கொண்ட உங்களுக்கு, ஏன் இப்படி ஒரு மூட நம்பிக்கை. நம் வீட்டில் வளர்ந்தவைகள், நம் குடும்பத்தை சேர்ந்தவைகள் தானே... அப்படி இருக்கும்போது, வீட்டில் மாடு இறந்தால், அது நல்லதல்ல என்கிற மூட நம்பிக்கை உனக்கு எப்படி வந்தது...
''நானும் ஒரு வகையில், அந்த பசுவை போலத்தானே... என்னாலும், இனி உழைக்க முடியாது... வயதாகி விட்டது... நானும் ஒருநாள் கட்டாயம் சாகப் போகிறவள் தானே... எதற்கு உன் வீட்டில் சாகணும்... என்னையும் ஒரு விலை பேசி, அவனுக்கே விற்று, நிம்மதியாக இரு... ஆண்டவனின் அருள் இருந்தால், உனக்கு ஒரு ஆண் வாரிசு வரட்டும்,'' என்றாள்.
மாட்டை வாங்க வந்தவரையும், தரகரையும் பார்த்து, ''என்னப்பா செல்லையா... நீ எந்த மாட்டை, இறைச்சிக்காக விலை பேசி விற்க தரகனாக வந்தாயோ... அந்த மாட்டுப் பாலைத்தானே உன் கடைசி குழந்தை குடித்து வளர்ந்தது. குழந்தை பிறந்தவுடனே, பிரசவத்தில் ஏற்பட்ட பலகீனத்தால், உன் மனைவி இறந்து விட்டாளே... அன்றிலிருந்து உன் பையன் வளர்ந்தது, இந்த மாட்டின் பாலால் தானே... அப்படி, உன் மகனுக்கு தாயான பசுவை கொன்று இறைச்சிக்காக விற்க உனக்கு எப்படி மனசு வந்தது...
''ஒரு வேளை, உன் மனைவி உடல்நிலை சரியில்லாது, சாகும் நிலையில் இருந்தால், உனக்கு தரகு கமிஷன் கிடைக்கும் என்பதற்காக, உன் மனைவியை கசாப்பு கடைக்கு விற்க துணிவாயா... படித்த பணக்காரனுக்கு தான் மனதில் ஈரமில்லை, நன்றி இல்லையென்றால், ஏழையான உனக்கு கல் மனசா...
''தரகு வியாபாரத்திற்காக எத்தனையோ நியாயமான வழிகள் இருக்கே... அதையெல்லாம் விட்டு விட்டு, உனக்கு ஒரு தொல்லையும் தராத, இம்மாதிரி வாயில்லா ஜீவன்களை எதற்கப்பா விற்று, தரகு கமிஷன் வாங்குகிறாய்... இப்படி பாவங்களை செய்து, சம்பாதிப்பது, உனக்கும், உன் குடும்பத்துக்கும் ஒட்டுமா... யோசித்து பாரப்பா...
''மாயாண்டி... உன்னையும் தான் கேட்கிறேன்... உனக்கு ஞாபகம் இல்லையோ என்னவோ, உன் மனைவி காச நோய் கண்டு, சத்தான ஆகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டபோது, நான் என்ன செய்தேன்... உன் மனைவிக்கு என, தினமும் தனியாக ஒரு சொம்பு நிறைய இந்த மாட்டின் பாலைத்தானே கொடுத்தேன். அதை கொடுத்துதானே உன் மனைவியின் நோயை சீராக்கினாய்... அந்த பசுவை, எப்படியப்பா வெட்டி, இறைச்சி கடைக்கு கொடுக்க, உனக்கு மனசு வந்தது.
''உனக்கு எதையாவது வெட்டிதான் பிழைக்க வேண்டுமென்றால், ஊரில் எத்தனையோ பட்டு போன மரங்கள் இருக்கே, அவற்றையெல்லாம் வெட்டி, விறகாக விற்றாலும், குடும்பம் நடத்த வருமானம் வருமே... எந்த பாவத்தையும் நீ செய்ய வேண்டாம்!
''தரிசு நிலத்தை வெட்டி சீராக்கினால், எத்தனையோ பயிர் பச்சைகளை பயிரிட்டு, நாட்டின் விவசாயத்தை பெருக்கி, மக்களுக்கு உணவு கொடுக்கலாமே...
''இப்படி, புண்ணிய சேவைகள் எத்தனையோ இருக்கே... அதையெல்லாம் விட்டுட்டு, வாயில்லாத, மனிதர்களுக்கு காலம் முழுதும் உழைக்கிற இந்த பரிதாபப்பட்ட ஜீவன்களை வெட்டும் பாவத் தொழில் உனக்கு ஏனப்பா... தயவுசெய்து என் பேச்சை கேளுங்கள்... உங்களால் உருவாக்க முடியாத ஒரு உயிரை, பறிக்கவும், உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
''எல்லா உயிர்களுக்கும், பிறப்பும், இறப்பும் ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்டவை... அப்படியிருக்க, நீங்கள் யார், உயிருடன் இருக்கும் இந்த ஜீவன்களை கொலை செய்ய... என் பேச்சு உங்களுக்கு ஏறாது... ஆனாலும், என் கடமை, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்.''
கடைசியாக, பிள்ளையை பார்த்து, ''நீங்கள் வாழ்கிற இந்த வீட்டில், பசு மாடு சாக வேண்டாம். எனக்காக, என் தாயார் வீட்டு சீதனமாக வந்த நிலமும், அங்கு ஒரு சின்ன குடிசையும் இருக்கு. என்னையும், என் மாட்டையும் அங்கே அனுப்பி விடு. எங்கள் காலம் முடியும் மட்டும் நாங்கள் அங்கேயே இருக்கோம். பகவான் அருள் இருந்தால், என் காலத்திலேயே இந்த பசு, பகவானிடம் சென்று விட்டால், நானே, என் நிலத்திலேயே இதை அடக்கம் பண்ணி விடுவேன்.
''அப்படி இல்லையென்றால், மாயாண்டி, செல்லையா உங்கள் இருவருக்கும் ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து, இந்த மாட்டை, என் நிலத்திலேயே அடக்கம் செய்து விடுங்கள்... இறைச்சிக்காக வெட்ட வேண்டாம்... அப்படி செய்தால், என்னை வெட்டிய பாவம் உங்களுக்கு தான்... தெய்வத்திற்கு பயந்து வாழுங்கள்,'' என்று சொல்லி, வண்டியில், ஏற சென்றார்.
பாகீரதி அம்மாளின் தீர்மானத்தை கேட்டவுடன், மாயாண்டி, தன் கையிலிருந்த அறுவாளை கீழே போட்டு, பாகீரதியின் கால்களில் விழுந்து, ''அம்மா... எனக்கு புத்தி வந்துவிட்டது... இனிமேல், இந்த வாயில்லா ஜீவன்களை வெட்டும் ஈன பிழைப்பு பிழைக்க மாட்டேன்... சத்தியம்!'' என சொல்லி, ''வாருங்கள் அம்மா... நானும், உங்களுடன் அந்த குடிசைக்கே வந்து விடுகிறேன். இனிமேல், பட்டு போன முள் மரங்களையும், நிலத்தையுமே வெட்டுவதற்கு என் கைகள் எழும்,'' என, கூறினான்.
பரமசிவத்திடம், ''ஐயா... அம்மாவின் பண்ணை வீட்டிற்கு, மாட்டை கூட்டிக்கொண்டு போகட்டுமா?'' என, கேட்டான்.
நடந்தவைகளைப் பார்த்த பரமசிவம், கதறியபடி, ''அம்மா... என்னை மன்னித்து விடம்மா... எனக்கு புத்தி வந்தது... என் முன்னோர் செய்யாத பாவச் செயலை செய்யத் துணிந்த நான், மிகவும் பாவியம்மா... இந்த குடும்பத்தில் பிறந்தவன் செய்த செயல் இல்லையம்மா... எத்தகைய பாவம் செய்ய இருந்த என்னை தடுத்தாட்கொண்ட தெய்வம் நீ,'' என, சொல்லியபடியே, பாகீரதி அம்மாவின் கையை பிடித்து, மெதுவாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என புரியாமல், பசு மாடும் அங்கிருந்த புல்லையும், வைக்கோலையும் மெதுவாக அசை போட ஆரம்பித்தது.
ஒரு ஜீவனை கொன்ற பாவத்திலிருந்து எல்லாரும் மீண்டனர்.
உயிர்களிடம் அன்பு செலுத்துவதும், ஆண்டவனிடம் இருந்து கிடைக்கும், ஆசி தான்!
ஜெயரமணி
இயற்பெயர்: ஜெயலட்சுமி,
வயது: 77, ஊர்: பெங்களூரு,
படிப்பு: பள்ளி இறுதி வகுப்பு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் மேல்நிலை தேர்ச்சி பெற்று, சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்.
கடந்த, 1972 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது படைப்புகள், பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. இரு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் கலந்து, பரிசு வாங்க வேண்டும் என்பது, இவரது விருப்பம். இந்த முறை, இரண்டாம் பரிசு பெற்றுள்ளது, மகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறார்.