
அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
மறைந்த முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் திரைப்படமாகிறது. இந்தி நடிகர் அனில்கபூர், அப்துல் கலாம் வேடத்தில் நடிக்கிறார். அப்துல் கலாம் நடத்திய, 'பொக்ரான்' அணுகுண்டு சோதனை குறித்த ரகசியங்களை, 'வெப்பன்ஸ் ஆப் பீஸ்' என்ற பெயரில், புத்தகமாக எழுதிய, ராஜ் செங்கப்பா என்பவர், இந்த படத்திற்கான, 'ஸ்கிரிப்ட்' வேலைகளை செய்து வருகிறார். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த, 'பொக்ரான்' அணுகுண்டு சோதனையின் முக்கிய அம்சங்கள், இந்த படத்தில் இடம் பெறுகிறது.
— சினிமா பொன்னையா
ஆச்சர்யப்படுத்தும், நயன்தாரா!
ஐரா என்ற படத்தில், முதன் முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் நயன்தாரா, இரண்டு வேடங்களுக்கும் இடையே நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டும் என, ரொம்பவே மெனக்கெடுகிறார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு வரும்போது, 'ரிகர்சல்' எடுத்து வந்த போதும், காட்சிகளை படமாக்குவதில் அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார். அதோடு, முதல் நாள் படமாக்கப்பட்ட காட்சியில் திருப்தி இல்லையென்றால், மறுநாள், மீண்டும் அந்த காட்சியில் நடித்துக் கொடுக்கிறார். நயன்தாராவின் இந்த மெனக்கெடலை ஆச்சர்யமாக பார்க்கின்றனர், படக்குழுவினர். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை!
— எலீசா
தனுஷின் நீண்ட நாள் கனவு!
மாமனார் ரஜினியுடன் இணைந்து, ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்பது, தனுஷின் நீண்டகால கனவாக இருந்து வருகிறது. அதனால், ரஜினியை வைத்து, தான் தயாரித்த, காலா படத்தில் நடிக்க நினைத்தார். ஆனால், அந்த படத்தில் தனுஷுக்கு ஏற்ற வேடம் இல்லாததால், 'இன்னொரு படத்தில் பார்த்துக் கொள்ளலாம்...' என்று சொன்னார், ரஜினி. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாசை தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில், தான் நடிக்கும் படத்தில், 'தனுஷையும் மனதில் வைத்து, கதை பண்ணுங்கள்...' என, கூறியுள்ளார், ரஜினி. ஆக, ஒரே படத்தில், மாமனாரும், மருமகனும் இணையப் போகின்றனர்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
* நாட்டாமையின் வாரிசு, வில்லியாக நடித்த இரண்டு படங்களும், அவருக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்து விட்டதால், பெரிய நடிகையர் அளவுக்கு, படக்கூலியை தடாலடியாக உயர்த்தி விட்டுள்ளார். அதைக்கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்களிடம், 'உடம்ப காட்டும் நடிகையருக்கு கொட்டி கொடுக்குற உங்களுக்கு, திறமையை காட்டுற நடிகையருக்கு கொடுக்கிறதுக்கு கசக்குதா-...' என, கேட்கிறார் நடிகை.
'வரலட்சுமி அக்கா... இங்க வாங்கக்கா... நாள் முழுக்க கழனியிலே இறங்கி வேலை செஞ்சிருக்கிறோம். பண்ணையார் கூலி தராம, 'நாளைக்கு பார்த்துக்கலாம்...' என்கிறார். என்ன, ஏது என்று கேளுங்கக்கா...' என்றாள், செவந்தி.
* உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும், 'ஸ்பைடர்' நடிகை, தன் உடம்பையும் கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். அதன் காரணமாக, 'அவுட்டோர்' சென்றாலும், உடற்பயிற்சியில் ஈடுபடும் நடிகை, அங்கு முகாமிட்டிருக்கும் இளவட்ட நடிகர்களின் கண்ணுக்கு எட்டும் துாரத்திலேயே, 'ஜிம்னாஸ்டிக்' பயிற்சிகளை மேற்கொண்டு, தன் உடற்கட்டை கூட்டி, அவர்களை தெறிக்க விடுகிறார்.
'குளத்துல நீச்சல் பழக வந்தமா, போனமான்னு இருக்கணும். அதவிட்டு, ரகுல்பிரீத்தி மாதிரி இளவட்ட பசங்களை உசுப்பேத்தற வேலையெல்லாம் வெச்சுக்கக்கூடாது...' என்று எச்சரித்தார், பயிற்சியாளர், சிவகாமி.
சினி துளிகள்!
* கன்னிராசி படத்தில், விமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார், வரலட்சுமி.
* தமிழில், ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார், ரகுல்பிரீத் சிங்.
* விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ஜன., 20ம் தேதி, மும்பையில் நடக்கும், மாரத்தான் போட்டியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார், நடிகை காஜல் அகர்வால்.
* இந்தியன் - 2 படத்தில், கமலுடன் சிம்பு, துல்கர் சல்மான் ஆகியோரும், முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
* காமெடியன் யோகிபாபு, 'பிசி'யாகி விட்டதால், எப்போது, 'கால்ஷீட்' கொடுக்கிறாரோ, அப்போது, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகின்றனர்.
* விக்ரமின் மகன், துருவ் விக்ரம் நடித்துள்ள, வர்மா படம், வருகிற, காதலர் தினத்தன்று வெளியாகிறது.
* சமுத்திரகனி நடித்த, சாட்டை படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த சாட்டை என்ற பெயரில் உருவாகிறது.
* ரஜினி நடித்த, பேட்ட படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், அடுத்தபடியாக கமலின், இந்தியன் - 2 படத்திற்கும் இசையமைக்கிறார்.
* சிம்பா மற்றும் காளிதாஸ் படங்களைத் தொடர்ந்து, நடுவன் என்ற படத்தில் நடிக்கிறார், பரத். காமெடியன், ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து வரும், எல்.கே.ஜி., என்ற படம், அரசியல் நையாண்டி கதையில் தயாராகி வருகிறது.
அவ்ளோதான்!

