
ஒருவரின் தியாகம், பலரை வாழ வைக்கும். இதை விளக்கும் வரலாறு இது:
'உத்தமர்கள் பல பேர் இருந்திருக்கின்றனர். அவர்களைப் போல நம்மால் இருக்க முடிகிறதோ, இல்லையோ; அப்படிப்பட்டவர்கள் எல்லாம் அவதரித்த பூமி இது... அந்த உத்தமர்களை நினைத்தால் கூடப் போதும். மனது தானே துாய்மையாகி விடும்...' என்பார், காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.
அப்படிப்பட்ட தியாக சீலர் ஒருவரின், வரலாற்றைத் தரிசிக்கலாம் வாருங்கள்!
கருடனுக்கும், நாகர்களுக்கும் ஓர் ஒப்பந்தம் இருந்தது. அதன்படி, ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு நாக குமாரன் வந்து, கருடனுக்குப் பலியாக வேண்டும்.
அந்தாண்டு; சங்கசூடன் என்னும் நாக குமாரனின் முறை வந்தது; விடை பெற வேண்டியவர்களிடம் விடை பெற்ற சங்கசூடன், அனுமதி பெற வேண்டியவர்களிடம் அனுமதி பெற்று புறப்பட்டான்.
சங்கசூடனின் தாயார், தன் மகன் பின்னாலேயே அழுது புலம்பியபடி வந்து கொண்டிருந்தார். அவரது புலம்பல், பார்த்தவர்களின் மனங்களைப் பிழிந்தது.
வருகிற வழியில், மலைய மலையில் வசித்து வந்த ஜீமூதவாகன்- - மலையவதி தம்பதியை சந்தித்தான், சங்கசூடன். தற்செயலாக, சங்கசூடனுடன் பேசத் துவங்கிய ஜீமூதவாகன், நடந்ததை அறிந்தார். அவர் மனம் என்னவோ செய்தது.
'சங்கசூடனா... மறுக்காதே, உனக்குப் பதிலாக, நான் போய் கருடனுக்கு உணவாகிறேன்...' என்று அழுத்தமாகச் சொல்லி, சங்கசூடனின் போர்வையை வாங்கி போர்த்தி புறப்பட்டார்.
சங்கசூடனின் போர்வையைப் போர்த்தியபடி வந்த ஜீமூதவாகனை, சங்கசூடன் என்றே நினைத்தது கருடன்; தன் வழக்கப்படி கொத்திக் கொத்தி உண்ணத் துவங்கியது. அது சாப்பிட வசதியாக, ஜீமூதவாகன், தன் உடம்பின் எல்லா பாகங்களையும் திருப்பித் திருப்பிக் காட்டி, 'நன்றாக உண்ணுங்கள்...' என்றார்.
கருடனுக்கு அது புதுமையாக இருக்கவே, சந்தேகம் தட்டியது. உடனே உண்பதை நிறுத்திய கருடன், சில வினாடிகளில் உண்மையை உணர்ந்தது; ஜீமூதவாகனை பாராட்டி, 'பெருந்தன்மை உள்ளவனே... உன் செயல் என்னை, என்னவோ செய்து விட்டது. உன் மனம் மகிழும்படியாக, என்ன வேண்டுமோ கேள், செய்கிறேன்...' என்று பரிவோடு கேட்டது.
நெகிழ்ந்த ஜீமூதவாகன், 'கருடனே... எனக்கு, என் உடம்பைப் பற்றிய கவலை கிடையாது. நீங்கள் எனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால், இன்று முதல் பாம்புகளை உண்ணக் கூடாது. இதுவே நான் கேட்கும் வரம்...' என, வேண்டினார்.
கருடன் மனம் மகிழ்ந்தது; உடனே போய் அமிர்தத்தை எடுத்து வந்து, ஜீமூதவாகன் மேல் பொழிந்தது. ஜீமூதவாகன் உடல், காயங்கள் நீங்கிப் பழையபடி ஆனது. அதன் பின் கருடன், 'ஜீமூதவாகனா... உன் எண்ணப்படியே, இன்று முதல் நான் பாம்புகளை உண்ண மாட்டேன்...' என்றபடியே சென்றது.
தங்கள் நலனுக்காக, தன் உயிரையே பலியிடத் துணிந்த ஜீமூதவாகனைப் பாராட்டியது, நாகக் கூட்டம்.
இவ்வாறு, அடுத்தவர் நலனுக்காகத் தங்கள் வாழ்வையே இழக்கத் துணிந்த உத்தமர்களை மறவாமல் இருப்போம்... இன்னல்கள் இல்லாமல் போகும்!
பி.என்.பரசுராமன்
ஆலய அதிசயங்கள்!
குளித்தலை மற்றும் மணப்பாறை வழியில் இருப்பது, ஐவர் மலை என்ற, ரத்தினகிரி மலை. இந்த மலை மேல், காகங்கள் பறப்பதில்லை.

