
தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, கொலம்பியா பல்கலைகழகத்தில், வரும், 23, 2௪ம் தேதிகளில், தலித் திரைப்படம் மற்றும் கலாசார விழா நடக்கிறது. இதில், இந்தியாவில் பல மொழிகளில் தயாரான, தலித் மக்கள் பிரச்னையை சொல்லும் படங்கள் திரையிடப்படுகின்றன. அந்த வகையில், தமிழில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்த, காலா படம் திரையிடப்படுகிறது. அதோடு, பா.ரஞ்சித் தயாரித்த, பரியேறும் பெருமாள் மற்றும் கக்கூஸ் ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.
— சினிமா பொன்னையா
பிரமாண்ட இயக்குனர் படத்தில், வாரிசு நடிகர்கள்!
விஜய் நடிப்பில், நண்பன், விக்ரம் நடிப்பில், அந்நியன் மற்றும் ஐ ஆகிய படங்களை இயக்கியவர், ஷங்கர். இவர், இந்தியன் - 2 படத்தை அடுத்து, தான் ஏற்கனவே இயக்கிய, பாய்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்த படத்தில், விஜய்யின் மகன் சஞ்சய், விக்ரம் மகன், துருவ் விக்ரம் ஆகிய இருவரையும் நடிக்க வைக்க, முடிவு செய்திருக்கிறார். அதோடு, 'விஜய், விக்ரமை இணைத்து, படமெடுக்க நினைத்தேன், அது நடக்கவில்லை. அதனால், இப்போது அவர்களின் மகன்களை இணைத்து படமெடுக்கிறேன்...' என்கிறார், ஷங்கர்.
— சி.பொ.,
தொடை அழகியான, நிக்கி கல்ராணி!
தமிழ் சினிமாவில், 'தொடையழகி' என்று பெயரெடுத்தவர், ரம்பா. அவருக்கு பின், அந்த இடம் காலியாக இருந்தது. இந்நிலையில், சார்லி சாப்ளின் - 2 படத்தில், தன் தொடையழகை காண்பித்து நடித்ததை அடுத்து, 'தொடையழகி' என்று அழைக்கப்படுகிறார், நிக்கி கல்ராணி. அதோடு, இந்த பாணியை தொடர்ந்து கடைப்பிடிக்க நினைக்கும் நடிகை, தொடையழகை இன்னும் அழகுபடுத்தும் நோக்கத்தில், 'ஜிம்' சென்று, அதற்கு தேவையான, 'ஸ்பெஷல்' உடற்பயிற்சிகளை எடுத்து வருகிறார். போக்கு அற்ற மத்தளம் கொட்டினதாம்; பூண்டி தெய்வம் வந்து ஆடினதாம்!
— எலீசா
மலையாள படங்களில், தமிழ் நடிகர்கள்!
சமீபகாலமாக, சில தமிழ் நடிகர்கள், மலையாள படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், மோகன்லால் நடித்த, வில்லன் என்ற மலையாள படத்தில், விஷால் நடித்ததைத் தொடர்ந்து, திலீப் நடித்த, கம்மர சம்பவம் என்ற படத்தில், சித்தார்த் நடித்தார். தற்போது, மோகன்லாலின், அரபிக் கடலின்டே சிம்ஹம் படத்தில் அர்ஜுன், பிரபு மற்றும் பிரபுதேவா ஆகியோர் நடிக்கின்றனர். மம்மூட்டியின், மதுர ராஜா படத்தில், ஜெய்யும், பிக்காசோ என்ற மலையாள படத்தில், கழுகு படத்தில் நடித்த கிருஷ்ணாவும் நடித்து வருகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புபூனை!
* ஆபாச படத்தில் நடித்து, தன், 'இமேஜை' கெடுத்துக் கொண்டதை நினைத்து, 'பீல்' பண்ணிக் கொண்டிருக்கிறார், முன்னாள் நவரச நாயகனின் வாரிசு நடிகர். அதனால், இப்போது, படங்களில், தன்னுடன் நடிக்கும் நடிகை, கவர்ச்சிகரமாக நடித்தாலும், அது கூட தன், 'இமேஜை' பாதிக்கும் என்று நினைக்கிறார். இதையடுத்து, 'இனிமேல் குடும்பப்பாங்கான கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்று, 'ரூட்'டை மாற்றியிருக்கிறார். நடிகரின் இந்த திடீர் மாற்றம், 'கமர்ஷியல்' இயக்குனர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
'ஏண்டா கவுதம்... இப்படி மரத்தடியில் புத்தர் மாதிரி உட்கார்ந்திருக்க. தொழில்ல, லாப - நஷ்டம் ஏற்படறது சகஜம் தான். அதுக்காக, இடிந்து போகாதே! எதனால் நஷ்டம் வந்ததுன்னு ஆராய்ந்து, புது வழியில் போகப் பாரு... வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிப்ப...' என்றார், அப்பா.
* காதல் கணவரை விவாகரத்து செய்த, பால் நடிகை, இளவட்ட நடிகர்களுடன், 'ஸ்டார் ஓட்டல்'களில், 'டேரா' போட்டு, நடனம், 'பார்ட்டி' என்று அட்டகாசம் செய்து வந்தார். இதனால், அம்மணியின் பெயர், 'டேமேஜ்' ஆனது. வெளியிடங்களில் ஆண் நண்பர்களை சந்தித்தால்தானே பிரச்னை என்று, இப்போது, அபிமானிகளை, கேரள தேசத்துக்கே அழைத்து சென்று, 'விருந்தோம்பல்' நடத்தி வருகிறார், நடிகை.
'ஏண்டி அமலா... சமூக சேவை பல செய்திருக்க... கண் முன் நடந்த எத்தனையோ தவறுகளை தட்டிக் கேட்டிருக்க... இவ்வளவு நல்லவளான உனக்கு, எதுக்குடி அந்த காலி பசங்களோட சகவாசம்... உடனே விட்டுடு...' என்று கண்டித்தாள், தோழி.
சினி துளிகள்!
* ராட்சசன் படத்தை அடுத்து, அதோ அந்த பறவை போல மற்றும் ஆடை படங்களில் நடித்து வருகிறார், அமலாபால்.
*மிஸ்டர் சந்திரமவுலி படத்தை அடுத்து, தேவராட்டம் மற்றும் செல்லப் பிள்ளை ஆகிய படங்களில் நடிக்கிறார், கவுதம் கார்த்திக்.
அவ்ளோதான்!