PUBLISHED ON : பிப் 17, 2019

இதிகாச புராணங்களில் வரும் சம்பவங்களை நாம் நம்புகிறோமோ, இல்லையோ, அவையெல்லாம் உண்மை.
நாம் நம்பாததால், வியாசருக்கோ, வால்மீகிக்கோ எந்தக் குறைவும் கிடையாது. நடைமுறை நிகழ்வுகள் பல, இதிகாச புராண நிகழ்வுகளை விட, மிகவும் அற்புதமாக இருக்கும். இதிகாச புராணங்கள் உண்மையென, இன்றும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
நடந்த வரலாறு இது:
யுகங்களைத் தாண்டியும், அரிச்சந்திரன் புகழ் இன்றும் நிற்பது போல, இந்த வரலாறும் நிற்கும்; நிற்க வேண்டும்.
வங்காளத்தில் ஒரு கிராமம். அங்கே, ஓர் ஏழை வேதியர் வசித்து வந்தார். மிகவும் நேர்மையான அவர், ஸ்ரீராமரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்; தான் வைத்திருக்கும் ஸ்ரீராம விக்கிரகத்திற்கு, தினமும் வழிபாடு செய்யாமல் சாப்பிட மாட்டார். இந்த பக்தரின் மனைவியும், இவருக்கு அனுகூலமாக இருந்தார். அத்தம்பதிக்கு, ஓர் ஆண், பெண் என, இரு குழந்தைகள்.
அந்த கிராமத்து ஜமீன்தார், ஒருநாள், பக்தரை கூப்பிட்டு வரச்சொன்னார். அவர் வந்ததும், 'ஐயா... நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்...' என்றார், ஜமீன்தார்.
பதறிய பக்தர், 'ஏழையான நான் போய், உங்களுக்கு எப்படி உதவ முடியும்...' எனக் கேட்டார்.
'நீங்கள் பொய்யே சொல்ல மாட்டீர்; சத்தியசந்தர் என்பது, அனைவருக்கும் தெரியும். நீங்கள் என்ன சொன்னாலும், இந்த ஊர் நம்பும். அதனால் தான், உங்கள் உதவியை கேட்கிறேன்...' என்றார், ஜமீன்தார்.
பக்தர் புரியாமல் திகைக்க, தொடர்ந்தார் ஜமீன்தார்...
'எனக்கெதிராக ஒரு வழக்கு நடக்கிறது. அதில், நீங்கள் என் பக்கம் சேர்ந்து,
எனக்காக ஒரு சின்ன பொய் சொல்ல வேண்டும். அவ்வளவு தான்...' என முடித்தார், ஜமீன்தார்.
அதுவரை அடக்கமாக இருந்த பக்தர், கம்பீரமாக நிமிர்ந்து, 'பொய்யில், சிறிய பொய்யாவது; பெரிய பொய்யாவது...' என்றார்.
ஜமீன்தாருக்கு, 'பக்'கென்றது. 'என்னைக் கண்டாலே பணிந்து, நடுங்கி, ஒடுங்கி இருக்க வேண்டிய ஏழை, கம்பீரமாக என் முன்னால் நின்று பேசுவதா...' என்று நினைத்தார்.
ஆனாலும், 'ஐயா... நீர் மட்டும் எனக்காகப் பொய் சாட்சி சொல்லாவிட்டால், உங்கள் வீட்டையும், கொஞ்ச நஞ்சம் இருக்கும் நிலத்தையும் பிடுங்கி, பொய் வழக்கு தொடுத்து, உண்டு, இல்லை என்று ஆக்கி விடுவேன்...' என, கடுமையாக மிரட்டினார்.
சற்றும் அசராமல், 'ஐயா... நீங்கள் என்ன செய்தாலும் சரி, உயிரே போவதாக இருந்தாலும், பொய் சொல்ல மாட்டேன்...' என்று அழுத்தமாக சொல்லி விட்டார், பக்தர்.
எனவே, பக்தரின் மீது பொய் வழக்கு தொடுத்து, அவரை குடும்பத்தோடு வீதியில் நிற்க வைத்தார், ஜமீன்தார்.
அணுவளவும் கலங்கவில்லை, பக்தர்; தாம் பூஜை செய்து வரும் ஸ்ரீராம விக்கிரகத்துடன், மனைவி மக்களையும் அழைத்து, ஊரை விட்டே வெளியேறி விட்டார்.
அரிச்சந்திரன், சத்தியசந்தர் என்பது தெரியும்; ஆனால், அது கலியுக வரலாறு அல்ல. தீமைகளே மலிந்து, நிறைந்து இருப்பதாகச் சொல்லப்படும் கலியுகத்தில் தான், மேலே கூறிய வரலாறு நடந்தது.
சத்தியசந்தரான அந்த பக்தரின் மகன் தான், உலகமே வியக்கும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். நம்மால் அப்படியெல்லாம் இருக்க முடிகிறதோ, இல்லையோ... உத்தமர்களான பரமஹம்சர்கள் வாழ்ந்த,- வாழும் பூமி இது என்பதை, தினமும் நினைத்தால் கூட போதும்; நலம் விளையும்!
பி.என்.பரசுராமன்
ஆலய அதிசயங்கள்!
கோவிலின் வடகிழக்கு பகுதியில் தான், நவக்கிரக பிரதிஷ்டை அமைய வேண்டும் என்று, சிற்ப சாஸ்திரம் கூறுகிறது