
தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில், பிரபலங்கள்!
லோக்சபா தேர்தலில், ஓட்டு பதிவின் முக்கியத்துவத்தை உணர்த்தி, 100 சதவீதம் மக்களை ஓட்டளிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. அதையடுத்து, அமிதாப்பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், ஷாரூக்கான், சல்மான் கான், அமீர்கான், அக் ஷய்குமார், மோகன்லால், தீபிகா படுகோனே மற்றும் அனுஷ்கா சர்மா என, பல திரை பிரபலங்களுக்கு, 'டுவிட்டரில்' அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, ஓட்டளிக்கும் மக்களுக்கு ஊக்கமளிக்க, தாங்கள் தயாராக இருப்பதாக, அனைவருமே பிரதமருக்கு,'ரீ டுவிட்' செய்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
இடியாப்ப சிக்கலில், யோகிபாபு!
தற்போதைய முன்னணி காமெடியனான, யோகிபாபு, ஒரே நேரத்தில், 20 படங்களில் நடித்து வருகிறார். இதில், தர்மபிரபு மற்றும் ஜாம்பி ஆகிய படங்களில், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்நிலையில், ரஜினியின், 166வது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், உடனே, 'கால்ஷீட்' கொடுத்தார். ஆனால், அவர்கள், 'ஏப்ரல் மாதம் படப்பிடிப்புக்கு வரவேண்டும்...' என்றதும், சிக்கிக் கொண்டார். காரணம், அதே தேதிகளில் நடிக்க, பல படங்களுக்கு ஏற்கனவே, 'கால்ஷீட்' கொடுத்துள்ளார். இதனால், ரஜினி படத்திற்காக, மற்ற படங்களுக்கு கொடுத்த, 'கால்ஷீட்'டை மாற்றினால், பல தயாரிப்பாளர்களை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், ரஜினி படத்தில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறார்.
— சி.பொ.,
'சீன்' போட்ட நடிகையை, துாக்கிய, விஷால்!
விஷால் நடித்து வரும், அயோக்யா படத்தில், ஒரு பாடலுக்கு, முதலில், சன்னி லியோன், கவர்ச்சி நடனமாடுவதாக இருந்தது. ஆனால், அவர் கேட்ட சம்பளம், கதாநாயகியையே மிஞ்சுவதாக இருந்ததால், அவரை நீக்கி, விக்ரம் - வேதா பட நாயகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் பேசினார், விஷால். ஆனால் அவரோ, 'நான் இப்போது அஜீத்தின், நேர்கொண்ட பார்வை படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். நான் எப்படி கவர்ச்சி நடனமாடுவது...' என்று பெரிய அளவில், 'சீன்' போட்டிருக்கிறார். இதனால் கடுப்பான, விஷால், அவரையும் கடாசிவிட்டு, சிலம்பாட்டம் படத்தில், சிம்புவுடன் நடித்த, சனாகானை அந்த பாட்டுக்கு, ஒப்பந்தம் செய்து விட்டார்.
— சி.பொ.,
காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சி!
இந்தியன் - 2 படத்தில், கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், தேடி வந்த இரண்டு தெலுங்கு படங்களை திருப்பி அனுப்பினார், காஜல் அகர்வால். ஆனால், லோக்சபா தேர்தல் வேலைகளில், கமல் இறங்கி விட்டதால், இந்தியன் - 2 படப்பிடிப்பை, சில மாதங்களுக்கு தள்ளி வைத்தனர். இதையடுத்து, அவசரகதியில் திருப்பி அனுப்பிய தெலுங்கு கம்பெனிகளை தொடர்பு கொண்டபோது, அந்த படங்கள், மற்ற நடிகையரின் கைக்கு சென்று விட்டதாக தகவல் வந்தது. இதனால், 'ஒரு படத்தை நம்பி, தேடி வந்த இரண்டு படங்களை இழந்து விட்டேனே...' என்று புலம்புகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* அகர்வால் நடிகையின் பட வாய்ப்புகளை அபகரித்து வருகிறார், அடங்கமறு நாயகி. இதனால், புதிய படங்கள் கையிருப்பு இல்லாமல் தடுமாறி வரும் அகர்வால் நடிகை, சமீபத்தில் ஒரு படப்பிடிப்பு தளத்தில், அடங்கமறு நடிகையிடம், 'என்னுடன் நடிக்கும் கதாநாயகர்களை கைக்குள் போட்டு, 'மார்க்கெட்'டை, அபகரித்து வருகிறாயே...' என்று எகிறி பேச, இரண்டு அம்மணிகளுக்கும் இடையே குடுமிபுடி சண்டையாகி விட்டதாம். நீண்டநேர மோதலுக்குப் பின், அம்மணிகளை பிரித்து விட்டிருக்கின்றனர், படக்குழுவினர்.
'ஸ்கூலுக்கு விடுமுறை விட்டாலும் விட்டாங்க... உங்க சண்டையை தீர்த்து வைக்கவே நேரம் சரியாயிருக்கு... நீ ஒரு புத்தகத்தை எடுத்து படி... அவ வேறு புத்தகத்தை எடுத்து படிக்கட்டும். அவ படிக்கும் புத்தகமே வேணும்ன்னு எதுக்குடி, ராஷியும், காஜலும் அடித்துக் கொள்வது போல் சண்டை போடறீங்க...' என்றார், அம்மா.
* சுள்ளான் நடிகருக்குள்ளும், ஒரு இயக்குனர் இருப்பதால், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களின் கதைகளை பிரித்து மேய்ந்து விடுகிறார். இதனால், கதையை பூ மாலையாக எடுத்து வருவோர், திரும்பும்போது, பூவே இல்லாமல் நாரோடு தான் திரும்புகின்றனர். அந்த அளவுக்கு, கருத்து சொல்கிறேன் என, கதைகளை கந்தலாக்கி விடுகிறார், நடிகர். இதனால், புது வரவு இயக்குனர்கள், நடிகரின் பெயரை சொன்னாலே, மிரண்டு ஓடுகின்றனர்.
'தம்பி... நான் இந்த மெக்கானிக் தொழிலில் ஊறியவன். எந்த வகையான வாகனமா இருந்தாலும் பிரிச்சு மேய்ஞ்சுடுவேன். எடுபிடி வேலை செய்யிற, தனுஷ் பையனையே நான் எதையும் தொட விடறதில்லை. அப்பப்ப கடைக்கு வந்து போற உன்னை உள்ளே விடுவேனா... அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு போட்டுட்டு போயிட்டா... எனக்குதானே கூடுதல் வேலை. வேணாம் ராஜா, நீ வேறு கடையை பார்த்துக்கோ...' என்றார், கடை முதலாளி.
சினி துளிகள்!
* இணைய பக்கத்தில் நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார், அமலாபால்.
* தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு எடையை குறைத்து, அழகை மெருகேற்றி உள்ளார், ராஷி கண்ணா
* தனுஷ் நடித்து வரும், அசுரன் படம், வெக்கை என்ற நாவலை தழுவி உருவாகிறது.
அவ்ளோதான்!

